தகவல்தொடர்பில் பேச்சுக்கு முக்கிய தொடர்புண்டு!



Image result for communication




முத்தாரம் நேர்காணல்

சோபி ஸ்காட்,நரம்பியல் வல்லுநர் மற்றும் பேராசிரியர்.

தமிழில்: .அன்பரசு

நன்றி: James Lloyed, sciencefocus.com

நாம் பேசும் சொற்களுக்கும் தகவல் தொடர்புக்கும் என்ன தொடர்பிருக்கிறது?

பேச்சுக்கு தகவல் தொடர்பில் இன்றியமையாத இடமுண்டு. நீங்கள் என்னை பார்க்காதபோதும், குரலைக்கேட்டே எனது ஊர்,வயது,எனது மனநிலை ஆகியவற்றை எளிதாக யூகிக்க முடியும் என்பதுதான் இதன் பலம். வயது வந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் குரல் உடைந்து பேசும் தொனியும் மாறும். இதற்கு சமூக, கலாசார தொடர்புண்டு.

பேச்சு கடந்து உடல்ரீதியான தகவல்தொடர்பை பற்றி கூறுங்கள்.

முகத்தில் காட்டும் உணர்ச்சிகள், உடலின் அசைவுகள் ஆகியவை செய்தியை வார்த்தைகளால் கூறுவதற்கு முன்பே எதிரிலிருப்பவருக்கு கூறிவிடுகின்றன. ஒருவரின் உடல்மொழியை வைத்தே கூறவரும் விஷயத்தை யூகிப்பது பயிற்சியால் சாத்தியம். பாடகர்கள் பாடலை பாடும்போது, பாடலின் தன்மைக்கேற்ப மாறும் அவர்களின் உடல் அசைவுகளை பாருங்கள். இதனை சரியானபடி உணர்ந்தால், உடல்மொழி குறிப்புகளின் வழி ஒருவரின் மனதைப் படித்துவிடலாம்.

இமோஜி என்பது நவீனகால தகவல்தொடர்புக்கான கருவியா?

நாம் எழுத்துக்களில் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் குறியீடுகளை பயன்படுத்தி வந்த வரலாறு கொண்டவர்கள். அதன் நீட்சியாகவே நாம் இமோஜி மற்றும் எமோட்டிகான் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் இமோஜியை அனைவருக்கும் அனுப்பி வைப்பது சரியான முடிவல்ல. பல பாராக்களில் எழுதும் விஷயங்களை சின்னச்சின்ன குறியீடுகளில் குறிப்பிடுவது தகவல் தொடர்பில் ஈஸியான ஒன்றாக இருக்கிறது.

தகவல்தொடர்பில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன?

தகவல்தொடர்பு என்பது நேரடியானதாக எப்போதும் இருந்ததில்லை. எனது தாத்தா தலைமுறையினர், அஞ்சல் அட்டைகள் வழியாக உரையாடினர். இன்று நாம் ஸ்மார்ட்போன் வழியாக செய்திகளை இன்ஸ்டன்டாக பரிமாறிக்கொள்கிறோம். முதலில் எழுத்துக்களின் வழியாக பரிமாறிக்கொண்ட செய்தி இன்று, வீடியோ கால், இமோஜி அளவில் மாறியுள்ளது.
தகவல்தொடர்பில் சிரிப்புக்கு முக்கியத்துவம் உண்டா?
விலங்குகளில் நாம் மட்டும் சிரிக்க முடியும் என பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. எலிகள்,மனிதக்குரங்கு ஆகியவைற்றாலும் சிரிக்க முடியும். சிரிப்பு என்பதை குழந்தை தன் பெற்றோர்களிடமிருந்து பெறுகிறது. பின்னாளில் அது சமூக இணைப்புக்கான காரணமாக மாறுகிறது. சிரிப்பு என்பது ஒருவர் அடிக்கும் ஜோக்குக்காக வருவது என்று இணைப்போம். ஆனால் அது, நம்முடன் இருக்கும் மனிதர்களை நாம் ஏற்கிறோம் என்ற அர்த்தமும் அதில் உண்டு. கட்டுப்படுத்தக்கூடிய புன்னகை, சிரிப்பு இரண்டும் சமூக உறவுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அண்மையில் நீங்கள் படித்த உங்களின் சிந்தனைகளை புதுப்பித்த புத்தகங்களை கூறுங்கள்.

Galileo’s Middle Finger by Alice Dreger; The Heretics by Will storr ஆகிய இரு நூல்களை குறிப்பிடுவேன். முதல் நூல் அறிவியல் செய்திகளையும் அதன் செயல்பாட்டைப் பற்றிய ஆய்வு நோக்கிலான நூல். இரண்டாவது, அறிவியல்ரீதியில் இல்லாத புதுமையான அறிவியல் விஷயங்கள், ஆராய்ச்சியாளர்கள் பற்றிய தகவல்களைக் கொண்டது.

உங்களது பெயரை எந்த வட்டார மொழி உச்சரிப்பில் கேட்க விரும்புகிறீர்கள்.

பிளாக்பர்ன் வட்டார உச்சரிப்பில். அந்த வட்டாரத்தில் எனது பெயரை சோர்பீ என உச்சரிப்பார்கள். செல்லமாக தாம் வளர்க்கும் பூனையை அழைப்பது போன்ற உச்சரிப்பு, எனது வீட்டை எனக்கு நினைவுபடுத்துகிறது.

நன்றி: James Lloyed, sciencefocus.com; Andrew Anthony
theguardian.com

வெளியீட்டு அனுசரணை: முத்தாரம்.
தொகுப்பு: சிவரத்னம் ராஜவேல், கமலதாரிணி