அதிசயிக்கும் அறிவியல்!
மரபணுவை சிதைக்கும்
மது!
ஆல்கஹால் குடிப்பது
உடலின் ஸ்டெம்செல்களை தாக்கி மரபணுரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதோடு புற்றுநோயை உண்டாக்கும்
காரணியாகவும் உள்ளது என்பதை கேம்பிரிட்ஜ் பல்கலையின் மூலக்கூறு உயிரியல் பிரிவு கண்டறிந்துள்ளது. இதுகுறித்து
எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஆல்கஹால் எலிகளின் உடலில் புற்றுநோய்க்கான தூண்டுதலை
ஏற்படுத்தியுள்ளது.
"மது
உடலில் ஏற்படுத்தும் பாதிப்பின் அளவு என்பதை கண்டறிய முயற்சித்து வருகிறோம்.
ஆனால் மது, டிஎன்ஏ செல்களை பாதிக்கிறது என்பது
உறுதி" என்கிறார் ஆராய்ச்சியாளர் கேட்டன் படேல்.
ஆல்கஹாலில் உள்ள அசிட்டால்ஹைடு என்ற நச்சு உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை
மட்டும் இதில் அடையாளப்படுத்தி உள்ளார்கள். உடலில் புதிய ரத்த
அணுக்கள் உருவாவதை தடுத்து, டிஎன்ஏ செல்களின் இயல்பான பணியையும்
தடுத்து உடலை பாதிக்கிறது மதுபானத்திலுள்ள நச்சு.
2018 ஆம்
ஆண்டில் 4K துல்லியத்தில் HU80KA புரொஜெக்டரை
உருவாக்கி புத்தாண்டை உற்சாகமாக தொடங்கியுள்ளது எல்ஜி. பிற ஹெச்டி
புரொஜக்டர்களை விட ஸ்லிம்மாக,விலை குறைவாக கவனம் ஈர்க்கும் சாதனம்
இது. 150 இன்ச்சில் 2,500 லூமென்ஸ் தரத்தில்
பளிச் படம் உங்களுக்கு தியேட்டர் அனுபவத்தை அள்ளித்தரும். புரொஜக்டரை
சுவரில், சீலிங்கில் மாட்டி வைக்கும் வசதி உண்டு. இதோடு 7 வாட் ஸ்பீக்கர்களோடு optical, HDMI,
Bluetooth. ஆகிய வசதிகள் உண்டு.
ஆண்ட்ராய்டு டிவிகளைப்போலவே
இதிலும் வெப் ஓஎஸ் விஷயங்களை இயக்கலாம். இதோடு ஆப்ஸ்களை இயக்க உங்களுக்கு
கூடுதலாக கீபோர்ட்டும் மௌசும் அவசியத்தேவை. பொதுவாக ஒரு லட்சம்
ரூபாய்க்கும் குறைவாக புரொஜக்டர்கள் சந்தையில் கிடைக்கின்றன என்பதால் பொருட்களை மதிப்பிட்டு
வாங்க வாய்ப்புள்ளது.
தேனீக்களை அழிக்கும்
பூஞ்சைக்கொல்லி!
தேனீக்கள் அழிந்து
வருவது உலகமெங்கும் அலாரமடிக்கும் நியூஸ் என்றாலும், இன்று அதற்கான காரணங்களின்
வரிசையில் பூஞ்சைக்கொல்லி இணைந்துள்ளது. AAAS அமைப்பின் கூட்டத்தில்,
2008-2013 காலகட்டத்தில் தேனீக்கள் ஏறத்தாழ 23 சதவிகிதம் அழிந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மனிதர்களின் விவசாயம், அழகுச்செடிகள்
வளர்ப்பு ஆகியவை தேனீக்களின் இடத்தையும், உணவையும் பறிக்க அவை
மெல்ல இறந்து வருகின்றன. 30 பில்லியன் விளைபொருட்கள் சந்தை மெல்ல
அழிந்துவருகிறது என்கிறது 2014 ஆம் ஆண்டு வெளியான பிபிசியின்
அறிக்கை. "நிகோட்டினை மூலமாக கொண்ட பூச்சிக்கொல்லிகள் தேனீக்களை
பூமியிலிருந்து முற்றாக துடைத்தழிப்பது ஆய்வு உண்மை" என்கிறார்
ஆய்வாளரான ஸ்டீவ் மெக்ஆர்ட். பூஞ்சைக்கொல்லி குறித்த தீர்க்கமான
ஆய்வுகளும், தேனீக்கள் குறித்த கரிசனமும்தான் அவற்றை பாதுகாக்க
உதவும்.
மறதிக்கு மருந்து!
இங்கிலாந்திலுள்ள
லான்காஸ்டர் பல்கலைக்கழகம் டைப் 2 நீரிழிவுக்காக கண்டறிந்த மருந்து, அல்சீமர்ஸ் நோயின் மறதியையும் கட்டுப்படுத்துவது தெரியவந்துள்ளது. இதிலுள்ள GLP-1, GIP மற்றும் குளுகாகோன் ஆகியவை மூளையில் ஏற்படும் சிதைவை தடுப்பை ஆராய்ச்சிகள் உறுதி
செய்துள்ளன.
அதோடு அல்சீமரால் மூளையில் ஏற்படும் நியூரான் இழப்பையும் இவை தடுக்கின்றன.
"இம்மருந்து
இழந்த நியூரான்களை உயிர்ப்பிக்காது. செயல்படும் நியூரான்களின்
தொய்வை சீர்செய்து, அதன் பணியை செம்மை செய்கிறது"
என்கிறார் ஆராய்ச்சியாளரான கிறிஸ்டியன் ஹோல்ஸ்சர். அதோடு இம்மருந்து பார்க்கின்சன் நோயுக்கும் நல்ல ரிசல்ட்டை கொடுத்துள்ளது.
இதில் உடலின் கிளைசெமிக் அளவை குறைக்கும் இன்கிரடின், மெட்ஃபார்மின் ஆகிய மருந்துகள் அல்சீமர்ஸ் நோய் பாதிப்பை குறைக்கவில்லை என்பதையும்
கவனத்தில் கொள்வது அவசியம். உலகமெங்கும் 44 மில்லியன் மக்கள் அல்சீமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இம்மருந்து
அவர்களின் நினைவை மீட்க உதவக்கூடும்.
ட்ரம்புக்கு எதிராக
இணையப்போர்!
"இது
மிகவும் சக்திவாய்ந்த பிரச்னையாக மாறும் வாய்ப்புள்ளது. ரிபப்ளிக்
கட்சியினர் தமது செயல்பாடுகளுக்கான விளைவை, தேர்தலில் சந்திக்கவேண்டியிருக்கும்"
என்கிறார் அமெரிக்காவின் மசாசூசெட்ஸை சேர்ந்தவரான எட் மார்க்கே.
இணையச்சமநிலையை குலைக்கும்படி, ட்ரம்ப் அரசு குறிப்பிட்ட
விதிகளை நீக்கியுள்ளதுதான் மக்களை ஒன்று திரண்டு போராட வைத்துள்ளது. ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷனுக்கு எதிராக கோர்ட்டில் போராட மனித உரிமை அமைப்புகள்
கச்சை கட்டி வருகின்றன.
என்ன பிரச்னை?
சில குறிப்பிட்ட
நீங்கள் விரும்பும் இணையதளங்களை நீங்கள் பார்க்க அதிக கட்டணம் செலுத்தவேண்டும் என்பதுதான்
கான்செஃப்ட்.
இணையதள சேவை வழங்குபவர்(AT&T) பல்வேறு தளங்களை நடத்தினால் பிற தளங்களை மிக குறைவான வேகத்தில் அல்லது தடை
செய்வது போன்ற விதிகள் புதிய இணைய சமநிலை விதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் புதிய விதிகள் படி மாநிலங்கள், தளங்களின்
மீது எந்த கட்டுப்பாட்டையும் விதிக்க முடியாது. காம்காஸ்ட் உள்ளிட்ட
மீடியா நிறுவனங்கள் கூகுள்,ஃபேஸ்புக் ஆகியோரின் தளங்களை பிளாக்
செய்யலாம். இதை தடுக்க கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக தொகையை
இணையதள சேவை அளிப்போருக்கு தர நேரும். இது அப்படியே பயனரையும்
பாதிக்கும். ட்ரம்ப் அரசு, 2015 ஆம் ஆண்டு
ஒபாமா அரசின் விதிகளை நீக்கி செய்த செயலால் நாளை நிகழும் விளைவு இதுதான்.
சட்டப்போராட்டத்தில்
அமேஸான்,கூகுள்,ஃபேஸ்புக்,நெட்ஃபிளிக்ஸ்
ஆகிய நிறுவனங்கள் நேரடியாக ஈடுபடமுடியாது. ஆனால் வேறு நிறுவனங்களின்
மூலம் விதிகளை மாற்ற போராட முடியும். இணையச்சமநிலை பற்றிய விவாதமானது
மெல்ல 2018 ஆம் ஆண்டில் நவம்பரில் நடக்கும் செனட் சபை தேர்தலை
நோக்கியும் திரும்புவது தவிர்க்க முடியாத ஒன்று.
தொகுப்பு: கா.சி.வின்சென்ட், விக்டர் காமெஸி
நன்றி: முத்தாரம்