மஜா பக்கங்கள்!
ரியல் அறிவழகி!
அழகிப்போட்டி என்றால்
கண்ணுக்கு காம்பேக்ட்டாக ட்ரெஸ்ஸில் மினுமினு உடலில் அழகிகள் வளையவருவார்கள். சில பல
பிரிவுகளில் டிஸ்டிங்ஷன் பெற்று அழகி கிரீடத்தை ஆனந்த கண்ணீரோடு தலையில் சுமப்பதுதானே
வழக்கம். பிலிப்பைன்சில் தேர்வாகியுள்ள கரேன் இபாஸா இதில் வேற
மாதிரி.
பிலிப்பைன்ஸில்
நடந்த மிஸ் எர்த்
2017 போட்டியில், கரேன் இபாஸா, மிஸ் எர்த் அழகி பட்டம் வென்றார் என்பது க்ளைமேக்ஸ் காட்சி. பூமிக்கு மிகப்பெரிய எதிரி என்ன? பொதுஅறிவு ரவுண்டில்
கேட்ட கேள்விதான் கரேன் இபாசாவுக்கு அழகி கிரீடத்தை பெற்றுத்தந்தது. "பூமிக்கு எதிரி என்பது வெப்பமயமாதல் கிடையாது. நம் மனதில்
உள்ள புறக்கணிப்பும் அக்கறை இல்லாத தன்மையும்தான் சூழல் பிரச்னைகளுக்கு காரணம்.
மாற்றத்தை மனதிலிருந்து தொடங்கினாலே உலகின் பிரச்னைகளை தீர்க்க முடியும்"
என எக்கச்சக்க நம்பிக்கையோடு பதில் பேச, பார்வையாளர்களின்
அப்ளாஸ்களை அள்ளி ஜெயித்தே விட்டார் கரேன் இபாஸா.
ஐபோன் பப்ளிசிட்டி!
ஆண்ட்ராய்டின்
பட்ஜெட் ஆரவாரங்களையும் தாண்டி ஐபோன் தனக்கான மார்க்கெட்டை எலைட் லெவலில் வைத்திருப்பதை
மகாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த வாலிபர் பேண்ட் வாத்தியங்களை வாசித்து காட்டி
நிரூபித்துவிட்டார்.
இந்தியாவில் நவம்பர்
மாதம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட ஆப்பிள் X போனை க்யூ கட்டி நின்று ஆர்டர்
செய்த தானே பகுதி வாலிபர், அதனை எப்படி வாங்கச்சென்றார் என்பதுதான்
பிரேக்கிங் நியூஸ். குதிரையில் ஐபோன் புக்கிங் அட்டையோடு ஊர்வலமாக
போய், , பேண்டு வாத்தியங்களை புக் பண்ணி
இசைத்து செம கிராண்ட்டாய் கடையில் ஐபோனை வாங்கியிருக்கிறார் இவர். பப்ளிசிட்டிதான் என்றாலும் கிராண்ட் பேக்கேஜாக நடத்தியதால் ஒரே நாளில் சோஷியல்
தளங்களில் ஓஹோ புகழ்பெற்றுவிட்டன வாலிபரின் ஸ்டில்கள். ஆஹா விளம்பரம்
ஓஹோ பப்ளிசிட்டி!
சில்லறை ஸ்கூட்டர்!
பிரியமானவர்களுக்கு
பிடித்ததை கிஃப்ட் செய்வதுதானே அழகு. ஜெய்பூரைச்சேர்ந்த சிறுவனும் தன்
பாச சிஸ்டருக்கு பரிசளிக்க விரும்பி என்ன செய்தான் தெரியுமா?
யாஷூக்கு அக்கா
என்றால் சால இஷ்டம்.
பிரிய அக்காவுக்கு ஸ்கூட்டர் என்றால் அவ்வளவு ஆசை. தீபாவளி பரிசாக அக்காவுக்கு, அவள் விரும்பும் ஸ்கூட்டரை
வாங்கித் தந்து சர்ப்ரைஸ் செய்ய யாஷ் விரும்பினான் பணம்? தன்
சிறுசேமிப்பு இருக்கிறதே! ஸ்கூட்டர் ஷோரூமில் பணம் தர பேக் ஜிப்பைத்
திறந்தால் அத்தனையும் நாணயங்கள். 'என்ன விளையாடுறீங்களா?' என சீறிய சேல்ஸ்மேனிடம் ஆசை அக்கா கதையைச் சொல்ல நெக்குருகிப்போன விற்பனையாளர்கள்
டீம் ஓட்டுமொத்தமாக உட்கார்ந்து 62 ஆயிரம் ரூபாய் நாணயங்களை இரண்டு
மணிநேரத்தில் எண்ணிமுடித்து, நெகிழ்ச்சியுடன் ஸ்கூட்டரை யாஷின்
அக்காவிடம் ஒப்படைத்திருக்கின்றனர். தம்பி பாசம் ஆசம்!
ராங்ரூட் பாடம்!
ஒன்வேயை இருவழியாக்கி
யூஸ் செய்வது,
பிளாட்பார்மில் பைக் ஓட்டுவது, ஃப்ரீ லெஃப்டில்
காரை அடைத்து நிறுத்துவது என விதிமீறல்கள் இந்தியாவில் ஜாஸ்தி. இந்தூரில் ஒரு ஹீரோ விதிமீறலை தட்டிக்கேட்ட
வீடியோதான் தற்போது இணையத்தில் பரபர.
மத்திய பிரதேசத்தில்
இந்தூர் சாலையில் வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டிருக்க, திடீரென
இடதுபுறம் செல்லவேண்டிய கருப்பு எஸ்யுவி, ராங் ரூட்டில் வலதுபுறம்
வேகமாக வந்தது. பலரும் பயந்தபடி விலக, பைக்
வாலிபர் வண்டியின் எஞ்சினை அணைத்துவிட்டு அப்படியே நிற்க, எஸ்யுவிகாரருக்கு
டென்ஷன் எகிற ஆக்சிலேட்டரை முறுக்கியும் வாலிபர் வழிவிடாத 7 நிமிட
'தில்' வீடியோ லைக்ஸ் குவித்துவருகிறது.
"விதிமீறலை ட்ரைவருக்கு உணர்த்திய வாலிபரின் தைரியத்திற்கு என்
சல்யூட்" என்று கமெண்ட் எழுதி வீடியோவை இணையத்தில் நிலாய்
வர்மா பகிர்ந்திருக்கிறார்.
ஆல் இன் ஆல் உலகமே
கின்னஸ் சாதனை லிஸ்டில் பேர் சேர்க்க துடிக்கும்போது அதை போலீஸ் செய்வதில் என்ன தப்பிருக்கிறது? சுவற்றில்
கேப்டனாய் கால் வைத்து உடலை எத்தி ஆகாயமார்க்கமாக ஏறிய உடலை குர்குரே சிப்ஸ்போல கோணலாக்கி
பூமியில் லேண்டாகிறார் தினேஷ். கட்டிடங்களை ஜம்பிங்,ரன்னிங் செய்து ஜாக்கிசான் ஓடும் பார்கூர் டெக்னிக்கில் கில்லி தினேஷ்.
நேபாளத்தின் காத்மாண்டுவில்
நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஸ்டன்ட்மேனும் போலீஸ்காரருமான தினேஷ், பார்கூர்
டெக்னிக்கில் சுவற்றில் கால் வைத்து 360 டிகிரியில் பின்புறமாக
18 முறை பாடியை சுழற்றி பூமியில் நின்று கின்னஸ் சாதனை செய்திருக்கிறார்.
15 வயதிலிருந்து பார்கூர் பயிற்சி எடுக்கும் தினேஷ், பல்வேறு நேபாளி படங்களிலும் ஸ்டன்ட்மேனாக டேலன்ட் காட்டியுள்ளாராம்.
நேபாளத்தின் பார்கூர் அசோசியேஷன் தலைவரும் தினேஷ்தான். தற்காப்புத் தலைவன்!
நண்டு மியூசியம்!
கடலில் மீனுக்கு
அடுத்த நம்மை ஆச்சர்யப்படுத்துவது பத்துகால்களைக் கொண்ட பரபர நண்டுகள்தான். சீனாவில்
நண்டுகள் வடிவில் சூப்பராக மியூசியம் கட்டி அதற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
சீனாவின் ஜியாங்சூ
பகுதியிலுள்ள சூசோவு நகரில் கட்டப்பட்டுள்ள 3 மாடி நண்டு மியூசியம் அடுத்த ஆண்டு
திறக்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 2 ஆயிரம்
டன்கள் நண்டுகளைத் தரும் யாங்செங் ஏரியின் அருகில் உருவாகியுள்ள நண்டு கட்டிடத்தில்,
உணவகங்கள், பொழுதுபோக்கு, சூப்பர் மார்க்கெட் ஆகியவை அமையவிருப்பதாக இதன் மேலாளரான ஸாவோ ஜியான்லின் தகவல்
கூறுகிறார். ட்ரோன் மூலம் எடுக்கப்பட நண்டு மியூசியத்தின் படங்கள்
சோஷியல்தளங்களில் ஹிட் ஹாட்டாக உலவிவருகின்றன.
காணாமல் போன போலீஸ்!
போலீஸ், மெடிக்கல்
என சில துறைகளில் இவர் எதற்கு இந்த வேலைக்கு வந்தார் என பலருக்கும் டவுட் வரும்படி
சோம்பேறி வேலை இருப்பார்கள். பஞ்சாப்பைச் சேர்ந்த பல்வீந்தர் சிங்குக்கு மேலே
சொன்ன அஷ்டலட்சணங்களும் அப்படியே பொருந்தும்.
பில்லிபிட் பகுதியில்
கோட்வாலி போலீஸ் ஸ்டேஷனில் பல்வீந்தர்சில் 2001 ஆம் ஆண்டு கான்ஸ்டபிளாக கம்பீரமாக
சேர்ந்தார். பின் யாருக்கும் சொல்லாமல் ஒருநாள் லீவு எடுத்து
தலைமறைவானார். ஒரு டஜன் ஆண்டுகளுக்குப் பிறகு 'அட நாம் கான்ஸ்டபிளாச்சே' என ஞாபகம் வந்து ஸ்டேஷனுக்கு
பணியாற்றச்சென்றார் பல்வீந்தர். லீவுக்கு சரியான ரீசன் சொல்லவில்லை
என டிஸ்மிஸ் செய்திருக்கிறார் எஸ்.பி. கலாநிதி
நைதானி. அப்படி எத்தனை நாட்கள் லீவு எடுத்துவிட்டார்?
15 ஆண்டுகள் 217 நாட்கள் மட்டுமே.
தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்