மை டியர் இந்திரா 2!- ஜவகர் நேரு





மை டியர் இந்திரா,

உன்னுடைய  இந்த பிறந்தநாளில் பல்வேறு பரிசுகளையும் ஆசிர்வாதங்களையும் பெறுவது வழக்கம். நான் என் ஆசிர்வாதங்களை உனக்கு அளித்தாலும் நைனி சிறையில் உள்ளதால் என்ன பரிசு உனக்கென அளிக்கமுடியும்? நான் உனக்கு அளிக்க கூடிய பரிசு பருப்பொருளானதல்ல. ஆற்றல் வாய்ந்த மனதையும் வலிமையும் உனக்கு அளிக்க விரும்புகிறேன்.

நான் அளிக்கும் இப்பரிசை சிறையின் உயர்ந்த மதில்கள் தடுக்கமுடியாது. அறிவுரை, உபதேசங்களை என்றும் வெறுப்பவன் நான் என்பதை நீ அறிவாய். இதை கலந்துரையாடலாக கருதி பேசுவோம். இதுபோன்ற தருணங்களில்தான் உண்மையை அறியமுடியும். நான் உன்னோடு பேசிய பல்வேறு உரையாடல்களில் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறோம். இவை சலிப்பூட்டுவதாக இருக்காது என்றே நினைக்கிறோம். இதன் வழியாக நாம் சில விஷயங்களை பரஸ்பரம் கற்றிருக்கிறோம். கடிதத்தின் வழியாக உரையாடுவது நேரிடையாக பேசுவதற்கு பதிலீடு ஆகாது என்பது உண்மைதான். நாம் இருவரும் நேரிடையாக பேசுவது போலவே இந்த கடிதத்தை நீ எடுத்து்க்கொள்ளலாம்.  நாடுகளின் வரலாற்றை நாம் படிக்கும்போது, மிகச்சிறந்த காலகட்டங்களில் வாழ்ந்த  ஜோன் ஆப் ஆர்க போன்ற மனிதர்களை ச்ந்திக்கலாம். இவர்களைப் பற்றி நீ நூலிலும் வாசித்திருப்பாய். உனக்கு அதுபோல உருவாகும் ஆசையிருக்கிறதா? எளிய மனிதர்கள் பொதுவாக ஹீரோயிசமானவர்களாக இருப்பதில்லை.

தன் குடும்பம், பிள்ளைகள், அவர்களுக்கான உணவுகள், தனக்கான பிரச்னைகள்  என்று இருப்பவர்களுக்கும் வரலாறு தன் பக்கங்களில் கதாநாயகர்களாக இடம்பெற வாய்ப்பளிக்கிறது.  இந்தியாவில் வறிய மனிதர்களின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட காந்தி மீது மக்களும் பேரன்பு வைத்திருக்கிறார்கள். பாபுஜியின் செய்திகள் மக்களின் இதயத்தை நேரடியாக சென்று சேர்ந்து அவர்களை சுதந்திரத்திற்கான வீரர்களாக மாற்றிவிட்டிருக்கிறது.  இந்தியாவில் நடைபெறும் மாற்றங்களை பார்க்கும் நல்வாய்ப்பு பெற்றவர்களாக நாமிருவரும் இருக்கிறோம். இதில் நமக்கென்ன பாத்திரம்? இந்தியாவின் வீரர்களாக இந்தியாவின் பெருமையை காப்பதோடு நம்பிக்கைக்கும் சரியானவர்களாக இருக்க வேண்டும். எது சரி தவறு என்று முடிவெடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. ஒன்றை ரகசியமாக செய்யவேண்டும் என்று நினைப்பதே நம் மனதில் பயம் நுழைந்துவிட்டது என்பதற்கான சாட்சி. இது நாளடைவில் நம் மன உறுதியை செயலிழக்க வைத்து விடும்.

நான் உனக்கு மிக நீளமான கடிதம் எழுதிவிட்டேன். ஆனால் நான் உனக்கு சொல்லவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அதனை கடிதமாக எழுதி கூறிவிடமுடியுமா என்று தெரியவில்லை. நீ இந்தியாவிற்கு சேவை புரிவதற்கான துணிச்சலான வீராங்கனையாக உருவாகி வருவதே எனது ஆசை.

அன்பும் வாழ்த்துகளுடனும்
அன்புத்தந்தை
ஜவகர்லால் நேரு



தமிழில்: ச.அன்பரசு
நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 14,2017




பிரபலமான இடுகைகள்