லேடி டார்ஸான் ஜமுனா!





லேடி டார்ஸான் ஜமுனா!-.அன்பரசு

ரக்ஷா பந்தனின் அர்த்தம் தெரியுமா? சகோதரர்களுக்கு சகோதரிகள் மணிக்கட்டில் அணிவிக்கும் கயிறு, சகோதரனுக்கான நலனைத் தருவதோடு, சகோதரியை பாதுகாக்கும் பொறுப்பையும் வலியுறுத்துகிறது. அதேதான் ஜார்க்கண்டின் புர்பி சிங்பம் மாவட்டத்திலுள்ள முதுர்காம் கிராமத்திலும் நடந்தது. கிராமத்தைச் சேர்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் சால் வனப்பகுதியிலுள்ள மரங்களுக்கு ராக்கி கட்டியுள்ளனர் என்பதுதான் மிராக்கிள் மேட்டர்.

இப்பெண்கள் படைக்கு தலைமை வகித்த ஜமுனா துடு, 50 ஹெக்டேர் வனப்பகுதியை கடந்த 20 ஆண்டுகளாக டிம்பர் மாஃபியாக்களின் கொலைவெறித் தாக்குதல்களை எதிர்கொண்டு இரவும் பகலுமாக காவல் காத்து வருகிறார். 1998 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புவரை படித்திருந்த ஒடிஷாவைச் சேர்ந்த ஜமுனா திருமணமாகி, முதுர்காம் கிராமத்திற்கு வந்தார். காட்டை நம்பியே வாழும் மக்களை ஏமாற்றி வனத்தை சிலர் சுரண்டுவதை விரைவிலேயே அறிந்துகொண்டார்.

டிம்பர் மாஃபியா குறித்து பலர் கூறிய கதைகளை கேட்டு பயந்தாலும், வனத்தை இழந்தால் எதிர்காலம் இல்லை என்று உடனே புரிந்துகொண்டு சக கிராமத்தினரிடம் பேசி, அவர்களின் தயக்கத்தை உடைத்தெறிந்தார் ஜமுனா. பின், 25 பெண்களைக் ஒருங்கிணைத்து  Van Suraksha Samiti அமைப்பை மாஃபியாக்களின் அச்சுறுத்தல்களையும் மீறி தில்லாக தொடங்கியபோது அவரின் வயது 17. "இந்த வனத்திலுள்ள மரங்கள்தான் எங்களுக்கு சகோதரர்கள். ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷாபந்தனின் போது, மரங்களுக்கு ராக்கி கட்டுவதே எங்கள் வழக்கம்" என புன்னகையோடு பேசுகிறார் ஜமுனா.

விட்டுக்கொடுக்காத ஜமுனாவின் அபார மனவலிமையைப் பார்த்து வியந்த ஆண்களும் மெல்ல அவரின் நோக்கத்தை புரிந்துகொண்டு வனப்பாதுகாப்புக்கு உதவினர். ஊருக்கு நன்மை ஓரிரவில் எப்படி கிடைக்கும்? 2008-2009 இடைப்பட்ட காலத்தில் மரம் வெட்டுவதை மக்கள் தடுப்பதைக் கண்டு கோப முறுக்கேறிய மாஃபியாக்கள், மக்கள் மீது திடீர் கல்லெறித்தாக்குதலை திட்டமிட்டு நிகழ்த்தினார்கள். இதில் ஜமுனாவைக் காப்பாற்ற முயன்ற அவரது கணவர் மான்சிங்கின் மண்டை உடையும்படி கடுமையாக தாக்கப்பட்டார். இயற்கையின் வரம்போல மக்களின் வாழ்வாதாரத்தேவைக்கு கற்பகத்தரு போல அனைத்தும் தந்த வனத்தை கைவிடக்கூடாது என பெண்கள் படையை வில்,அம்பு,லத்தி என தற்காப்பு ஆயுதங்களை துரிதமாக ரெடி செய்து வனத்தில் ரோந்து காலை,மதியம், மாலை,இரவு என ரோந்து சென்றார். ஜமுனாவின் ஆர்வத்தை பார்த்து ஆச்சர்யமான வனத்துறை கிராமத்தினருக்கான குடிநீர்வசதி மற்றும் பள்ளி ஒன்றையும் அமைத்து தந்துள்ளனர்.


"முழு கிராமமே என்னுடைய முயற்சிக்கு துணை நிற்கிறது. மரங்களை வியாபாரத்திற்காக அழிப்பவர்களை இன்று மக்களே முனைந்து தடுக்கிறார்கள்.சால் இலைத்தட்டுகள், காளான்களை விற்பதன் மூலம் மக்களுக்கு வாரத்திற்கு ரூ.400 தருவது இந்த வனம்தான். மேலும் நாம் மரம்,தாவரம் என இயற்கையிலிருந்து வந்தவர்கள் எனும்போது வேறுபாடு எதற்கு? " என உறுதியான குரலில் பேசுகிறார் ஜமுனா.

இன்று கிராமத்து பெண்களும் ஜமுனாவின் வழியில், பெண் குழந்தை பிறந்தால் பதினெட்டு மரங்களும், பெண் திருமணமாகி புகுந்தவீடு செல்லும்போது பத்து மரங்களும் நட்டு வனப்பரப்பினை அதிகரிக்க முயற்சித்து வருகிறார்கள். வனத்தை சேதப்படுத்துவர்களுக்கு ரூ.501 ஃபைன் உண்டு. இதனை கிராமத்திற்கான அடிப்படை விஷயங்களுக்கு செலவிடுகிறார்கள்.  
கடந்த ஆகஸ்டில் இந்தியாவை மாற்றிய பெண்கள் விருதை(2017) நிதிஆயோக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை சார்பாக டெக்ஸ்டைல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஜமுனாவிற்கு வழங்கி கௌரவித்தார். ஸ்த்ரீ சக்தி விருது(2014), காட்ஃப்ரே பிலிப்ஸ் பிரேவரி விருது(2013) ஆகிய விருதுகளையும் தன் அர்ப்பணிப்பான உழைப்பிற்கு அங்கீகாரமாக பெற்றுள்ளார் இந்த வன மனுஷி. இன்று கிராமத்தில் 150க்கும் மேலான கமிட்டிகளை அமைத்து அதில் 6 ஆயிரம் உறுப்பினர்களை இணைத்து வனத்தினை பாதுகாக்கும் பணியில் தளர்வுறாமல் ஈடுபட்டு வருகிறார் ஜமுனா. "என் கடைசி மூச்சுள்ளவரை வனத்தை பாதுகாக்க முயற்சிப்பேன். பின்னாளில் அழியாத வனத்தின் வழியே மக்களுக்கு என் நினைவு வந்தால் அதுவே பெரும் வரம்" என நெகிழ்கிறார் ஜமுனா துடு. வனமனுஷி!

தொகுப்பு: கா.சி.வின்சென்ட், கல்யாண் கொனிடேலா
நன்றி: குங்குமம்