சோனம் வாங்சுக் எனும் கல்வியாளர் லடாக்கை எப்படி மாற்றினார்? - லடாக்கில் உதிக்கும் சூரியன்
லடாக்கில் உதிக்கும் சூரியன்
தன் அறிவைக் கொண்டு சமூகத்திற்கே புதிய பாதை அமைக்கும் மனிதநேய மனிதர்களுக்கு மகுடம் சூட்டி உச்சிமுகர்ந்து பாராட்டும் ரோலக்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சி(லாஸ் ஏஞ்சல்ஸ் 2015) அது. கண்கவர் மேடையில் இந்தியாவிற்கான தனித்துவ கனவை தன் மூளையில் சுமந்துகொண்டு அமர்ந்திருந்தார் சிறிய மனிதரொருவர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள லடாக்கின் ப்பே என்ற கிராமத்தைச் சேர்ந்த அம்மனிதர், பாரம்பரிய உடையில் மக்கள் பங்களிப்புடன் தான் கட்டிவரும் சுற்றுச்சூழலுக்குகந்த பல்கலைக்கழகம் பற்றிக் கூறியது அங்கிருந்த பலரது புருவத்தையும் உயர வைத்தது. கண்டுபிடிப்பாளர் சோனம் வான்சுக் என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் 3 இடியட்ஸ் ஹிந்தி திரைப்படத்தின் அமீர்கான் கேரக்டரான புன்சுக் வாங்குடுவின் அசல் இவர்தான் என்றால் உங்களுக்கும் புரிந்திருக்குமே!
1988 ஆம் ஆண்டு லடாக்கில் அப்பகுதி மாணவர்களுக்காக செக்மோல்(Student's Educational and Cultural Movement of Ladakh(SECMOL)) என்ற பள்ளியை தொடங்கி நடத்திவரும் சோனம் வாங்சுக், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பட்டதாரி. பட்டம் பெற்றவுடன் அமெரிக்கா செல்ல விசாவுக்காக க்யூவில் நிற்காமல், மாநில அரசின் உதவியுடன், அவர்களது பாடப்புத்தகங்களை மக்களின் மொழியில் புதிதாக மாற்றியமைத்த இவரின் செயல்பாடு பல்வேறு மாணவர்களுக்கும் கல்விவாசலின் திறப்பு. "லடாக் என்னுடைய வீடு. வீட்டில் தங்காமல் வேறு எங்கு நான் செல்வது? கல்வியின்றி தடுமாறும் லடாக் மக்களுக்கு தேவையான கல்விச் செயல்பாடுகளை செய்தபின்தான் அடுத்தபணி" தலைகோதும் காற்றை ரசித்தபடி பேசுகிறார் வான்சுக்.
கல்லூரியில் பிடெக் படிப்பின்போதே, தன் செலவுகளுக்காக மாணவர்களுக்கு ட்யூஷன் எடுக்கத் தொடங்கிய வான்சுக், பல்வேறு பிரச்னைகளுக்கும் கல்வி ஒரு முக்கியமான தீர்வென்பதை மைக்ரோநொடியில் உணர்ந்து மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதை தன் படிப்பு முடிந்த பின்னரும் தொடர்ந்திருக்கிறார். "இங்கு ஒவ்வொரு நிலப்பரப்புக்குமான கல்வியின் தேவை வேறுவேறு. இந்தியா முழுக்கவுமான ஒரே கல்வி பொருத்தமற்றது. கல்வி, தீர்வுதான் என்றாலும் இங்குள்ள பிரச்னைகள், சிக்கல்கள் பலவகை எனும்போது கல்வி எப்படி ஒரே மாதிரி அமையமுடியும்?" என்ற வாங்சுக் கேட்ட லாஜிக் கேள்வி திகைக்க வைக்கிறது.
மாணவர்களின் உழைப்பில் சோலார் திறனால் இயங்கும் மண்ணால் கட்டப்பட்ட மாற்றுப்பள்ளியான செக்மோலில், பள்ளியில் தேர்ச்சியிழந்தவர்கள், ஏழ்மையால் கல்வி பெற இயலாதவர்கள் என 1000 மாணவர்களுக்கு மேலாக கல்வி பயில்வது ஆச்சரியம்தான். "வீடு பற்றி எரியும்போது, அதை அணைக்க நீரள்ளி வீசுகிறோம். அப்படி செய்வதற்கு எது தூண்டியது என்று கேட்பீர்களா? தன்னார்வம்தான். கல்வி வாய்ப்பில்லாதவர்கள், தேர்ச்சி பெறாதவர்களைக் குறித்து இங்கு யாரும் அதிக கவனம் கொள்வதில்லை. ஆனால் நான் இதனை முக்கியமாக கருதுகிறேன்" என்று வான்சுக் ஆழமாக கேட்கும் பதிலிலுள்ள கேள்வி ஊசியாய் நெஞ்சை துளைக்கிறது.
லடாக்கின் தனித்துவ பிரச்னையாக ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் வேகமாக உருகும் பனிப்பாறைகளால் நீர் பற்றாக்குறையை சந்தித்து வந்தது. வாங்சுக் இதற்கான தீர்வாக பனிப்பாறைகளை குவித்து பனிக்கட்டி கோபுரமாக(ஐஸ் ஸ்தூபி) கட்டி வைக்கும் ஐடியாவை கண்டுபிடித்து விவசாயிகளின் வயிற்றில் தேன் வார்த்தார். இந்த ஐடியாவிற்கான கௌரவம்தான் ரோலக்ஸ் மரியாதையும் கூட.
தற்போது ஹிமாலயன் இன்ஸ்டியூட் ஃபார் ஆல்டர்நேட்டிவ்ஸ்(HIAL) என்ற பல்கலைக்கழகத்தை லடால் மக்களின் சிக்கல்களுக்கு தீர்வு காணும்முறையில் தீயாய்வேலை செய்து உருவாக்கி வருகிறார். "நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை சரியாக அடையாளம் கண்டு பயன்படுத்தினாலே போதும். உயரமான மலைகளிலிலிருந்து ஒப்பற்று கிடைக்கும் சூரிய ஒளியை நாங்கள் 20 ஆண்டுகளாக பள்ளியின் மின்சார தேவைக்கு பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலப்பரப்பிற்கான சூழல் தீர்வுகளை சிபிஎஸ்சி பாடத்திட்டமோ, நியூயார்க் (அ) டெல்லி ஆலோசனைகளோ நிச்சயம் தராது.
" லடாக் மக்களுக்கான புதிய மாற்று முறை பல்கலைக்கழகம் குறித்து, புதிய பல்கலைக்கழகம் மாணவர்களிடமிருந்து பெறும் குறைந்தளவு தொகையின் மூலமே நடைபெறும். ஹோட்டல் மற்றும் சுற்றுலா திட்டங்களின் மூலம் பல்கலைக்கழகம் தனக்கான நிதியைப் பெறும். மக்களிடமிருந்தும், சிறிதளவு தொகையை வணிக நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட அளவை நன்கொடையாக பெற்று அதனை முதலீடாக்கி திரும்பத் தருவதாக திட்டம். தொண்டு நிறுவனம் பிளஸ் நிறுவனமாகவும் இப்பல்கலை செயல்படும்" என ஏக உற்சாகமாக பேசும் சோனம் வாங்சுக்கின் முகத்தில் பூரண நிறைவின் அழகு.
1
ஐஸ் ஸ்தூபி
40 உயரம் கொண்ட இந்த ஐஸ் ஸ்தூபியில் 160 லட்சம் லிட்டர் நீரை சேமிக்க முடியும். ஏறத்தாழ 10 ஹெக்டேர் நிலங்களுக்கு பயன்படுத்தலாம். மறுசுழற்சி, மறுபயன்பாடு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் உருவான இந்த ஐஸ் ஸ்தூபியில் நீர் கொண்டுவர உதவும் பைப்புகளே கோடைகாலத்தில் நீர்த்தேக்கமாகவும் பயன்படுகிறது. ஐஸ் ஸ்தூபியைக் கட்ட 83 லட்சத்து 97 ஆயிரத்து 264 ரூபாய் செலவாகியுள்ளது. பாலைவனமாக கிடந்த பியாங் பகுதி மக்கள் ஏப்ரல் மே மாதங்களில் விவசாயம் குடிநீருக்காக பட்ட கஷ்டங்கள் இனி இல்லை. தற்போது குடியேற்றங்கள் தொடங்கியுள்ள அப்பகுதியிஙல் 40 ஆயிரம் மக்கள் வசிக்கலாம்.
2
லடாக் மாற்று பல்கலைக்கழகம்- பள்ளிக்கு வெளியே வானம்
120 ஏக்கர்களில் பரந்து விரிந்து உருவாகவுள்ள புதிய மாற்றுக்கல்வி முறை பல்கலைக்கழகத்தில் 6 ஆயிரத்து 326 வீடுகள், உணவு விடுதிகள், காய்கறித்தோட்டங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. சைக்கிள் மற்றும் இபைக்குகளுக்கு மட்டுமே அட்மிஷன். வகுப்பறைகளுக்கு, ஆய்வகங்களுக்கு செல்ல நடைபாதை வழி உண்டு. உணவு, நீர் என இரண்டையும் பல்கலை வளாகத்திலேயே பெறும் வசதி கூடுதல் பிளஸ். கட்டிட வடிவமைப்பு லடாக் கலாசாரமே அடிப்படை. விவசாயப் பண்ணைகள், விற்பனைக் கடைகள், காடுவளர்ப்பு பகுதிகள் விவசாய சோதனை முறைகளுக்கான நிலங்கள் ஆகியவையும் இதில் உள்ளடங்கும். வகுப்பறை கல்வியை விட, அதற்கு வெளியே கற்கும் வாய்ப்புகளே அதிகம். தொழில்முனைவோராக மாணவர்கள் செயல்பட தரும் வாய்ப்புகளால் அவர்களுக்கு தன்னம்பிக்கை, மக்களோடு கலந்துரையாடுவது, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கான அடிப்படைகளை அரவணைத்து கற்றுத் தரும் பல்கலைக்கழகம் இது.
குங்குமம் இதழில் எழுதிய கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

#சோனம் வாங்சுக் #கைது #தேசதுரோகம் #செக்மோல் #வெளிநாட்டு நிதி #கல்வியாளர் #கண்டுபிடிப்பாளர் #லடாக்
#sonamwangchuck #arrest #bjp #ladak #statehood #protest #education #secmol #education #inventor

கருத்துகள்
கருத்துரையிடுக