சுடுகாட்டில் திகைத்து நிற்கும் வாழ்வு!
சுடுகாட்டில் திகைத்து நிற்கும் வாழ்வு - வாரணாசி பெண்களுக்கு நேரும் அவலம்!
கல்வியில் இட ஒதுக்கீடு, பயணிக்க ஸ்பெஷல் பஸ் என பல்வேறு வகையில் அரசுகள் பெண்களுக்காக அக்கறையாக கவலைப்பட்டு
அம்சமாக திட்டங்களை தீட்டினாலும் இது சமூகத்தின் கடைக்கோடி வரைக்கும் செல்கிறதா என்பது
சந்தேகம்தான். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் வாழும் டோம் இனக்குழு
பெண்களின் வாழ்க்கை இதை நிரூபணம் செய்கிறது.
பள்ளியின் இன்டர்வெல் நேரம். வகுப்பில் கிரேயானால் தரையில் ஏதோ படம் வரைந்து கொண்டிருக்கும் குஷி சௌதாரிக்கு
வயது 13. அடுத்த ஆண்டு இறுதியில் திருமணத்தோடு குஷியின் படிப்புக்கு
சுபம் விழுந்துவிடும். "எட்டாவதுக்கு மேல் நான் படிக்க முடியாது.
இப்போதே என் அப்பா எனக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருக்கிறார்.
நான் பையனாக பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என மெல்லிய குரலில் முதிர்ச்சியாக பேசுகிறார் குஷி. இது குஷிக்கு மட்டுமல்ல, டோம் எனும் பிணங்களை எரிக்கும் இனக்குழுவைச் சேர்ந்த அனைத்து சிறுமிகளும் தம்
13 வயதில் சந்திக்கும் அனுபவம்தான்.
இளமையில் பிணம் சுடு!
வாரணாசியில் வாழும் டோம் இனக்குழு, சமூகம், பொருளாதாரரீதியில் தாழ்த்தப்பட்டவர்களாக மதிக்கப்படுகிறார்கள்.
மணிகர்னிகா, ஹரிச்சந்திரா ஆகிய இரு திறந்தவெளி
சுடுகாடுகளிலும் டோம் இனக்குழுவைச் சேர்ந்த சிறுவர்களுக்கு பிணங்களை எரிப்பதற்கான வார்ம்
அப் பயிற்சிகள் 12 வயதில் தொடங்குகின்றன. முதலில் சடலத்தின் மீது விறகுகளை விழாமல் அடுக்கி, உடல்
சரியாக வேக நெருப்பை கிளறிவிடும் பணி. எட்டு மணிநேரத்திற்கு நெருப்பருகில்
நின்று இப்பணி செய்யும் பெரும்பாலான ஆண்களுக்கு, ஆல்கஹாலும்,
கட்டரேட்டில் வாங்கும் கஞ்சாவும் மட்டுமே துணை. டோம் இனத்தின் எலைட் மனிதர்கள்(மாலிக்) தம் கன்ட்ரோலிலுள்ள சுடுகாட்டில் தம் சக இனத்தவரை பிணம் சுட அமர்த்தி வேலை
செய்கின்றனர். ஆனால் அதேநேரம், குஷி போன்ற
டோம் இன சிறுமிகள் துப்பட்டாவை அணிந்துகொண்டு ஆண் துணையோடுதான் வீட்டைத் தாண்ட முடியும்.
தன் வயதொத்த பொடுசுகளோடு ஓடிப்பிடித்து விளையாடவெல்லாம் நோ பர்மிஷன்.
காலை எழுந்தவுடன் சமையல் வேலைகளை முடித்துவிட்டு பள்ளி, பள்ளி முடிந்தவுடன் திரும்பவும் வீட்டு வேலைகள் என டோம் இனப் பெண்களின் வாழ்க்கை
கடிகார முட்கள் போல முதுகொடியும் அழுத்தத்திலேயே நகருகிறது.
ஒடுக்கும் மேலாதிக்க வெறி!
மீரட் சுடுகாட்டில் வசிக்கும் விதவைப் பெண் சிம்பிள்
சவுதாரியின் வாழ்க்கையே இச்சமூகத்தின் ஆண்கள் மேலாதிக்கத்தை பொட்டில் அறைந்தது போல
நிதர்சனமாக கூறும் சாட்சி. "பெண்கள் வயதுக்கு வந்தவுடன்
வீட்டை வெளியே செல்ல அனுமதி கிடையாது. ஆண்களின் பாலியல் அத்துமீறலை
தடுக்க இது ஒன்றே வழி என்பது எங்களது நம்பிக்கை" என்கிற
சிம்பிள் சௌதாரிக்கு வயது 27. சிறுவயதில் திருமணமாகி ஐந்து குழந்தைகள்
பிறந்த நிலையில் கணவர் திடீரென இறந்துவிட நிலைமை சிக்கலானது. கணவரின் இறுதிச்சடங்கின்போதே சௌதாரியின் மாமியார் இவரை துரத்திவிட்டுவிட,
தற்போது பெற்றோரின் வீட்டில் தங்கியிருக்கிறார். "என்னை என் கணவர் பார்த்துக்கொள்வார் என படிப்பில் நான் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.
பெண்களை வேலைக்குச் செல்ல அனுமதிக்காத சமூக சூழலில் என் குழந்தைகளை எப்படி
வளர்ப்பது என இன்று பயமாயிருக்கிறது" என கண்கள் கசிய அழுகிறார்
சௌதாரி.
பெண்களின் புனிதம் கெட்டுவிடும் என்பதால் வேலை பார்ப்பதற்கு
பர்மிஷன் இல்லை மேலும் கணவர் தவிர பிற ஆணிடம் பேசுவதே விபச்சாரி என்ற அவச்சொல்லை இச்சமூக
பெண்களிடம் பெற்றுத்தந்துவிடுமாம்.
"டோம் இனக்குழுவில் பெண்களுக்கு மறுமணம் கணவர் இறந்த சில நாட்களில் நடைபெறும்.
கண்ணாடி வளையல் அணிவித்து நடைபெறும் இந்நிகழ்வில் மணமகனை பெண்ணின் தந்தை
அல்லது சகோதரர்களே செலக்ட் செய்வார்கள்" என்கிறார் இந்த
இனக்குழு குறித்த ஆராய்ச்சியாளரும் 'The Symbolic Representation of Death'
என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் எழுத்தாளருமான மீனா கௌசிக். ஆனால் பெண்ணுக்கு குழந்தைகள் இருந்தால், மறுமண ஆப்ஷன்
கிடையாது. சிம்பிள் சௌதாரி போல தம்பியின் உழைப்பில் குழந்தைகளுக்கு
பொங்கிப்போட்டு வாழ வேண்டியதுதான்.
"என்னையும் குழந்தைகளையும் பராமரிக்கும்
தம்பிக்கும் குடும்பம் இருக்கிறது என்பதால் பல இடங்களிலும் வேலைக்கு முயற்சித்தேன்.
ஆனால் டாய்லெட்டை சுத்தம் வேலை கேட்டாலும் கூட எனது ஜாதிக்காகவே அவ்வேலை
மறுக்கப்படும் நிலையில் நான் என்ன செய்வது?" என விரக்தியான
குரலில் பேசுகிறார் சிம்பிள் சௌதாரியா. டோம்ஸ் இனக்குழுவினர்
சௌதாரியா என்ற பெயரில் தீண்டத்தகாத, தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படுகிறார்கள்.
பெயரை வைத்து தெரிந்துகொள்வது ஒரு வழி என்றால், பேச்சு,நடை,உணவு என ஜாதியைக் கண்டுபிடிக்க
ஓராயிரம் வழிகள் உள்ளனவே?
வாழ்வைக் குலைக்கும் ஜாதி!
ஆண்களால் பெண்களின் வாழ்க்கை எப்படி திட்டமிட்டு
சிதைக்கப்படுகிறது என்பதற்கு சௌதாரியாவின் பக்கத்து வீட்டுக்காரரான சந்திரமுகியின்
வாழ்வே சமகால உதாரணம். 17 வயதான சந்திரமுகியின் வயிற்றில்
குழந்தை கருவிலிருக்கும்போதே அவரின் கணவர் அடுத்த திருமணத்திற்காக சந்திரமுகியை தாக்கி,
கருவை கலைத்து அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டார். இன்று சந்திரமுகியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்து
வாழ்ந்தாலும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சந்திரமுகி அமைதியாக வாழ்ந்து வருகிறார்.
"தன் குழந்தைகளையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ள பெண் வேலைக்கு
சென்றால் அவளை விபச்சாரி என முத்திரை குத்தி அவமானப்படுத்துகிறார்கள். ஆணிடம் வேலைக்கு சேர்ந்தால் உடனே அவள் தன் உடலை விற்றுத்தான் பணம் சம்பாதிக்கிறாள்
என்று எங்கள் ஜாதியில் வதந்திப் பேச்சு கிளம்பிவிடும். வேலை மட்டுமல்ல,
சாதாரணமாக தெருவில் கடைக்கு சென்றால் தலையை முக்காடிடவில்லையா?
அவள் நடத்தை சரியில்லாதவள் என தீர்ப்பு சொல்லிவிடுவார்கள்"
என புன்னகையோடு பேசுகிறார் சந்திரமுகி. டோம் இனப்
பெண்கள் தம் புகுந்தவீட்டினரோடு மட்டுமே திருமண விழாக்களில் பங்கேற்கலாம். திருமணம்,இறப்பு என எந்த நிகழ்வுகளிலும் பெண்கள் பங்கேற்க
அனுமதி கிடையாது.
விவாகரத்து பெற்றாலும் சந்திரமுகி தன் நெற்றியில்
குங்குமம் வைப்பதையும்,கையில் வளையல்கள் அணிவதையும் நிறுத்திவிடவில்லை.
"சில பேப்பர்களில் கையெழுத்து போட்டுவிட்டால் திருமண உறவு முடிந்துபோய்விடுமா
என்ன? கடவுளின் முன்னிலையில் நடந்த திருமணம் எங்களுடையது.
எங்கள் இனத்தில் விவாகரத்தை நம்புவதில்லை. என்
கணவர் இறந்துவிட்டால் அமைதியான விதவையில் வாழ்வையும் வாழ ஆசைப்படுகிறேன்"
என உறுதியான குரலில் பேசுகிறார் சந்திரமுகி. வாரணாசி,
2014 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி வென்ற நாடாளுமன்ற தொகுதி.
டோம் இனப்பெண்கள், தாம் கால்பதித்து வாழும் தற்போதைய
இந்தியாவிலேயே குருட்டு இருளில் தவிக்கும்போது, புதிய இந்தியா
என்பது விண்வெளியில் விரல் சுட்டிக் காண்கிற எட்ட முடியாத கனவாக இருக்கும்.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: குங்குமம்