மஜா பக்கங்கள் 2.0!







QR சாதனை!

விற்பனைப் பொருட்களைப் பற்றிய டீட்டெய்ல்களை அறிய உதவும் க்யூஆர் கோடில் என்ன சாதனை செய்ய முடியும் என்று உலகம்  கேட்பதற்குள் சீனா தேசம் மின்னல் வேகத்தில் ரெக்கார்ட் செய்தேவிட்டது.

சீனாவின் ஹெனான் பகுதியைச் சேர்ந்த 2500 சியாஸ் தேசியப்பள்ளி மாணவர்கள் 5X51 அளவில் QR கோடை பிரமாண்டமாக உருவாக்கி ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள். சீனாவில் க்யூஆர் கோடுகளின் மூலம் கார்,பைக் வாடகைக்கு எடுப்பதிலிருந்து பிச்சைக்காரர்களுக்கு சில்லறைகளைக்கூட வழங்க முடியும். வெள்ளை, சிவப்பு என இருவேறு நிறங்களில் க்யூஆர் கோடை உருவாக்கிய மாணவர்களின் டிசைனை ஸ்கேன் செய்யவும் முடியும். இதனை சாத்தியப்படுத்திய திதீ எக்ஸ்பிரஸ் நிறுவனம், மாணவர்களுக்கு ஒரு மில்லியன் யுவான்களை வழங்கவிருக்கிறது. காசை மட்டுமல்ல, கூடவே வந்த சர்டிஃபிகேட்டையும் கையோடு வாங்கிவிட்டனர் சமர்த்து மாணவர்கள்.   


யானைக்கு கிஸ்!

பாகுபலி பிரபாஸ் போல யானை மேல் ஏறி கிராஃபிக்ஸில் சாகசம் செய்வது அனைவருக்கும் சாத்தியமாகுமா என்ன? கேரளா சேட்டன் ஒருவர் பாகுபலி பிரபாஸாக தன்னை நினைத்துக்கொண்டு யானைக்கு கிஸ் கொடுக்க போனார். ரிசல்ட்?

யானைக்கு முதலில் பழத்தை கொடுத்துவிட்டு பின் பாசநேசமாய் தும்பிக்கையில் செல்லமாக ஒரு இச் வைத்ததை யானையும் முதலில் ஏற்றுக்கொண்டது. ஆனால் முத்தம் ஒன்றோடு நிற்கும் விஷயமா? ஆனந்த பரவசமாக அடுத்தடுத்த கிஸ்களுக்கு தயாரானவரை ஜாலி வீடியோ எடுத்த நண்பர்கள் "சரக்கு அடிச்சிருக்க; யானை டென்ஷனாயிரும்.வேண்டாம்" என்று எச்சரித்தும் கேட்காதவர் தற்போது, ஹாஸ்பிடலில் சுயநினைவின்றி கிடக்கிறார். யானை அடித்த அடியில் டாஸில் சுண்டி விட்ட காசு போல சேட்டன் பறக்கும் காட்சி இணையத்தில் மாஸ் ஹிட். போலீசும் சேட்டன் செய்த பணியை பாராட்ட வலைவீசி தேடிவருகிறதாம்.

டூட்டி ஓவர்!

உழைக்கிற மனிதர் என்றாலும் ரெஸ்ட் வேண்டாமா? ஜெய்ப்பூரிலும் அப்படித்தான் ஓய்வு எடுக்க நினைத்தார். நிலைமை என்னாச்சு தெரியுமா?

ஜெய்ப்பூர் விமானநிலையத்தில் ஏர் இந்தியாவின் ஜெய்ப்பூர் - டெல்லி ஃபிளைட் வானில் மேலேறும் என வெயிட்டிங்கிலிருந்தனர் பயணிகள். கடிகார முட்கள்தான் முன்னேறியதே தவிர விமானம் டேக் ஆப் ஆகவேயில்லைஎன்னாச்சு என்று பதறிக்கேட்க, "என்னோட டூட்டி ஓவர்!" என கூலாக பதில் சொல்லியிருக்கிறார் பைலட். அதிகாரிகள் எவ்வளவு போராடியும் விமானியை பைலட் சீட்டில் உட்கார வைக்க முடியாததால் 40 பயணிகள் அடுத்தநாள் ஃபிளைட்டிலும், சிலர் சாலை வழியாகவும் டெல்லி கிளப்பினார்கள். ஜெய்ப்பூர் வரும்போதே பைலட்டின் டூட்டி டைம் முடிந்துவிட்டதால், சட்டப்படி அவர்மீது எந்த ஆக்சனும் இல்லை என ஏர்இந்தியா கூறிவிட்டது. டூட்டி ஓவர்னு நடுவானத்தில் சொல்லலியே? சந்தோஷப்படுங்க!    


டிப்ஸ் திருட்டு!

கால்டாக்ஸிகள் பீக்அவரில் காசை ஏற்றி குபீர் லாபம் பார்க்கிறார்கள்தான். அதற்கான தினக்கூலியாக வேலைபார்க்கும் ட்ரைவர்களின் மடியிலேயே கைவைத்தால் எப்படி?

அமெரிக்காவின் நியூயார்க்கில் உபர் டாக்ஸியில் ஏறிய டீன்ஏஜ் பெண், தன் நண்பர்களுடன் ஜாலியாக சவாரி செய்தார். இறங்கும் ஸ்டாப்பிங் வந்தவுடன், ட்ரைவரை லுக்விட்டார். அவர் சிக்னலை வெறித்து பார்க்க, டாஷ்போர்டு கேமராவையும் அலட்சியம் செய்து, ட்ரைவரின் டிப்ஸ் தொகையை நைஸாக வழித்தெடுத்து டக்கென இறங்கிவிட்டார். பார்க்கிங்குக்கு இடம் தேடிய ட்ரைவர் அண்ணாச்சி, அலட்சியமாக காலியாக இருந்த டிப்ஸ் பாக்ஸை பார்த்து செம ஷாக்காகி பெண்ணை சேசிங் செய்தும் பயனில்லை. இணையத்தில் வைரலான 2 நிமிட வீடியோவை 7 லட்சம் பேர்களுக்கும் மேல் பார்த்து ட்ரைவருக்கு பரிதாப உச்சு கொட்டியிருக்கிறார்கள்.


எலக்‌ஷனில் செல்லாத நோட்டு!

செல்லாத, கிழிந்துபோன ரூபாய்நோட்டுகளை பெறும் அரசு அதனை என்ன செய்யும்? என்ற கேள்வி மக்களில் பலருக்கும் உண்டு. கடந்த ஆண்டு நவம்பரில் பெறப்பட்ட ரூ.500,ரூ.1000 செல்லாத நோட்டுகள், தென் ஆப்பிரிக்காவின் எலக்‌ஷனுக்கு உதவவிருக்கின்றன எப்படி?

இந்தியாவின் ஆர்பிஐயும், வெஸ்டர்ன் இந்தியா பிளைவுட்ஸ்(WIP) என்ற நிறுவனத்தின் அக்ரிமெண்ட்படி செல்லாத நோட்டுகள் தட்டிகளாக மாற்றப்பட்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் அடுத்த ஆண்டு தேர்தலில் பயன்படுத்தப்படவிருக்கின்றன. "திருவனந்தபுரத்தின் ஆர்பிஐ, செல்லாத நோட்டுகளை என்ன செய்வதென்று தெரியாத நிலையில் எங்களை அழைத்தது சாம்பிள்களைப் பெற்று உதவினோம்" என்கிறார் WIP யின் பொதுமேலாளரான டிஎம் பவா. 750 டன்கள் செல்லாத நோட்டை கூழாக்கி தேர்தல் பிரசார தட்டிகளாக மாற்றும் திறன் கொண்ட ஒரே இந்திய நிறுவனம் WIP மட்டும்தான். ஒரு டன் நோட்டுகளை 128 ரூபாய்க்கு இந்நிறுவனம், ஆர்பிஐயிடம் பெற்றுள்ளது.

சிங்கத்தை முந்திய இளைஞர்!

சாகச த்ரில்லுக்காக இளமை ஏங்கும்தான்! ஆனால் அநியாய அட்வென்ச்சருக்காக பிறரை டார்ச்சர் செய்தால் எப்படி? குஜராத் யூத் ஒருவர், தன் பரிவாரங்கள் சூழ சென்ற அட்வென்ச்சர்தான் செம சர்ச்சை.

குஜராத்தைச் சேர்ந்த வாலிபர், கிர் சரணாலய பகுதியில் இரு சிங்கங்களின் மிக அருகில் கட் அடித்து ஆக்சிலேட்டர் முறுக்கிப்போகும் வீடியோ இணையத்தில் திகுதிகு ஹிட். அவை வயதான சிங்கங்கள் என்பதால் இளைஞர்கள் டின்னராகாமல் தப்பித்தனர். மற்றொரு வீடியோவில் பகலிலேயே கிர் பகுதியில் பைக்கை அலறவிட்டு காட்டு விலங்குகளை பயமுறுத்தியுள்ளது இதே யூத் கேங்தான்.உடனே  வீடியோக்களை உடனே கைப்பற்றி, யூத்களில் மூன்று பேரை அரஸ்ட் செய்துள்ளது குஜராத் போலீஸ்.  


பிரியாணிக்கு ஃபைன்!

உலகில் பிரியாணி சாப்பிட்டதற்காக யாராவது ஃபைன் கட்டியிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யெஸ். அதனை பிராக்டிக்கலாக செய்து காட்டி பீதி தந்திருக்கிறது  ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்.

ஜவகர்லால் நேரு யுனிவர்சிட்டியில் படித்துவரும்  சேப்பால் செர்பா,அமீர் மாலிக், மனிஷ் குமார்,சத்ரூபா சக்ரபோர்த்தி என்ற நான்கு மாணவர்கள் விடுமுறையில் ஆசையாக பிரியாணி சமைத்து ஷேர் செய்து சாப்பிட்டிருக்கின்றனர். இதை மோப்பம் பிடித்து டென்ஷனான நிர்வாகம் செய்ததுதான் அடாவடியின் உச்சகட்டம். மூன்று மாணவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், ஒரு மாணவருக்கு ஸ்பெஷலாக 10 ஆயிரம் ரூபாயும் ஃபைன் போட்டு, பத்து நாட்களில் கட்டவேண்டும் என டெட்லைன் சொல்லி பழிதீர்த்துள்ளது. ஃப்யூச்சரில் பிரியாணி சமைத்தால் ஒழுக்க நடவடிக்கைகளும் உண்டு என மெர்சல் சர்க்குலரை மாணவர்களுக்கு அனுப்பியுள்ளது பல்கலை நிர்வாகம். சாப்பிடறது குத்தமா சார்?



நேரத்தைக் குறைங்க சார்!

ஹைதராபாத்தில் மாணவர்கள் திடீர் போராட்டம்.ஏன்? ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பதற்கா?டாய்லெட் வசதிகள் இல்லை என்பதற்காகவா? ம்ஹூம்! பள்ளி நேரத்தை கம்மி பண்ணச் சொல்லித்தான் போராட்டமே.

ஹைதரபாத்தின் தனியார் ஸ்கூல் மாணவர்கள் "நெஞ்சுக்கு நீதி" என போராட்டக்குரல் எழுப்பியதற்கு காரணம், பள்ளி டைமிங் காலை 6.30 லிருந்து மாலை 6.30 வரை இருப்பதுதான். "மற்ற பள்ளிகளின் டைமிங் 8am-4.30pm வரைதான்.  நாங்கள் பள்ளி முடிந்ததும் ட்யூஷன்,ஹோம்வொர்க் செய்து முடித்து தூங்க இரவு 11 மணியாகிறது. முதல்ல டைமிங் மாத்துங்க" என கதறியிருக்கிறார்கள் மாணவர்கள். இவர்களுக்கு ஆதரவாக குழந்தைகள் அமைப்பான பலாலா ஹக்குல சங்கம் களமிறங்கியதால், விஷயம் கலெக்டர் ஆபீஸ் வரை சென்றுவிட்டது. 'ஹோம்வொர்க்கை செக் பண்ண 30 நிமிஷம் எடுத்துக்கிட்டோம்' என என்பது பள்ளியில் செமகூல் பதில்.

தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்