சித்தா சமாஜின் கம்யூன் லைஃப்!
சித்தா சமாஜின் கம்யூன் லைஃப்! - ச.அன்பரசு
இந்தியாவில் ஆன்மிக ஆனந்தத்தை பெறவும் கர்மங்களை
கரைத்து வீடு பேறு அடைவதற்கான லட்சியத்தை அடைய பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மடாலயங்கள்
முன்னர் தொடங்கப்பட்டன. இன்று அவற்றில் மிகச்சிலவே இயங்கிவருகின்றன.
கேரளாவின் கோழிக்கோட்டிலுள்ள வடகரையில் இயங்கிவரும் சித்தா சமாஜமும்
அதில் ஒன்று. இன்றும் மக்களின் ஆதரவுடன் முந்நூறுக்கும் மேற்பட்ட
துறவிகள் ஆன்மிக வாழ்க்கையை லயம் பிறழாமல் வாழ்ந்து வருகின்றனர்.
கேரளாவில் நான்கு, தமிழ்நாட்டில் ஒன்று என கிளைகளைக் கொண்ட சித்தா சமாஜத்தில் அப்படியென்ன ஸ்பெஷல்?
ஜாதி,மதம்,கடவுள் பின்பற்றும்
நெருக்கடி கிடையாது என்பதோடு விருப்பத்தேர்வான பாலுறவும் சமாஜத்தின் வாழ்வில் முக்கிய
அம்சம். இறைவனை அடையும் லட்சியத்தில் ஆணிவேர் போல உறுதியாக உள்ள
துறவிகள் தாங்கள் பங்கேற்கும் ஸ்பெஷல் பிரார்த்தனை கூட்டத்தில் நிர்வாணமாக பங்கேற்கிறார்கள்.
பொதுவான சமூகத்தில் மாற்று சமுதாயமாக மலர்ந்துள்ள சித்தா சமாஜ துறவிகளை
இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்,
தொன்மையான கம்யூனிஸ்ட்டுகள் என குறிப்பிட்டுள்ளார்.
சமாஜத்தின் டிசைன்!
96 வயதான நாலுகட்டு டிசைனிலுள்ள கட்டிடத்தின்
இரு வாசல்களுக்கும் செக்யூரிட்டிகள் கிடையாது. மாடிகளிலுள்ள டஜன்
தங்கும் அறைகளோடு, பிராத்தனைக்கான திறந்தவெளி கூடமும் இங்குண்டு.
60 ஏக்கரில் பரந்து விரிந்த சமாஜத்தின் நிலத்தில் உணவிற்கென காய்கறிகளும்,
மருத்துவ சிகிச்சைகளுக்கென மூலிகைகளும் விளைவிக்கப்படுகின்றன.
சமாஜத்தின் செயல்பாடு, தனிநபர் நன்கொடைகள் மற்றும்
மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் வழியாக பெறப்படும் கட்டணங்களின் மூலம் தொய்வின்றி
நடைபெறுகிறது.
சமாஜத்தின் இரண்டாவது வாசல் மக்கள் மற்றும் சுற்றுலா
பயணிகளுக்காக தினசரி திறந்து மூடப்படுகிறது. இங்குள்ள ஹாஸ்டலில்
வெளியூர் பக்தர்கள் தங்கிக்கொள்ள அனுமதிக்கிறார்கள். வலதுபுறமுள்ள
பாதையில் கோயில் அமைப்பில் பெரும் தூண்கள் கொண்ட இடம், சமாஜத்தை
தொடங்கியவரான சிவானந்தாவுக்கானது. இங்கு எந்த வித சடங்குகளும்
செய்ய அனுமதி கிடையாது.
அருளாற்றலின் தொடக்கம்!
முதலில் போலீஸ்காரராக பணியாற்றத் தொடங்கிய சிவானந்தா, வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு ஊசிமுனை நெருக்கடிகளால் தன்னைப் பற்றிய தீவிரத் தேடல்களைத்
தொடங்கினார். தேடலின் முடிவில் பெற்ற ஞானத்தை மக்களுக்கு பகிர,
சித்தா சமாஜத்தை தொடங்கினார். ஜாதி,மதம் மூடநம்பிக்கைகளற்ற,சோஷியலிச யோகி என குரு சிவானந்தாவை
இங்குள்ள கல்வெட்டுகள் பாராட்டி உச்சிமுகர்கின்றன.
பிரார்த்தனையில்
நிர்வாணமாக ஈடுபடுவது, இயற்கையானது என்று சிவானந்தா நம்பியதுதான்
பிரணாயம் எனும் சடங்குக்கு முக்கிய காரணம். இங்குள்ள பொருட்களை
தங்கியுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என தனியுடைமையை மறுத்த சிவானந்தா,
தன் சிந்தனைகளை தொகுத்து 'சித்தா வேதம்'
என்ற நூலாக தொகுத்தார். ஐந்தாவது வேதம் இது என்று சூளுரைத்த சிவானந்தாவின் எழுத்தில் சோஷியலிச
சமுதாயத்தின் நம்பிக்கை ஒளிவீசுவது ஆச்சரியம்.
சுதந்திர விதிகள்!
இங்குள்ள ஆண்,பெண் இருபாலரும்
விரும்பினால் உடலுறவு கொள்ளலாம். தனியுடைமை மறுப்பு விதிப்படி,உறவு கொண்டவரையும் அவருக்கு பிறக்கும் பிள்ளையையும் சொந்தம் கொண்டாட முடியாது.
பிள்ளைகளின் சமாஜத்தின் சொத்தாக 16 வயது வரை வளர்க்கப்படுவார்கள்.
பின்னர் அவர்களின் சொந்த விருப்பத்தின்படி வாழ்க்கையை வாழ சமாஜம் அனுமதிக்கிறது.
இயற்கையே குழந்தைகளுக்கு தாய் என்பதோடு, சிவானந்தாவின்
எஸ் இனிஷியல் பிள்ளைகளின் பெயரில் இணைக்கப்படுகிறது. கம்யூனில்
பிறந்து இங்கேயே வாழ்ந்துவரும் தனஞ்செயனிடம் பேசினோம். "நாங்கள் சிறையில் வாழ்வதாக மக்கள் சிலர் நினைக்கலாம். ஆனால் சிறையில் மாட்டிக்கொண்டது அவர்கள்தான்" என
புன்னகையுடன் பேசுகிறார். சித்தா வேத நூலைக் கற்ற சித்தா வித்யார்த்தி
எனும் பயிற்சியாளர்கள்,சுற்றுலா பயணிகள் சித்தா சமாஜத்திற்கு
அடிக்கடி விசிட் அடிக்கிறார்கள்.
கர்மயோகி பணிகள்!
தினசரி சமாஜத்தின் பணிகள் வேலை, தியானம், தூக்கம் என மூன்று பிரிவாக எட்டு மணிநேரங்களாக
வரையறுக்கப்பட்டுள்ளன. காய்கறி உணவுகளை சாப்பிடும் இத்துறவிகளுக்கான
பிரார்த்தனை கூட்டத்தில் மக்களுக்கு பர்மிஷன் கிடையாது. துறவிகள்
தாம் அணிந்திருக்கும் ஒற்றை முண்டுவையும் களைந்து நிர்வாணமாவது அந்நிகழ்வில்தான்.
ஆண் மற்றும் பெண் இருவரும் பாலுறவு தேர்வை அங்கு நிகழ்த்துவதும் சாதாரண
நிகழ்வு. "இயற்கையில் செக்ஸ் என்பது இயல்பான ஒன்று.
இருபாலினத்தவரின் விருப்பப்படி நிகழும் உறவில் வெட்கப்பட என்ன இருக்கிறது?"
என்கிறார் தனஞ்செயன். இங்குள்ள பெண்களுக்கு பணிகள்
விருப்பத்தேர்வு என்றாலும், பெரும்பாலும் சமையல்,சுத்தம் செய்யும் பணிகளை செய்து வருகிறார்கள். கற்பதும்
கற்பிப்பதும் ஒருவரே எனும் முறையில் வாழ்வின் அடிப்படைகளை தானே கற்பது இயல்பான கற்றல்முறையாக
இங்குள்ள சிறுவர்களுக்கு வளர்த்தெடுக்கப்படுகிறது. தனஞ்செயன்
கம்ப்யூட்டர் இயக்கவும்,வாகனங்களை ஓட்டவும் கற்றது அப்படித்தான்.
இங்குள்ள வரலாற்று தகவல்கள்,புகைப்படங்கள் அயல்மனிதர்களுக்கு
காட்டப்படுவதில்லை. தேவைக்கு உலகுடன் தொடர்புகொண்டு ஆன்மிக அனுபவத்தை
அடைவது இன்றை நுகர்வு யுகத்திலும் சிலருக்கேனும் சாத்தியமாவது அதிசய நிகழ்வேதான்.
ரெடி டூ தியானம்!
Osho International
Meditation Resort, Pune
சர்ச்சை குரு ரஜ்னீஷ் தொடங்கிய தியான மையம். உலகை வீடாக கருதும் புதிய மனிதனுக்கான காஸ்ட்லி இடம். கருப்பு மார்பிள் தரை,உயர மரங்கள் என கேரண்டியான ஞானச்சூழல்.
காலை 10 மணி தொடங்கி தினசரி 10 தியான வகுப்புகள் உண்டு. நீச்சல் குளம்,ஸ்பா,கஃபே என பைவ்ஸ்டார் சொகுசு உண்டு. பௌர்ணமி நாட்களில் இசை,படம் என களைகட்டுகிறது.
ஹெச்ஐவி/எய்ட்ஸ் டெஸ்ட்டில் பாஸ் ஆனால் மையத்தில்
கேட் திறக்கும். குழந்தைளுக்கு அனுமதியில்லை.
Auroville,
Pondicherry
அரவிந்தர்,மீரா அல்ஃபாஸா என இருவரின் ஐடியாவில் உருவான
பல்வேறு கலாச்சார மனிதர்கள் வாழும் கம்யூன் அமைப்பு. 50 நாடுகளைச்
சேர்ந்த 2,400 மனிதர்கள் வாழும் இடம் இது. 12 பூங்காக்கள் சூழ அமைந்துள்ள மாத்ரிமந்திர் நம் பிறப்பை குறியீடாக கொண்டது.
மௌனமாக நம் சுயத்தை கவனிப்பதே இங்கு தியானம். இன்டர்நெட்
வசதியும் உண்டு. அனுமதி இலவசம். ஆரோவில்லில்
தங்கியிருக்க மாதவாடகை உண்டு. பெரும்பாலும் ஆராய்ச்சிக்காக
இங்கு வந்து தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகம்.
The Art
of Living International Centre, Bengaluru
உலகம் அமைதிபெற மனஅழுத்தக்காரர்களிடம் காசு வாங்கி அவர்களின் சோர்வு பிளஸ்
பர்ஸின் கனம் குறைக்கும் தியான அமைப்பு.பஞ்சகிரி
மலையில் 65 ஏக்கரில் யோகா,தியான
பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.மையத்தில் தன்னார்வமாக
ஆபீஸ்பாய் டூ கூட்டிப்பெருக்கும் வேலைவரை செய்து வெஜ் உணவுகளை தின்று, ஸ்ட்ரெஸ் குறைக்கும் வாய்பை வழங்குகிறார் குரு ஸ்ரீ ரவிசங்கர். சத்சங்க குத்தாட்டமும் இங்கு சூப்பர் ஸ்பெஷல்.
எட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் புக் செய்து குருவின் ஆசியைப் பெறலாம்.
Vipassana
International Academy, Igatpuri
கோபம்,வெறுப்பு,அறியாமை அகற்றும்
லட்சியம் கொண்ட அமைப்பை யு பா கின்,எஸ்என்.கோயங்கா ஆகிய இருவரும் தொடங்கினார்கள்.ஒரே விதிதான்.
அரசு நம்மிடம் எதிர்பார்ப்பதுதான். பேசக்கூடாது.
அதிகாலை 4 மணியிலிருந்து தொடங்கும் பத்துநாள்
வகுப்பில் சில வார்த்தைகளை தவிர்த்து விபாசனா டீச்சரிடமும் மாட்லாடக்கூடாது.
தீவிர மன,உடல்நல பிரச்னை உள்ளவர்கள் தவிர்த்து
அனைவரும் ஆன்லைனில் அப்ளை செய்து கப்சிப் ஆகலாம்.
Krishnamurti
Foundation, Chennai
பாதையற்ற நிலமே உண்மை என்னும் குளோபல் தத்துவத்தை 6.5
ஏக்கர் நிலத்திலுள்ள ஜே.கிருஷ்ணமூர்த்தி
பவுண்டேஷனில் வீக் எண்டில் விவாதித்து அறிய வாய்ப்பு தருகிறார்கள். 20 பேர் கொண்ட குழு அல்லது தனிநபராக ஆய்வு செய்யவும் வசதி உண்டு. ஆன்லைன் அப்ளிகேசன் வழி மட்டுமே பர்மிஷன் வாங்கி, மனிதனின்
இருப்பு குறித்து ஆராயலாம்.
தொகுப்பு: ஹாரி, டாம் அண்ட் கோ
நன்றி: குங்குமம்