யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் எடிஷன் - வங்கி சொன்ன அறிவுரை - உன் அறிவின் ஒளியில் ஏகு நீ முதலில்...
யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் எடிஷன்
உன் அறிவின் ஒளியில் ஏகு நீ முதலில்...
ஒன்றாக சேர்ந்து நாம்.... என தலைப்பு கொண்டுள்ள வங்கிதான் நான் பத்தாண்டுகளாக கணக்கு வைத்துள்ளது. தொடங்கியபோது எப்படியோ இன்றுவரை அப்படியேதான் உள்ளது. மாற்றம் என்னவென்றால், நிறைய கட்டுப்பாடுகள் பெருகியுள்ளன. பணம் பிடுங்குதலையும் நாற்காலியில் அமர்ந்துகொண்டே நிதானமாக கணினியை தட்டி செய்கிறார்கள். அதையும் கூட 120 ரூபாயை இழந்துதான் கற்றுக்கொண்டேன். பொதுவாக வங்கிகளுக்கு புகார் அளித்து அதன் வழியாக இழந்த தொகையை பெறுவது பிரம்ம பிரயத்தன முயற்சி. பெரும்பாலும் காசு கிடைக்காது. ஏன் காசு கிடைக்காது என்பதற்கு ஈகுவிட்டி பங்கு விளம்பரம் போது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது என வேகமாக இரண்டு பத்தியை ஒரு குரல் படிக்குமே... அந்த ரீதியில் விதிகளை காரணம் காட்டுவார்கள்.
வங்கியில் இருந்து ஏடிஎம் வழியாக பணம் பெறுவதைப் பற்றியும் அதன் கட்டுப்பாடுகளையும் ஏற்கெனவே கூறிவிட்டேன். ஏடிஎம்மில் பணம் எடுக்க ஒன்றாக சேர்ந்து... வங்கி மாதம் ஐந்து முறை இலவச வாய்ப்புகளை தருகிறது. அதைப் பயன்படுத்தி ஒருவர் தினசரி 25 ஆயிரம் என்ற வகையில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் எடுக்கலாம். பிற ஏடிஎம் என்றால் இலவச வாய்ப்புக்கு பிறகு தலா ஒருமுறைக்கு ரூ.100 பிடுங்குவார்கள். இதில் கட்டணம் கூடவே பார்ப்பன நிதியமைச்சர் போடும் ஜிஎஸ்டி வரிகள் தனி.
வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு சென்றிருந்தேன். மூன்று முறை பணம் டெபாசிட் செய்தபிறகு, சுவரில் பார்த்த நோட்டீஸ் ஒன்று சந்தேகம் எழுப்பியது. உடனே காசாளரிடம் கேள்வியைக் கேட்டேன். மாதம் தோறும் பணம் கட்ட ஏதாவது வரம்புகள் உண்டா? என்று அவரோ, டெபாசிட் வரம்பு என்றால் பணவரம்பு பற்றி சொன்னார். மூன்று முறை இலவச வரம்பு பற்றி கூறவில்லை. என்னிடம் போன் நம்பர் வாங்கி ஓடிபியை கணினியில் நிரப்பி தனக்குத்தானே சபாஷ்டா தம்பி என பாராட்டிக்கொள்ளும் உத்வேகத்தில் இருந்தார். ஏற்கெனவே ஒருமுறை என்னிடம் ஓடிபி வாங்கி தன்னைத்தானே பாரட்டிக்கொண்ட வரலாறு அவருக்குண்டு. எதற்கு ஓடிபி என தெரியாமல் முதலில் கொடுத்துவிட்டேன். பிறகு பார்த்தால், தன்னை பாராட்டிக்கொள்ளும் சுயமோக மனிதர் காசாளர் என பின்னர்தான் தெரிந்துகொண்டேன். ஒன்றாக சேர்ந்து... வங்கி ஏன் அப்படியே இருக்கிறது என்றால்... அப்படியாயினும் உயிரோடு இருக்கிறதே என்று மகிழ வேண்டியதுதான். இனி புகார் காண்டத்திற்கு வருவோம். மாதம் மூன்றுமுறை டெபாசிட் என்ற அளவை தாண்டியபோது கணக்கில் இருந்து 120 பிடித்துக்கொண்டார்கள். அதை ஏன் என்று கடிதம் எழுதி கேட்டபோது, நாங்கள் வங்கியில் போர்டில் தகவல் எழுதி வைத்திருந்தோம். வங்கி வலைத்தளத்தில் இருக்கிறது. என்று பதிலை வங்கி தரப்பு தெரிவித்தது. அதாவது, அந்த வங்கி ஊழியர் என்னிடம் தவறான தகவலை தெரிவித்தது பற்றி புகாரில் கூறியும் அதுபற்றி ஏதும் குறிப்பிடவில்லை.
வங்கி காசாளர் ரேட்டிங் கொடுப்பது பற்றி போன் நம்பர் கேட்டு தொடர்ச்சியாக நச்சிக்கொண்டே இருந்தார். அதைக்கூட புகாரில் நான் கூறவில்லை. ஆனால், வங்கி விதிகளைப் பற்றி அவர் சொல்லியிருந்தால் ரூ.120 ரூபாய் மிச்சமாகி இருக்கும். ஆனால் என்ன பிரயோஜனம்? காலம் கடந்த ஞானோதயம்? 120 ரூபாயை இழந்து உன் அறிவின் ஒளியில் ஏகு நீ முதலில் என்ற பாடத்தை வங்கி அளித்த புகாரின் வழியாக தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வங்கியைப் பொறுத்தவரை கத்தியில்லை, ரத்தமில்லை. குற்றவாளி ஓடவும் மாட்டான். ஆனால், நீங்கள் நூதனமாக பணத்தை இழந்திருப்பீர்கள். மிளகாயை முகத்தில் எறியாமல் பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள். காலம் மாறுகிறது. திருடர்களும் கூட அடையாள அட்டை, பிராண்டட் சர்ட் அணிந்து வங்கியில் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஒன்றாகச் சேர்ந்து நாம் என தலைப்பு கொண்ட வங்கியைப் பார்த்தால், ஒன்றாக சேர்ந்து உங்களிடம் பணத்தை உறிஞ்சி தின்று கொழுத்துவிட்டு பிறகு அவனது பிணத்தை தூக்கிக்கொண்டு போவீர்களா என்றுதான் கேட்கத்தோன்றுகிறது. ஆகவே, வங்கியின் பெயருக்கு கீழே உள்ள தலைப்புக்கும் அதன் செயல்பாட்டிற்கும் பெரிய தொடர்பில்லை. காலப்போக்கிலாவது தொடர்பு வந்துவிடக்கூடுமோ என தைரியத்தில் தலைப்பு வைக்கிறார்கள்.
பிறரின் உதவிக்கு ஏங்காதே, உன் அறிவின் ஒளியில் ஏகு நீ முதலில் என்ற துறவி துக்கராமின் பாடலை நினைவில் கொள்ளவேண்டும். அதுதான் இன்றைக்கு அரசு அமைப்புகள் ஒவ்வொன்றாக உடைந்து அழுகிக்கொண்டிருக்கிற காலத்தில் தேவை. வங்கியும் பெரிய விதிவிலக்கில்லை. எனவே, வங்கிக்கு போனால் அல்லது போவதற்கு முன்னால் வங்கி வலைத்தளத்தில் பணம் கட்டுவது எடுப்பது பற்றி தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள். பிறகு செல்லுங்கள். மற்றபடி வங்கி ஊழியர்களையும் கூட தெருவில் உள்ள மனிதர்களாகவே பாவியுங்கள். கையிலுள்ள பணம் பத்திரம். வங்கி ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள் அல்லது உதவக்கூடும் என நம்பாதீர்கள். நம்பிக்கையின் வேரில்தான் துரோகம் முளைவிடுகிறது. மறக்காதீர். ஒரு வங்கியில் கணக்கு இருந்தாலும், வேறு வகையில் ஏதேனும் சிறப்பாக இயங்கும் வங்கி அரசு, தனியாரில் இருக்கிறதா னன தேடுங்கள். அதுதான் ஒரே வழி.
தலைப்பு - துறவி துக்கராம்
நன்றி மொழிபெயர்ப்பாளர் திஅ ஶ்ரீனிவாசன்
கருத்துகள்
கருத்துரையிடுக