பசுக்களுக்கும் தாழ்ந்தவர்கள்தான் தலித்துகள்! -பெசவாடா வில்சன்
முத்தாரம் நேர்காணல்
நேர்காணல்: பெசவாடா வில்சன், சஃபாய் கரம்சாரி அந்தோலன்
தமிழில்:ச.அன்பரசு
மகசசே விருது வென்ற சஃபாய் கரம்சாரி அந்தோலன் இயக்கத்தின்
செயல்பாட்டாளரான பெசவாடா வில்சன், கையால் மலமள்ளும்
தொழிலாளர்களின் நலவாழ்வுக்காக பல்லாண்டுகளாக பாடுபட்டு வருபவர்.
மும்பையில் மருத்துவர் திறந்தவெளி சாக்கடைக் குழியில்
கால்வைத்து உயிரிழந்தார். அதோடு டெல்லியிலும் காஸிபூர்
குப்பைக்கிடங்கு மாசு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். உண்மையில்
இச்சம்பவங்கள் நமக்கு உணர்த்துவது என்ன?
குப்பைகளை மறுசுழற்சி செய்ய நாங்கள் ஜப்பான் டெக்னாலஜியை
பயன்படுத்துகிறோம் என்பார்கள். ஆனால் அவர்கள் தினசரி டன்கணக்கில்
குவியும் குப்பைகளைப் பற்றி சரிவர புரிந்துகொள்ளவில்லை. குப்பைகள்,திறந்தவெளி சாக்கடைகளால் மக்கள் உயிரிழந்தாலும் அவர்களுக்கான இழப்பீட்டை வழங்காமல்
இழுத்தடிக்க அரசு முயல்கிறது. ஜனநாயக முறையில் நம் நலவாழ்வுக்காக
தேர்ந்தெடுத்த அரசு இப்படித்தான் செயல்படுமா? அரசு மக்கள் பிரச்னைகளில்
தன் பொறுப்பை கைகழுவவே நினைக்கிறது.
பாதாள சாக்கடைகள், செப்டிக் டேங்குகளில் இறங்கும் தொழிலாளர்கள் இறப்பு என்பது தொடர்ச்சியான நிகழ்வாக
இருக்கிறதே?
டெல்லியில் 84 தொழிலாளர்கள்
உட்பட நாடு முழுவதும் இந்தாண்டு 784 பேர் சுத்தம் செய்யும் பணியில்
மரணித்துள்ளனர். நாட்டின் தலைநகரில் 34 நாட்களில் பத்து தொழிலாளர்கள் இறந்துள்ளனர். சரி,
இதுவே டெல்லியின் பத்து பசுக்கள் இறந்திருந்தால் நிலைமை இப்படியேதான்
இருக்குமா? இறந்தவர்கள் தலித்துகள் என்பதால்தான் இந்த கள்ள மௌனம்.
பிரதமர், அனைத்து மாநில முதல்வர்களுடன் எமர்ஜென்சியாக
பேசினால் தீர்வு கிடைக்கும்.
இந்த பிரச்னைக்கு தீர்வுதான் என்ன?
முக்கியக்காரணம், நாம் இறந்த
காலத்திலேயே வாழும் குடிமைச்சமூகமாக வாழ்கிறோம் என்பதே. இன்றும்
ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தின் கழிப்பிடங்கள் பற்றிய பெருமிதத்தை
இந்தியர்கள் உலகிற்கு கூறிவருகிறார்கள். ஆனால் நாம் ஜாதி தாண்டிய
மனநிலைக்கு முன்னேறி, பல புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை
என்பதுதான் சோகம்.
மேற்கத்திய நாடுகளில் நிலைமை என்ன?
அசுத்தமான இடங்களில் லஷ்மி நுழையமாட்டாள் என்பது
இந்தியர்களின் மனநிலை.
இதனால் வீட்டிலிருந்து கழிப்பறை தள்ளி அமைக்கப்பட்டிருக்கும்.
மேற்கத்திய நாடுகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய அதற்கெனவே பிறந்து
வளரும் இனக்குழு மனிதர்கள் கிடையாது. அரசியல்ரீதியான
தீர்வுக்கும் இன்னும் வழி பிறக்கவில்லை. அதிகாரத்தில்
உள்ளவர்கள் மலமள்ளும் தொழிலாளர்களின் பிரச்னையை தெரிந்தே புறக்கணிக்கிறார்கள்.
அதனை சமூகத்தின் பிற ஜாதியினர் பார்த்துக்கொள்வார்கள் என
கருதுகிறார்கள்.
திறந்தவெளி கழிப்பறைகளை ஒழிக்க அரசு டெட்லைன் அறிவித்து
உழைக்கிறதே?
2019
ஆம் ஆண்டை இலக்காக நிர்ணயித்து 2 லட்சம் கோடி
ரூபாய்களை செலவழித்து புதிய கழிவறைகளை கட்ட முயற்சித்து வருகிறது. ஆனால் மலமள்ளும் பெண்களுக்கான மறுவாழ்வுக்கு அரசு ஒதுக்கியுள்ள தொகை 5
கோடி மட்டுமே. ஆனால் புல்லட் ரயில்
திட்டத்திற்காக 30 ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளது. இன்றும் உ.பி., ம.பி,பீகார்,,ராஜஸ்தான்,குஜராத்,உத்தராகண்ட்,ஜம்மு-காஷ்மீர்,ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மலமள்ளும்
பிரச்னை இருக்கிறது. ஸ்வட்ச் பாரத் தொடங்கி மூன்று
ஆண்டுகளாகியும் இந்தியாவில் 1.6 லட்சம் பெண்கள் இன்னும்
மலமள்ளும் தொழிலிலிருந்து விடுபடவில்லை. அரசு தலித்
மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டிய அவலம் இது.
நன்றி: Giridhar
jha,outlookindia.com
வெளியீடு : முத்தாரம்
தொகுப்பு: கோமாளிமேடை டீம்