போர் மக்களின் நிம்மதியை அழிக்கிறது! - முகமது அல்ஜூண்டே


Image result for mohamad al jounde




முத்தாரம் நேர்காணல்போர் நடைபெறும்போது மக்கள் நிம்மதியாக எப்படி வாழ முடியும்?முகமது அல்ஜூண்டே,கல்வி செயல்பாட்டாளர்.
தமிழில்:.அன்பரசு


சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டவர்களில் முகமது அல் ஜூண்டேவும் ஒருவர். தற்போது லெபனான் நாட்டின் பெக்கான் பகுதியிலுள்ள அகதிகள் முகாமில் பள்ளியைத் தொடங்கி நடத்தி வரும் அல்ஜூண்டேவின் வயது பதினாறு. இவரது கல்விப்பணியைப் பாராட்டி Children Peace Prize வழங்கப்பட்டுள்ளது.

லெபனானில் நீங்கள் நடத்திவரும் பள்ளியைப் பற்றி சொல்லுங்கள்.

முகாமில் சிறிய டென்ட்டில் தொடங்கிய கல்வி முயற்சி. பின்னர் மாணவர்கள் இணைந்தவுடன் கல் கட்டிடத்திற்கு மாறினோம். இன்று 200 பேர் இப்பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர். மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறேன் என்றாலும் சான்றிதழ் பெற்ற ஆசிரியர்களை கற்பிக்கும் பணிக்கு அமர்த்துவதே எனது நோக்கம். மொழிப்பாடங்களோடு போட்டோகிராபி வகுப்புகளும் நடத்தி வருகிறோம்.

போட்டோகிராபி மற்றும் விளையாட்டு ஆகியவை குழந்தைகளுக்கு எந்தவிதத்தில் கற்பித்தலை ஊக்குவிக்கும் எனக் கருதுகிறீர்கள்?

போரின் விளைவுகளை குழந்தைகள் வெளிப்படுத்தும்விதம் என்பது வேறுவகையானது. இளமையில் இதன் விளைவுகள் மிகமோசமான அனுபவமாக வெளிப்படும். எனவே விளையாட்டும் போட்டோகிராபியும் குழந்தைகளை ரிலாக்ஸ் செய்து அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக நினைக்கிறோம். இதன்மூலம் கற்றல் எளிதாகிறது.

சிரியாபோர் இறுதியாக முடிவடைந்ததைப் பற்றி கூறுங்கள்.

நான் போரின் பின்னாலுள்ள அவலமான அரசியலைப் பற்றிப் பேச விரும்பவில்லை. சூழலை மாற்ற என்னால் என்னென்ன முயற்சிகள் செய்யமுடியும் என்று யோசித்து செயல்பட்டு வருகிறேன். அதன் முக்கிய வெளிப்பாடே முகாம் பள்ளி. மற்றவர்களின் செயல்பாட்டைவிட நான் என்ன செய்யமுடியும் என்பதற்கே மெனக்கெடுகிறேன்.

பனிரெண்டு வயதிலிருந்தே நீங்கள் பள்ளிகளில் கணிதம் ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்கிவிட்டீர்கள். எப்படி உருவானது இந்த ஆர்வம்?

எனது அம்மா பதினான்கு ஆண்டுகளாக கணித ஆசிரியையாக பணியாற்றி வருபவர். அவரிடமிருந்து கணிதமும், திரைப்படங்கள், ஆங்கில நூல்கள் மற்றும் யூட்யூப் வீடியோ வழியாக ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டேன். கற்றும் வருகிறேன்.

சிரியா உள்நாட்டுப்போர் மக்களின் வாழ்வை எப்படி பாதித்துள்ளது?

போர் நடக்கும் நிலத்தில் மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? அகதிகளான மக்கள் அனைவரும் உரிய வேலையின்றி உணவுக்கே தவிக்கும்போது குழந்தைகளை படிக்க மட்டும் எப்படி அனுப்புவார்கள்? எனது குடும்பத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். எனது அப்பா, வேலைக்காக ஐரோப்பா சென்றுவிட்டார். நாங்கள் லெபனானில் இருக்கிறோம். அப்பா நல்ல நிலைமைக்கு வந்தவுடன் நாங்களும் அங்கு சென்றுவிடுவோம். உள்நாட்டுப்போரில் நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதே அதிர்ஷ்டம் என்பேன்.

சிரியாவிலிருந்து 5 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அதில் ஒரு லட்சம் பேர்களுக்கும் மேல் குழந்தைகள் என்கிறது கிட்ஸ்ரைட் அமைப்பு. இவர்களுக்கான கல்வி சாத்தியமா

 இவர்களை அப்படியே விட்டுவிட முடியுமா என்ன? அவர்களுக்கு முடிந்தவரை கல்வி அறிவை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். கல்வி அளிக்கப்படாதபோது முற்றாக ஒரு தலைமுறையையே இழக்கிறோம் என்றே அர்த்தம்.
நன்றி: middleeastmonitor.com,TOI

தொகுப்பு: பிருந்தா, விதேஷ் சக்ரவர்த்தி
நன்றி: முத்தாரம்





பிரபலமான இடுகைகள்