பெண்களை உயர்த்தும் மகாராஷ்டிர தம்பதிகள்!





பெண்களை உயர்த்தும் மகாராஷ்டிர தம்பதிகள்! -.அன்பரசு

மாநகரில் திருப்தியான வேலை, வங்கி கணக்கில் கொட்டும் பணம் என அல்ட்ரா மாடர்ன் வசதிகளை தூக்கிப் போட்டுவிட்டு கிராமத்தில் படிப்பறிவற்ற பெண்களுக்காக உழைக்க நீங்கள் முன்வருவீர்களா? யோசிப்போம் இல்லையா? ஆனால் டாக்டர் ரமேஷ் அவஸ்தி, மனிஷா குப்தே தம்பதி, மேற்சொன்ன வசதிகளை யோசிக்காமல் அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு புனேவிலிருந்து 180 கி.மீ தள்ளியுள்ள மாலசிராஸ் கிராமத்து மக்களுக்காக உழைக்க வந்துவிட்டனர்.

ரமேஷ் மற்றும் மனிஷா ஆகியோர் தொடங்கிய மகிளா சர்வன்கீன் உத்கர்ஸ் மண்டல்(MASUM) அமைப்பு, புனே நகரிலுள்ள 20 கிராமங்கள் மற்றும் அகமதுநகரிலுள்ள மாவட்டங்களிலுள்ள ஏழைப் பெண்களின் உரிமைகளுக்காக போராடவும் தொழில் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு வருகிறது. "நாங்கள் இந்த அமைப்பை சேவை செய்வதற்காக உருவாக்கவில்லை. இது பெண்கள் தமக்கான உரிமைகளை பெறவே உருவாக்கினோம்.இதில் தீவிரமாக செயல்படுபவர்கள் எதிர்காலத்தில் சமூக மாற்றத்திற்கு உதவுவார்கள்" என்கிறார் டாக்டர் மனிஷா குப்தே.

மனம்,உடல்,வன்முறை, தீண்டாமை,வேலைவாய்ப்பு ஆகியவற்றோடு, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமைகள் ஆகியவற்றுக்கான திட்டங்களோடு செயல்பட்டு வருகிறது மாசம் அமைப்பு.
மாற்றத்தின் தொடக்கம்!
1970 ஆம் ஆண்டு ஜெயபிரகாஷ் நாராயணன் இயக்கத்தில் தொண்டர்களாக பணியாற்றிய ரமேஷ் மற்றும் மனிஷா ஆகிய இருவரும், எமர்ஜென்சி காலத்திலும் போராட்ட களத்தில் தீவிரமாக செயல்பட்டனர். ச்ஹத்ரா யுவா சங்கர்ஷ் வாஹினி என்ற மாணவர் அமைப்பின் உறுப்பினர்களான இருவரும் 'சத்ய சமாச்சார்' என்ற பத்திரிகையை நெருக்கடி காலகட்டத்தில் நடத்தியவர்கள். பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்து உ.பி பிழைக்க வந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ் அவஸ்தி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த மனிஷா குப்தே இருவரும் 1982 ஆம் ஆண்டு மனமொத்து வாழ்வில் இணைந்தனர்.

முதல் திட்டம்!

தொழுநோய் சிகிச்சைக்கு புகழ்பெற்ற பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர் என்.ஹெச்.ஆன்டியாவிடம் இருவரும் இணைந்து சில ஆண்டுகள் அவரின் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினர். "கிராமங்களில் வாழும் மக்களை உற்றுக்கவனியுங்கள். உங்களின் கேள்விகளுக்கான விடைகளை மக்களிடமே பெறமுடியும்" என்ற ஜெபியின் வார்த்தைகளைப் பின்பற்றி, கிராம சுகாதாரத்திட்டத்தை தயாரித்து ஆன்டியாவின் மாலாசிரிஷ் கிராமத்தை சென்றடைந்தனர். அங்கு கைத்தறி நெசவுக்காக எட்டு எந்திரங்களை வாங்கிக்கொடுத்து வளர்ச்சிப் பணியைத் தொடங்கினர். பின் நெசவுப்பணியை அருகிலுள்ள பதினெட்டு கிராமங்களுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள்." கிராம மக்கள் வாழ்வை விழிப்புணர்வோடு அணுக உதவுகிறோம். ஜனநாயக, சமதர்ம, அகிம்சை சமூகமே எங்கள் கனவு" என லட்சியத்தை விவரிக்கிறார் மனிஷா. நெசவுப்பணிகளுக்கான உதவியை நார்வே ஏஜன்சி NORAD யிடம் பெற்றிருக்கிறார்கள். புனே,அகமது நகர் ஆகியவற்றில் அலுவலகங்களை உருவாக்கிய டாக்டர் தம்பதியினர் தற்போது புனேவில் வசித்தாலும் வாரம் ஒருமுறை மால்சிராஸ் கிராமத்துக்கு விசிட் அடித்து பணிகளை மேற்பார்வை செய்கின்றனர்.

வன்முறையற்ற வாழ்வு!

மால்சிரஸில் சுகாதார திட்டங்களை அமுல்படுத்தினாலும் அது பெண்களுக்கான வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்ற அதிருப்தி மனிஷாவுக்கு இருந்தது. எனவே குடும்ப வன்முறை, பாலியல் வன்புணர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ சம்வத் ஆலோசனை மையங்களையும், சட்ட உதவி மையத்தையும் புனே கோர்ட் வளாகம் உட்பட அமைத்து தந்தார். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைக் சரியானபடி கையாள, சமூக ஆர்வலர்கள், மூத்த வழக்குரைஞர்கள் மூலம் உள்ளூர் கிராம பெண்களுக்கு(Saathis) பயிற்சி அளித்தார். 15 கிராமங்களிலுள்ள சம்வத் மையங்களில் புதன், சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் பெண்களுக்கான வழக்கு அறிக்கைகள் சட்ட வல்லுநர்களால் தயாரிக்கப்படுகின்றன. "பெண்களுக்கு ஆதரவான சட்டங்களைப் புரிந்துகொண்ட கணவர்கள் மெல்ல வன்முறை வழிகளிலிருந்து விலகி வருகின்றனர்" என்கிறார் சட்ட ஆலோசகரான மாலன் ஸாகடே.

சுகாதார சுகவாழ்வு

பெண்களின் வீட்டுக்கு வரும் மாசம் அமைப்பின் மருத்துவ உதவியாளர்கள் நோய்களை சோதித்து அவர்களுக்கு தேவையான ஜெனரிக் மருந்துகளை வழங்குகிறார்கள். பெண்களுக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய், பாலுறுப்பு தொற்றுநோய்கள் உள்ளிட்ட நோய்களை பரிசோதிப்பதற்கான பயிற்சிகளை மாசம் அமைப்பு அளிப்பதோடு ஆபரேசன் செய்வதற்கான செயல்பாடுகளுக்கும் ஆதரவுக்கரம் தருகிறது.

சூப்பர் வேலைவாய்ப்பு!

வங்காளதேசத்தில் கிராமீன் வங்கியை அமுல்படுத்தி முகமது யூனுஸ் ஐடியா மனிஷாவை ஈர்த்தது. "யூனூஸின் கடன் கொடுக்கும் பிளானை ஜனநாயக காந்திய முறையில் மாற்றி அமுல்படுத்தினோம். பலுதேடர் வகுப்பு பெண் கடன் வழங்கும் கூட்டத்தை நடத்தவும், கடன் அப்ளிகேசனை மராத்தா வகுப்பு பெண் தரவுமாக நிகழ்ச்சியை டிசைன் செய்து அனைவரையும் பங்கேற்கச் செய்தோம்." என்கிறார் மனிஷா. வெளியில் நூறு ரூபாய்க்கு பத்து ரூபாய் வட்டி என்றால், மாசம் அமைப்பில் நூறு ரூபாய்க்கு ஒரு ரூபாய் வட்டி என நான்கு மாதங்களில் கடனைக் கட்டவேண்டும். மேலும் கிராம பெண்களை கிராம சபைக்கூட்டங்களில் பங்கேற்றவும் மாசம் அமைப்பு ஊக்குவிக்கிறது. "இனி பெண்களின் வாழ்வை அடுப்பு மற்றும் குழந்தையோடு நிறுத்தமுடியாது" என உற்சாகமாக பேசுகிறார் கிராமத்து பெண்ணான மாயா ஷிண்டே.

சிறுவர்களுக்காக புஸ்தக் சமிதி திட்டம் மூலம் மராத்தி, ஆங்கில நூல்களை படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதோடு, Ranpakhre,Bharari ஆகிய திட்டங்களை உருவாக்கினர். இதன் மூலம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் ஸ்கிப்பிங்,சைக்கிள்,கேரம் என விளையாட மட்டும் 2 ஆயிரம் சிறுவர் சிறுமிகள் ஒன்றுகூடி விளையாடி மகிழ்கிறார்கள். இதோடு பால் பஞ்சாயத்து என்ற பெயரில் பத்து சிறுவர், சிறுமிகளைக் கொண்ட குழுவை பல்வேறு கிராமங்களில் தனி அமைப்பாக உருவாக்கி, குடிநீர், கல்வி உள்ளிட்டவற்றை கவனித்துகொள்ளும் முறை புது ஐடியா.

"என்னை அநீதிகளுக்கு எதிராக போராடும் பெண்ணாக மாற்றியதில் மாசம் அமைப்புக்கு முக்கிய பங்குண்டு.பல்வேறு அமைப்புகள் இலவசமாக பொருட்களை தருவதோடு சரி. ஆனால் மாசம் எங்களை சுதந்திரமாக சிந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்கியது" உறுதியான குரலில் பேசும் கவிதா ஜாக்தப், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு சட்டரீதியில் நீதிபெற்றுத்தரும் முயற்சித்து வருகிறார். 2010 ஆம் ஆண்டே மாசம் அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய டாக்டர் தம்பதியினர், "இளம் தலைமுறையினரை பொறுப்பேற்கச்செய்வதே நாட்டின் எதிர்காலத்திற்கு சிறப்பானது." என்கின்றனர் கோரஸாக. ஆறு திட்டங்களுக்குமான ஆறு தலைவர்கள் ஒன்றுகூடி பிளான்கள் மற்றும் திட்டத்தொகை ஆகியவற்றை முடிவு செய்து செயல்படுகின்றன. தற்போது மாசம் அமைப்பில் 43 உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஜனநாயக முயற்சிகளை வலுப்படுத்த, லோக்சஹி என்ற திருவிழாவையும் நடத்தி வருகின்றனர். "மோசமான ஜனநாயகத்துக்கு மாற்று வலிமையான ஒன்றாகத்தானே இருக்கமுடியும்" என்று ரமேஷின் தோளில் சாய்ந்து புன்னகைக்கிறார் மனிஷா.


MAUSAM பிளான்!

மொத்த திட்டங்கள் - 6
ஆண்டு பட்ஜெட் - 1.5 கோடி
நிதியுதவி - ஃபோர்டு பவுண்டேஷன், மெக் ஆர்தர் பவுண்டேஷன், ஸ்விஸ் எய்ட், டாடா ட்ரஸ்ட்,ஆஷா(அமெரிக்கா), கனடா தேசிய மேம்பாட்டு ஏஜென்சி.


வன்முறை மற்றும் தீண்டாமையற்ற வாழ்வு
1987 ஆம் ஆண்டு தொடங்கிய அமைப்பு. வன்முறைக்கு பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு சட்டரீதியான தீர்வுகளை வழங்குகிறது. மையங்களில் சட்ட ஆலோசகர்கள்,ஆதரவுக்குழுக்கள் உள்ளனர்.

பெண்களுக்கான சுகாதார அமைப்பு
1981 ஆம் ஆண்டு தொடங்கிய பெண்களுக்கான சுகாதார விஷயங்களை பிரசாரம் செய்கிறது. பல்வேறு கேம்ப்கள், மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, அரசின் திட்டங்களுடன் பெண்களை இணைக்கிறது.

வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார அமைப்பு
1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பு சுயசார்பான வேலைவாய்ப்புகளை பெண்களுக்கு வழங்குகிறது. புனேவின் புரந்தர் தாலுகா,அகமதுநகரின் பர்னர் தாலுகா ஆகியவற்றில் ஸ்பெஷல் கவனம் செலுத்தி தொழிலுக்கான சிறு கடன்களை வழங்குகிறது.

அரச  பங்கேற்பு அமைப்பு
மில்லினியத்தில் தொடங்கப்பட்ட பெண்களுக்கான அரசியல் பங்கேற்பு அமைப்பு. கிராம நிர்வாகம், பஞ்சாயத்துகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவுகிறது.

குழந்தைகள் அமைப்பு

பழங்குடி மக்களுக்கான தொடக்க கல்வியை உறுதி செய்யும் அமைப்பு இது. 2002 ஆம் ஆண்டிலிருந்து மேல்நிலைப்பள்ளிகளில் Value education வகுப்புகளை நடத்தி வருகிறது. குழந்தைகளின் பிரச்னைகளை அவர்களே தீர்த்துக்கொள்ள பால் கிராம சபைகளை அமைக்கிறது.

இளைஞர் அமைப்பு

குழந்தை திருமணத்தை தடுத்து, இளைஞர்களுக்கான உடற்பயிற்சி வகுப்புகள், ஆளுமை மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குகிறது

Compiled by Victor Kamesi
thanks: Kungumam weekly