குளுகுளு சொர்க்கங்கள்!





Image result for vesterøy




குளுகுளு சொர்க்கங்கள்- தனியார் தீவுகள் ஸ்பெஷல் ரவுண்ட் அப் - . அன்பரசு


வேலை, இன்க்ரிமெண்ட், அப்ரைசல் என பறக்கும் சீசன் லைஃபில் உண்டுதான். அதற்காக குளுகுளு பிரதேசங்களில் ஜாலி ட்ரிப் அடித்தால்தான்தானே ஆபீசிலும் நம் கிரியேட்டிவிட்டி ரேட்டிங் மேலேறும். அதற்குத்தான் நிறைய தனியார் குளுகுளு சொர்க்கங்கள் வாசலைத் திறந்து வைத்து நம்மை பன்னீர் தெளித்து வரவேற்கின்றன. உலகம் முழுக்க மனதை இலவம் பஞ்சாக்கும் பர்சைக் கரைக்காத சூப்பர் ஸ்பாட்கள் இதோ!

பறவைத்தீவு, சிசெல்லோய்ஸ்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சிசெல்லோய்ஸில் 5 கி.மீ நீள அமேஸிங் பீச் உங்கள் மனதை பறவையின் சிறகுகளாக்கும். மொத்தம் 115 தீவுகளைக் கொண்டுள்ள காம்போ தேசம் இது. அல்டாபிரான் ஆமைகள், குளங்களிலுள்ள டால்பின்கள்,மண்டாரே மீன்கள் என குஷியாக ஃபேமிலி, நண்பர்களோடு கண்டு ரசித்து, ஆடிப்பாடுவதற்கும் ஏற்ற ஸ்பாட் இது.

ஹைலைட்ஸ்:

மஹே தீவிலிருந்து 105 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பறவைத்தீவின் பவளப்பாறைகளின் வயது 1,25,000. சிவப்பு நிற பவளப்பாறைகள் 5 கி.மீ பீச்சில் 25 ஏக்கரில் பரவியுள்ளன. மே - அக்டோபர் சீசன் டைமில் பறவையியலாளர்கள் பைனாகுலரோடு வந்தால் 20 க்கும் மேற்பட்ட அரிய பறவைகளை காணலாம். அல்டாபிரான் இனத்தின் மெகா சைஸ் ஆமையான எஸ்மெரால்டா வசிப்பது இந்த பறவைத்தீவில்தான்.
பட்ஜெட்: ரூ.27,000(இருவர் ஓரிரவுக்கு தங்க)
செல்வது இப்படித்தான்: மஹே ஏர்போர்டிலிருந்து விமான வசதி உண்டு

வெஸ்டராய், நார்வே

நார்வே நாட்டின் வாலர் தீவுக்கூட்டங்களிலுள்ள வெஸ்டராய் தீவு, நதி சூழ்ந்த மலைநிலம். இங்குள்ள சிறிய காட்டேஜ்களில் நாட்களை ஜாலியாக செலவு செய்து, பசித்தால் படகில் துடுப்பை சுழற்றி காய்கறிகளை வாங்கி வந்து டிஸ்டர்ப் இன்றி ஜாலியாக சமைத்து உண்ணும் நிதான லைஃப்தான் இதன் பிளஸ் பாய்ண்ட்.

ஹைலைட்ஸ்:

மூன்று இயற்கை காடுகளைக் கொண்டுள்ள தீவு இது. மலைப்பகுதி, அதில் வீடு என்று அமைந்துள்ள வெஸ்டரோய் தீவை நடந்து விசிட் செய்வது புதிய அனுபவம். Skjellsbuveten , Bankerødfjellet  ஆகிய  மலைகள் பரபர த்ரிலைத் தருகின்றன. சதுப்புநிலக்காடான Guttormsvauen, Lerdalen , Ilemyr  ஆகியவற்றில் போட்டில் சென்று மீன் பிடிப்பதற்கான இடங்கள் அநேகம்.

பட்ஜெட்: 15,132(ஒரு இரவுக்கு)

செல்வது இப்படித்தான்: ஆஸ்லோ நகரிலிருந்து வாலருக்கு பஸ் அல்லது ஆஸ்லோ-ஃப்ரெட்ரிக்சாட் நகர் வரை ட்ரெயினில் ஃபுட்போர்ட் அடித்து, அங்கிருந்து வாலர் நகருக்கு பஸ் பிடிக்கலாம்.

போரர் தீவு, குரோஷியா

கிழக்கு ஐரோப்பிய நாடான குரோட்டியா, அட்ரியாட்டிக் கடல்புறமாக அமைந்த நாடு. 1833 ஆம் ஆண்டு கட்டப்பட்ட லைட் ஹவுஸைக் கொண்டுள்ள சிறிய தீவுதான் போரர். இதனை சில நிமிடங்களில் யூடர்ன் போட்டு பார்த்துவிடலாம் என்றாலும் இங்கிருந்து சூரிய உதயம், அஸ்தமனம் பார்ப்பது பேரழகு அனுபவம். பிரிமன்துரா நகரிலிருந்து 2.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தீவு இது.

ஹைலைட்ஸ்: உறுதியான கல் வீட்டில் ஜாலியாக தங்கலாம். 35 மீட்டர் லைட்ஹவுஸ் தனி வசீகரம். இங்குள்ள வீட்டில் எட்டுப்பேர் தாராளமாக தங்கலாம்.  

பட்ஜெட்: ரூ. 11,600(ஒரு இரவுக்கு)

செல்வது இப்படித்தான்: புலாவிலிருந்து பிரிமன்துராவுக்கு சிம்பிளாக பஸ் பிடித்து, பிரிமன்துராவில் படகு எடுத்து துடுப்பு போட்டால் 25 நிமிஷங்களில் போரர் தீவுக்கு வந்துவிடலாம்.

இல்கா கிராண்டே, பிரேசில்
அட்லாண்டிக் மழைக்காடுகளின் எச்சமாக அரிய பறவைகள், பவளப்பாறைகளைக் கொண்ட தீவு இல்கா கிராண்டே. இதில் அமைந்துள்ள மாநில பூங்காவின் பரப்பு 62.5%. ஆர்கா உள்ளிட சுறா மற்றும் டால்பின் மீன்கள் அதிகம் வாழும் பகுதி இது. 87% பாதுகாக்கப்பட்ட தீவுப்பகுதியில் அருவிகள், அமைதியான பீச்சுகள் என மனதை நெகிழ்த்தும்.
ஹைலைட்ஸ்: அருவிகள்,மலைத்தொடர்கள், கடற்கரைகள் என சுற்றிப்பார்க்க அலுக்காத இடம். கார்,ஏடிஎம்,மின்சாரம் செல்போன் என எந்த வசதிகளும் இல்லாத இடம் என்பதால் உங்களின் டென்ஷன் உடனே குறையும்.

பட்ஜெட்: ரூ. 1,00,366(ஓரு இரவுக்கு)
செல்வது இப்படித்தான்: ரியோ டி ஜெனிரோவிலிருந்து ஆங்க்ரா டாஸ் ரெய்ஸ்க்கு இரண்டு மணிநேர பயணம். பின் படகில் ஏறினால் தீவை அடையலாம்.

பிரதர் தீவு,பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் ட்ரிப்பை மறக்க முடியாததாக மாற்றுவது வைர மணல்வெளி பீச்களும், நீலநிற கடல்நீரும்தான். எல்நிடோவில் அமைந்துள்ள பிரதர் தீவு, எரிமலை லாவாவில் உருவான பாறைகளால் சூழப்பட்டுள்ளது.

பட்ஜெட்: ரூ. 19,527(ஒரு இரவுக்கு)

செல்வது இப்படித்தான்: மணிலாவிலிருந்து சென்ட்ரல் பலவான் செல்லலாம். அங்கிருந்து 6 மணிநேரம் பயணித்து எல் நிடோ சென்று படகு பிடித்தால் 2 மணிநேரம் ட்ராவல் செய்தால் பிரதர் தீவு உங்களுக்கு வெல்கம் சொல்லும்.

வினி பண்ணை, கேரளா

அஸ்தாமுடி ஏரி மற்றும் கல்லடா ஆறு சந்திக்கும் இடத்திலுள்ள இரண்டு ஏக்கர் தீவு இது. இரண்டு படுக்கை அறைகள் கொண்ட மரவீட்டில் நான்கு பேர் தங்கலாம். இன்ஸ்டன்ட்டாக ஃப்ரெஷ் மீன்களைப் பிடித்து தேன் சுவையாய் சமைக்க தனி செஃப்பும் உண்டு.   

பட்ஜெட்: 26,010(ஒரு இரவுக்கு)


செல்வது இப்படித்தான்: திருவனந்தபுரத்திலிருந்து கொல்லத்திற்கு டாக்ஸி பிடித்து, பின் பத்து நிமிஷ படகுப் பயணத்தை சக்சஸ் செய்தால் தீவுக்கு வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.


நன்றி: குங்குமம்
தொகுப்பு: கா.சி.வின்சென்ட், ரிஷிகா மூர்த்தி

பிரபலமான இடுகைகள்