ஆல் இன் ஆல் அறிவியல்!
சிறுவனை காப்பாற்றிய
தோல்!
மரபணு நோய்க்காக, லேபில்
தோலை வளர்த்து ஏழுவயது சிறுவனை ஜெர்மனைச் சேர்ந்த மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
தோலை செயற்கையாக வளர்ப்பது முதல் முறையல்ல என்றபோதும் 80% அளவு தோலை உருவாக்குவது என்பது சாதனைதானே!
ஏழுவயது சிறுவனை
junctional
epidermolysis bullosa (JEB) எனும் மரபணு நோய் தாக்கியது. தோல்களில் கொப்புளங்கள் உருவாகி புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ள இந்நோயினால்
உலகெங்கும் 5 லட்சம் பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாக்டீரியா தொற்றால் மூன்றில் இருபங்கு தோலை இழந்த சிறுவனைக் காக்க,
ஸ்டெம் செல் மற்றும் தோல் செல்களை பயன்படுத்தி லேபில் தோலை செயற்கையாக
உருவாக்கினர். "எட்டு மாதங்களாக இச்சிறுவனின் உயிரைக்காப்பாற்ற
போராடினோம்" என்கிறார் மருத்துவர் டோபியாஸ் ரோதோஃப்ட்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட, சிறுவன் தற்போது நலமாக
உள்ளான்.
2
காலை தூக்கத்தை
கலைத்து உற்சாகம் ஏற்படுத்துவதில் காஃபியை விட ஆப்பிள் பழங்கள் சிறந்தவை. ரத்தவோட்ட
வேகத்தை அதிகரிக்க ஆப்பிளிலுள்ள 13கி. ஃப்ரக்டோஸ் உதவுகிறது.
காரின் ஸ்டீரியரிங்
வீலை கடிகாரத்தின்
9-3 என்ற டிசைனில் கையாளுவதே சரியான முறை. ஏனென்றால்
ஏர்பேக் வெடிக்கும்போது விரல்கள்,மூக்கில் காயம்பட சான்ஸ் உண்்டு.
மஞ்சள் நிற பனி
மட்டுமல்ல,
வெள்ளைநிற பனியை சாப்பிட்டாலும் உடல் பாதிக்கப்படும். ஏன்? அதிலுள்ள மாசுதான் காரணம்.
குளிர் இல்லாதபோதும்
பிறந்த குழந்தைகள் நடுங்கினால், உடனே அவர்களுக்கு தாய்ப்பால் தரவேண்டும்.
உடலில் சர்க்கரை குறைந்துவிட்டதன் அறிகுறி இது.
கைகளை கழுவி டிஷ்யூ
பேப்பரால் துடைப்பதே தொற்றுநோய்களை நம்மை காக்கும்.
டிரையரை பயன்படுத்தினால், பாக்டீரியாக்கள்
நம் கைகளுக்கு பரவும் வாய்ப்பே அதிகம்.
3
ஆட்டிசத்திற்கு
மருந்து!
கற்றல் திறனில்
பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆட்டிசத்திற்கு இன்றுவரை மருந்துகள் கிடையாது. தற்போது
கண்டறியப்பட்டுள்ள புதிய மருந்து மூளையில் ஏற்படுத்தும் மின்தூண்டல்கள் மூலம் நோயை
தீர்க்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில்
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டருக்கு 68 குழந்தைகளில் ஒருவர் பாதிக்கப்படுகிறார்.
MEF2C எனும் செல் தூண்டலால் மூளையின் சிக்னல்கள் தாறுமாறாக எகிறி,
ஆட்டிச பாதிப்பு ஏற்படுகிறது ஆராய்ச்சியாளர்கள் 1990 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தனர். NitroSynapsin எனும் புதிய
மருந்து மூளையின் சிக்னல் அதிகரிப்பை குறைக்கிறது என எலிகளிடம் செய்த
சோதனையில் கண்டு
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளனர். "MEF2C ஜீன்கள் ஆட்டிசத்தோடு
இணைந்துள்ளதால் இம்மருந்து பிறவகை ஆட்டிச பாதிப்புகளையும் குறைக்கும் என்பதையும் சோதனை
நிரூபணம் செய்துள்ளது" என்கிறார் ஆராய்ச்சியாளரான ஸ்டூவர்ட்
லிப்டன்.
4
சூப்பர்சோனிக்
பாராசூட்
2020!
செவ்வாயில் கால்
வைப்பதென்றால் சும்மாவா?
நாசாவின் 2020 ஆம் ஆண்டு முக்கிய பிளானே விண்கலத்தை
நாசுக்காக செவ்வாயில் தரையிறக்கும் பாராசூட்டை உருவாக்குவதுதான். செவ்வாயில் 12,000mph வேகத்தில் தரையிறங்க பாராசூட் உதவி
தேவை.
வர்ஜீனியாவிலுள்ள
வாலோப்ஸ் தீவிலுள்ள கோடார்ட் விண்வெளி ஆய்வு மையத்தில், ASPIRE எனும் பாராசூட் சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 17.7 மீ. நீளமான பிளாக் பிராண்ட் IX சவுண்டிங் ராக்கெட் அக்.4 அன்று வானில் ஏவப்பட்டு ஏஸ்பையர்
வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது."பாராசூட்டோடு விண்கலம் பறக்கவிடப்படுவது
மிகவும் எக்சைட்மெண்டாக இருந்தது.பாராசூட்டின் செயல்பாடும் நினைத்ததை
விட ஓகே" என்கிறார் நாசாவின் டெக்னிகல் தலைவரான இயான் கிளார்க்.
பாராசூட்டிற்கான அடுத்த டெஸ்ட் பிப்.2018 ஆம் ஆண்டு
நடைபெறவிருக்கிறது.
5
சல்மான் அரேபியா!
ஜனவரி 2015 ஆம்
ஆண்டில் சல்மான்(81), அவரது மகனும இளவரசருமான முகமது பின் சல்மான்(32)
ஆட்சிக்கு வந்த 29 மாதங்களில் சவுதி அரேபியா பல்வேறு
மாற்றங்களை கண்டுள்ளது. கத்தார்,ஈரான் உறவுகளில்
மட்டுமல்ல, உள்நாட்டில் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சர்ச்சைகள்:
2017 ஆம்
ஆண்டு நவ.4 அன்று சவுதி அரேபியாவின் தளபதியாக இருந்த இளவரசர்
மிதெப் பின் அப்துல்லா, 2017 ஜூன் 21 அன்று, அமைச்சராக இருந்த முகமது பின் நாயீஃப் ஆகியோர் பணியிலிருந்து திடீரென நீக்கப்பட்டனர்.
2017 ஆம்
ஆண்டு செப்டம்பரில் பெண்கள் கார்களை ஓட்டுவதற்கான தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
சவுதியை ஆளும்
அதிகாரம் கொண்ட சல்மானின் குடும்ப உறுப்பினர்களில் 11 நபர்கள் ஊழல் குற்றம்சாட்டப்பட்டு
உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சல்மானின் சாகசங்கள்!
ஏமனிலுள்ள ஹௌதி
புரட்சியாளர்களுக்கு எதிராக மார்ச் 2015 ஆம் ஆண்டு சவுதி அரேபியா போரைத்
தொடங்கியது.இதற்கு ஏமனின் அதிபர் அபெட்ராபோ ஹாதியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஜூனில், தீவிரவாதிகளுக்கு உதவிகள் வழங்குவதாயும், ஈரானுக்கு ஆதரவாகவும்
இருப்பதாக கத்தார் நாட்டை குற்றம் சாட்டியது சவுதி அரேபியா. உடனே
இருநாட்டின் போக்குவரத்தை நிறுத்தி, தன் நாட்டின் குடிக்களை திரும்ப
பெற்று எல்லைகளை மூடி தீரம் காட்டியது.
2016 ஆம்
ஆண்டு ஜனவரியில் ஈரானுடன் சவுதி அரேபியாவின் அதிகார மோதல் முற்றி, ராஜரீய உறவுகள் முழுமையாக துண்டிக்கப்பட்டது.
1953 ஆம்
ஆண்டிலிருந்து சவுதி அரேபியாவை இபின் சவுத் மன்னரின்(1932-1953) குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களே ஆண்டு வருகின்றனர். குடும்ப உறுப்பினர்களை கைது செய்து, ஏமன் நாட்டுடன் போர்
அறிவித்தது என அடுத்த மன்னர் தான்தான் என்பதை சவுதியின் துணை பிரதமரும் பாதுகாப்பு
அமைச்சருமான சல்மான் நாசூக்காக உலகிற்கே கூறியுள்ளார். மூன்று
கண்டங்களை இணைத்து சவுதி அரேபியாவை இஸ்லாமிய உலகின் லீடர் நாடாக மாற்ற பல்வேறு முனைப்பான
செயல்பாடுகளை செய்துவருகிறார் இளவரசர் முகமது பின் சல்மான்.
6
முகாபே அரசின் க்ளைமேக்ஸ்?
ஜிம்பாவேயில் அடுத்த ராணுவ ஆட்சி தொடங்கியுள்ளது. ஜெனரல் மோயோ அரசு தொலைக்காட்சியின் வழியே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள
ராபர்ட் முகாபே மற்றும் அவரது குடும்பத்தார் பாதுகாப்பாக உள்ளனர் என அறிவித்துள்ளார்.
சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் உள்ள குற்றவாளிகளை கட்டம் கட்டுவதற்குத்தான்
இந்த முயற்சி என்று ராணுவம் தன் நடவடிக்கைக்கு காரணம் கூறியுள்ளது.
ராணுவத்துக்கு மரியாதை!
நாடாளுமன்றம், நீதிமன்றம்,அரசு தொலைக்காட்சி, அதிபரின் வீடு என அனைத்தும் ராணுவத்தின்
கைகளுக்குள் மிகச்சில மணிநேரங்களுக்குள் வந்துவிட்டது. கான்ஸ்டான்டினோ
சிவெங்கா, முன்னாள் துணை அதிபரான எம்மர்ஸன் நான்காவா ஆகியோர்
நாட்டின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டுள்ளனர். ராணுவத்தினருக்கே
சம்பளம் தரமுடியாத சீரழிவு நிலை ஜிம்பாவே அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டில் ராணுவ வீரர்கள் மீதான மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யக்கூடாது
என ராணுவத்தினர் கலகம் செய்து வெற்றிகண்டனர். அடுத்து பின் 1990 ஆம் ஆண்டில் பல்வேறு
கோரிக்கைகளை விரிவாக்கி மீண்டும் ராணுவ கலகம். அதற்கடுத்து மற்றுமொரு
கலகமாக முகாபே சிறைவாசம் அனுபவிக்கிறார்.
அடுத்து, ZANU-PF கட்சி மூலமாக முகாபே பதவியை ராஜினாமா செய்ய
நிர்பந்திக்கப்பட வாய்ப்புள்ளது. ஏறத்தாழ 93 வயதாகும் முகாபே இனியும் அதிபர் நாற்காலியில் அமர்ந்திருக்க முடியாது என்பதே
உண்மை.
சீனாவின் தலையீடு
1970 ஆண்டிலிருந்து சீனா, ஜிம்பாவே
நாட்டோடு வணிகரீதியிலான தொடர்பைக் கொண்டுள்ளது. நாட்டின் விடுதலைப்போருக்கு,
அதிபர் முகாபேயில் கொரில்லா படைகளுக்கும் நிதியுதவி வழங்கியது சீனா.
ராணுவத்தலைவர் சிவெங்கா, கடந்த நவ.10 அன்று சீனாவுக்கு விசிட் செய்து மத்திய ராணுவ அமைச்சக உறுப்பினர் ஜூவோசெங்கை
சந்தித்து பேசியது ராணுவரீதியிலான பேச்சுவார்த்தை என சீனா குறிப்பிட்டாலும் ராணுவக்கலகத்தில்
சீனாவின் கை உள்ளது என பலரும் சந்தேகப்படுகின்றனர். நவ.7
அன்று முகாபேயால் பதவியிறக்கப்பட்ட துணை அதிபர் எம்மர்ஸன், சீனாவால் ராணுவப்பயிற்சி அளிக்கப்பட்ட கொரில்லா படையைச் சேர்ந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
1980 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து
விடுதலை பெற்ற ஜிம்பாவேயின் தனித்தலைவராக ராபர்ட் முகாபே பொறுப்பேற்று 37 ஆண்டுகள் ஆட்சி செய்தவருக்கு, மக்கள் குட்பை சொல்ல ரெடியாகிவிட்டனர்
என்பதே சாலையில் நடைபெறும் பேரணிகள் நமக்கு உணர்த்தும் செய்தி.
7
No.1 சீனா!
சூப்பர் கம்ப்யூட்டர்களை
உருவாக்குவதில் சீனா அமெரிக்காவையும் கடந்து முதலிடத்தை பெற்றுள்ளது. உலகில்
சூப்பர் கம்ப்யூட்டர்களில் 202 சீனாவில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 143 சூப்பர் கம்ப்யூட்டர்கள்தான்
உள்ளன என டாப் 500 எனும் இணையதளம் தகவல் தெரிவிக்கிறது.
"டாப்
500 லிஸ்டில் சீனா அதிக கம்ப்யூட்டர்களை உருவாக்கி இடம்பெறுவது இதுவே
முதல்முறை.சீனாவை ஒப்பிடும்போது அமெரிக்கா இதுவரையிலும் கம்ப்யூட்டர்
தயாரிப்பில் இப்படியொரு சுணக்கத்தை காட்டியதில்லை" என்கின்றனர்
ஜெர்மனி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். எண்ணிக்கை
மட்டுமல்ல வேகத்திலும் சீனாவின் கம்ப்யூட்டர்களே முதலிடம் பெறுகின்றன. சன்வே டைஹூலைட் மற்றும் டியான்ஹே2 ஆகியவை சூப்பர் கம்ப்யூட்டர்களில்
பெஸ்ட். சீனாவின் யூக்ஸியில் தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் சென்டரிலுள்ள
சன்வே டைஹூலைட், வாழ்வறிவியல் மற்றும் தட்பவெப்பநிலை மாடலிங்
ஆகியற்றை ஆராய்ச்சி செய்ய உதவுகிறது. ஒரு க்விண்டிலியன் கணக்கீடுகளை
ஒரு நொடியில் செய்யும் கம்ப்யூட்டர் ப்யூச்சரில் சீனாவில்தான் இருக்கும்.
8
வெப்பத்தை குறைக்கும்
ட்ரெஸ்!
கோடையிலும் ஜில்லென்ற
ட்ரெஸ் இருந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் மேரிலேண்ட் ஆராய்ச்சியாளர்களின் ஆசையும். 55% குளிர்ச்சி
தரும் துணியை மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் லையன்பிங் ஹூ தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.
3டி பிரிண்டிங்
முறையில் உருவாகியுள்ள இந்த துணியின் கண்டுபிடிப்பினால் குளிர்ச்சி கூடுதலாவதோடு,
ஏர்கண்டிஷனர் வசதியும் இனி தேவையில்லை என்பது பிளஸ்தானே! "அலுவலகங்களிலும் பயன்படுத்தும் முறையில் உருவாக்கப்பட்ட
உடை இது. 3டி பிரிண்டில் முறையில் வெப்பநிலையைக் குறைக்கும் முதல்
உடை இதுவே" என படபடவென பேசுகிறார் ஆராய்ச்சி லீடரான ஹூ.
பாரன் நைட்ரேட் மற்றும் பாலிவினைல் ஆல்கஹால் ஆகியவை கலந்த நானோஃபைபரால்
உருவாக்கப்பட்ட ட்ரெஸ் இது.
பருத்தியிழையை
விட புதிய நானோஃபைபர் இழை,
1.5 மடங்கு வெப்பம் கடத்தும் தன்மை கொண்டது. எதிர்காலத்தில்
நூலிழையின் வடிவிலும் தரத்திலும் அப்டேட்கள் ஏற்பட வாய்ப்புள்ளன.
தொகுப்பு: கா.சி.வின்சென்ட், மார்த்தாண்டன் குருப்பு
நன்றி: முத்தாரம்