ஒருவரின் ஆளுமை தனிப்பட்டதா, நிறுவனத்தின் கருத்தியலுக்கு உட்பட்டதா?
ஒருவரின் ஆளுமை தனிப்பட்டதா, நிறுவனத்தின் கருத்தியலுக்கு உட்பட்டதா?
நீங்கள் அரிசி ஆலையில் வேலை செய்கிறீர்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், ப்ளுஸ்கை ஆகிய சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கிறீர்கள். அதில் உங்கள் மனதிற்கு பிடித்த படித்த பதிவுகளை போடுகிறீர்கள். பொதுவாக ஒருவர் தனக்கு பிடித்தாற்போன, மனசாட்சிப்படி சொல்லும் எழுதும் கருத்துகள் நிறையப்பேரை போய்ச்சேரும். பலருக்கும் பிடித்ததாக இருக்குமோ இல்லையோ, சிறு வட்டார ஆட்களேனும் அந்த எழுத்துக்களை படிக்க கூடுவார்கள். இதில் அரிசி ஆலை அதிபர் பெரிதாக தலையிட ஒன்றுமில்லை. வேலை நேரத்தில் போனை நோண்டினால் தவிர. ஆனால், அதுவே தனிநபர், சமூக வலைதளத்தில் பிராண்டு போல தனிப்பட்ட ஆளுமையை உருவாக்கிக் கொண்டுள்ளார். அவரை டிவி நிறுவனம் வேலைக்கு எடுக்கிறது. அப்போதும் அந்த தனிநபர் முன்னைப்போலவே சுதந்திரமாக சமூக ஊடகங்களில் கருத்துகளை பகிர முடியுமா? அதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே நடைமுறை உண்மை.
அண்மையில் வார இதழில் வேலை செய்யும் மூத்த நிருபர் ஒருவரிடம் பேசினேன். அவர் நிறைய இலக்கிய நூல்களைப் படிப்பவர். ஆனால், அதைப்பற்றி பேசுபவர்,இணையத்தில் எழுத ஆர்வம் காட்டவில்லை. என்னவென்று கேட்டபோது, தனிப்பட்ட கணக்காக இருந்தாலும் நூல்களைப் பற்றி எழுதமுடியாது, எழுதக்கூடாது. அப்படி எழுதினால் நிறுவனத்தின் கருத்தாகவே அனைவரும் பார்ப்பார்கள் என்று கூறினார். நான் திடுக்கிட்டுப் போனேன். அந்த நிருபர் எடுத்த முடிவால், அவர் வாசிக்கும் நிறைய நூல்கள் பற்றி நான்கு வரியில் சில கருத்துகளை கூற முடியாமல் போனது. அப்படி அந்த விமர்சனங்கள் வெளியாகி இருந்தால், சமூக வலைதளம் வழியாக பல நூறு பேர்களை சென்றடைந்திருக்கும். சில பத்து பேர்களையேனும் வாசிக்க வைத்திருக்கும். ஐந்து பேர்களாவது நூல்களை வாங்கியிருப்பார்கள். இரண்டு பேராவது வாங்கிய நூல்களை வாசித்திருப்பார்கள். தீவிர இலக்கிய நூல்களுக்கான வாசிப்பு குறைவுதான். நிறுவனத்தின் வாய்மொழி உத்தரவும், வாங்கும் பெரியளவு மாதசம்பளமும் நிருபரை மௌனமாக்கியுள்ளது. இதனால், நிறுவனம் கடந்த அவரின் அத்தனை செயல்பாடும் கெட்டுப்போனது.
ஒரு ஊடக நிறுவனத்தில் தனிநபர் வேலைக்கு சேர்ந்தால் உடல் பொருள் ஆன்மா அனைத்தையும் அர்ப்பணித்துவிட வேண்டுமா? அவர் சமூக வலைதளங்களில் தனியாக தன்னை உருவாக்கி வளர்ந்து ஆளுமையாக இருந்தாலும் அதையும் கூட அவரை சம்பளத்திற்கு அமர்த்தும் ஊடகங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன. இணைய செல்வாக்கு அனைவருக்கும் குறிப்பாக சந்தா கட்டச்சொல்லும் அச்சு மின் ஊடகங்களுக்கும் தேவை. பத்திரிகை என்றால் விற்பனை, டிவி என்றால் டிஆர்பி என மதிப்பீடுகள் உள்ளன. வணிகம் என்றால் வேகம். வேகமாக செயல்படவில்லையென்றால் விற்பனையில் உங்கள் இடத்தில் இன்னொருவர் இருப்பார். மக்கள் யாரும் ஏன் இவ்வளவு வேகம் என கேட்க மாட்டார்கள். வேகம் குறைந்தால்தான் கேள்வி எழும். ஆகவே, எதையும் நக்கலாக அறியாமையோடு வெட்கப்படாமல் எழுதுகிறாரா, எனக்குப் புரியவில்லை என்பதை பெருமை தொனிக்க கூறுகிறாரா? உடனே அவரை அழைத்து இதழில் வேலை கொடுத்து கொண்டாடிவிடுகிறார்கள். தமிழ்நாடு நிலைமையானது அப்படி. உலகளவில் ஊடகம் கடந்த செல்வாக்கு கொண்ட செய்தியாளர்கள் உண்டு. அவர்களைப் பற்றிய இரு செய்திகளைப் பார்க்கலாம்.
நார்வே நாட்டில் பிரபலமான டிவி ஊடக செய்தியாளர் ஒருவர் இருந்தார். அவர் சமூக வலைதள கணக்கில் பல்வேறு பதிவுகளை தொடர்ச்சியாக இடுபவர். பல்வேறு பிரச்னைகளை மனசாட்சிப்படி பேசி ஏராளமான பின்தொடர்பவர்களை பெற்றார். ஆனால், இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னையில் அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்தார். மனிதநேய அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர் அல்லது ஊடகவியலாளர் அறத்தின்படியும் அப்படித்தான் நிற்க முடியும். ஆனால், இங்கு ஒரு முரண்பாடு வந்துவிட்டது. ஊடக நிறுவனம், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இல்லை. எனவே, ஊடகவியலாளருக்கும், அவரை பின்தொடர்பவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. இறுதியில் அவர், தன்னை ஊடக நிறுவனத்தில் இருந்து வேறுபடுத்தி, சமூகவலைதள கணக்கை தனிப்பட்டதாக அதாவது பிரைவேட் என்ற வசதியில் மாற்றிக்கொண்டு விட்டார். அவருக்கு நிறுவனத்தில் இருந்த செல்வாக்கோ வேறு என்ன காரணமோ பணி பறிக்கப்படவில்லை. பெரும்பாலான நிறுவனங்களில் பணியாளர்களை கறிவேப்பிலை போல பயன்படுத்திவிட்டு பிரச்னை வந்தால் தூக்கி எறிந்துவிடுவார்கள். அந்த வகையில் நார்வே ஊடகவியலாளர் நற்பேறு கொண்டவராகிறார். அத்தனை பேருக்கும் இதுபோல வாய்ப்பு அமையாது.
அடுத்து இன்னொரு சம்பவம். அங்கு செய்தியாளருக்கு அனுகூலம் குறைவு. விளையாட்டு தொடர்பான வெளிநாட்டு செய்தியாளர் அவர். வெளிநாடுகளைப் பொறுத்தவரை அதாவது ஐரோப்பாவைக் குறிப்பிடுகிறேன். அங்கு ஒருவர் பிறந்து பள்ளியில் படிக்கும்போதே வாழ்க்கை முழுக்க பின்தொடரும் கால்பந்து அணி, கிளப் அணிகளை தேர்ந்தெடுத்து கொள்வார்கள். இதில் எதிர் அணியை ஆதரிப்பவர்களுடன் சண்டை, பகை, வன்ம தாக்குதல் என அனைத்துமே நடக்கும். ஒரு அணியைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அவர் காலத்திற்கும் அந்த அணிக்கு விசுவாசமாகவே இருப்பார். போட்டிகளில் வென்றாலும் சரி, தோற்றாலும் சரி.
அப்படி நடந்த போட்டியை பற்றி விளையாட்டு செய்தியாளர் பதிவு ஒன்றை எக்ஸில் இட்டார். அவர் குறிப்பிட்ட அணியின் ஆதரவாளர். அதை அவர் சமூக வலைதளத்தில் மறைக்கவில்லை. நடந்த போட்டியில் அவரது ஆதரவு அணி தோற்றுப்போனது. எதிர் அணி வென்றது. ஆனால், இதில் வென்ற அணியின் ஆதரவாளர்கள் மைதானத்தில் செய்த ஆவேச கொண்டாட்டத்தில் எதிர் அணியின் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதலுக்கு உட்பட்டு இறந்துபோயினர். இதைப்பற்றி ஊடகவியலாளர், ''தோற்றாலும் சரி, நாங்கள் அந்த அணியினரைப் போல வன்முறையில் ஈடுபட்டு கொலையில் இறங்கவில்லை''. என்று எளிய பதிவை இட்டார். அவ்வளவுதான் அவர் சொன்ன செய்தி. ஆனால், இந்த செய்தியை பலரும் சும்மாவிடவில்லை. நடந்த கொலைகளை விட செய்தியாளர் சொன்ன செய்தியை பலரும் முக்கியத்துவம் கொடுத்து பகிர,நாடெங்கும் பரபரப்பானது. ஒரு கட்டத்தில் அவரது நிறுவனம் நிர்ப்பந்தம் கொடுக்க விளையாட்டு செய்தியாளர் பதிவுக்கு மன்னிப்பு கேட்டார். பிறகு அவருக்கு கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டு பணியில் இருந்து விலக்கப்பட்டார்.
இங்கு ஒரு கேள்வி உங்கள் மனதில் எழலாம். இப்படியான பதிவை சாதாரண ஒருவர் இட்டிருந்தால் இந்தளவு பாதிப்பு நேருமா? அது சந்தேகத்துக்குரியது. அரசுக்கு இருக்கும் அப்போது இருந்த பிரச்னை, விளையாட்டு ரசிகர்கள் மோதிக்கொண்டு இறந்துபோனது. அதை மடை மாற்றக்கூட விளையாட்டு செய்தியாளரின் எக்ஸ் பதிவை ரீட்வீட் செய்திருக்கலாம். மக்களின் கவனத்தை திசைதிருப்பி செய்தியாளரை பலியாடாக மாற்றியிருக்கலாம்.
ஒரு பத்திரிகையாளர் டிஜிட்டல் காலத்தில் சமூகவலைதளத்தில் தனது நக்கல், கரிய அங்கதம் ஆகிய இயல்புக்காக பிறரால் அதிகம் தொடரப்படும் நபராக இருக்கலாம். ஆனால், அதுவே அவரை மரபான இதழியலுக்கு மாற்றாக ஆக்காது. இதழியலுக்கான செல்வாக்கை சமூக வலைத்தளம் அதிகரிக்கிறது. அவ்வளவுதான். இன்று இணையத்தில் எழுதுபவர்களை ஊடக நிறுவனங்கள் இதழியலில் மகா பண்டித்தியம் கொண்டவர் என வேலைக்கு எடுக்கிறார்கள். அறியாமை காரணமாக நக்கலடிப்பது, சில வரிகளில் பிறரை இழிவுபடுத்துவது, ஆங்கில திரைப்படங்களில் இருந்து கதையை அப்படியே திருடி குழந்தைகள் நாவலாக்குவது, சுயநலனுக்காக காசு கிடைக்கும் என்றால் பிறருடைய தகவல்களைக் கூட விற்பது ஆகிய திறமைகள் கொண்டவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். காலத்திற்கேற்ற சாமர்த்தியம் இதுதானோ?
சமூக வலைதளங்கள் பொதுவாகவே அரட்டை அடிக்க ஏற்புடையவை. அங்கு வலைப்பூ, வலைதளங்கள் வைத்திருப்பவர்கள் பொருட்களை விளம்பரம் செய்யலாம். மற்றபடி வெட்டிப்பேச்சுதான் முதன்மை. அனைத்திலும் பொழுதுபோக்குவேண்டும் என தெலுங்கு சினிமா ஆட்கள் போல. படம் எத்தனை சீரியசான கதையாக இருந்தாலும் காரசார புளிச்சகீரை துவையல் போல குத்துப்பாட்டு எங்கே என எதிர்பார்ப்பார்கள். உடனடியாக செய்திகளை சுருக்கமாக வெளியிட வெய்போ,எக்ஸ், ப்ளூஸ்கை போன்ற தளங்கள் உதவுகின்றன. இதிலும் போலிசெய்தி, வெறுப்பு செய்திகளையே சமூக வலைதள நிறுவனங்கள் அல்காரிதம் மூலம் ஊக்குவிக்கின்றன. அந்தவகையில் ஆக்கப்பூர்வ செய்திகளை விட எதிர்மறை செய்திகளே அதிகம் பரவலாகின்றன. திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.
இந்த வகையில் தனிநபர் ஊடகத்தில் சேர்ந்து ஊடகப்பெயரில் சமூக வலைதள கணக்கை தொடங்கினால் நிகழ்ச்சி தொடர்பான விஷயங்களை விளம்பரம் செய்யலாம். அங்கிருந்து விலகினால் அதை மூடிவிடலாம். ஆனால், ஊடகங்களில் சேரும் முன்னரே, சமூகவலைதள கணக்கு தொடங்கி அதில் பிரபலமும் அடைந்திருந்தால் அல்லது அடையாமல் இருந்தாலும் பரவாயில்லை. அதை தனியாக பராமரிப்பதே நல்லது. வேலை செய்யும் நிறுவனம் பற்றிய தகவல்களை வெளியே சொல்லாமல் இருப்பது நல்லது. நிறுவனத்தின் கருத்தியல் வேறு, தனிநபரின் கருத்தியல் வேறு. அவை எக்காலத்திலும் ஒன்றுபட்டு இருப்பது கடினம். ஊடகவியலாளர்கள் தம் கணக்குகளை வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து பிரித்து தனியாக பிரித்து பராமரிப்பதே நல்லது.
நன்றி
சேஜ் தி ஹேண்ட்புக் ஆப் டிஜிட்டல் ஜர்னலிசம்
Translated by the author. Original post, published
5 August on https://www.facebook.com/fredrik.
graesvik, read: ‘Fra og med nå er dette en privat
konto. Jeg ber dere som er venner med meg uten
å kjenne meg om å slette meg som venn. Dere er
noen tusen, så det er lettere for dere enn meg.
Fom mandag er alle statusoppdateringer fra meg
og har ingenting med Tv2 å gjøre’. Græsvik pub-
lished a similar message on Twitter.//2 Translated by the author. Original post, published
7 August on https://www.facebook.com/fredrik.
graesvik, read: ‘Som privatperson kan jeg melde
at Gazakrigen så langt har kostet 415 barn livet.
På begge sider’. //3 Translated by the author. Original tweet: ‘Ber alle
om unskyldning, dette skjer ikke igjen. Beklager’.
The original tweet (‘Well, at least we didn’t kill
any fans’) was published in English.
#இதழியல் #பாலஸ்தீனம் #இஸ்ரேல் #பத்திரிகையாளர் # ஊடகவியலாளர் #ட்ரோல் #விமர்சனம் #மன்னிப்பு
#private account #tv2 #norway #famouse #trending #palastine #israel #war #pokram #human #love #sympathy

கருத்துகள்
கருத்துரையிடுக