பத்திரிகையாளர் த சக்திவேல் - மன அழுத்தம் குறைத்த மனிதர்
பத்திரிகையாளர் த சக்திவேல் - மன அழுத்தம் குறைத்த மனிதர்
சக்திவேல் அவர்களை நான் அடிமாட்டு சம்பளம் வாங்கிக்கொண்டு நாளிதழ் குழுமத்தில் பணியாற்றும்போது சந்தித்தேன். பொதுவாகவே அந்த நிறுவனத்தில் கலாசாரம் என்னவெனில், வெளி ஊடகம் என்றால் வரவேற்பு, விருந்து சாப்பாடு என மரியாதை அமோகமாக இருக்கும். புதிதாக வருபவர்கள் என்றால் ச்சீ, தூ போ அங்கே உட்கார் என்பார்கள். இப்படியான கலாசாரத்திற்கு அங்கு வேலை செய்தவர்களும் முக்கிய காரணம். பலரும் நிறுவன அடிமைகள். அதாவது நாளிதழ் குழுமம் ஆதரித்த கட்சிக்கு விசுவாசமாக இருந்து பயனை அனுபவிக்க துடித்த கூட்டம். பக்க வடிவமைப்பாளர்கள் பலரும் கல்வி அறிவற்றவர்கள். தேநீர், காபி கொடுக்கும் பணியாளர்களாக இருந்து வடிவமைப்பாளர்களாக மாறியவர்கள். தொழில் இப்படி மேம்பட்டாலும் அவர்களின் குணம் என்பது தெருவோரத்தில் நின்று சண்டைபோடும் ஆட்களைப் போலத்தான் இருக்கும். படித்தவர்கள், நாகரிகமானவர்கள் என யாரை அடையாளம் கண்டாலும் தாழ்வுணர்ச்சியில் வெந்துபோவார்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மரியாதைக் குறைவாக பேசுவார்கள். அவதூறு, வதந்தி பரப்புவார்கள். முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள். இதிலும் சிபாரிசு உண்டு. முழு முட்டாள், மூர்க்கனை சிபாரிசு செய்வான். பலன், அமோகமாக இருக்கும். இந்த நாகரிகமற்ற போக்கு எதுவரை போகும் என்றால், அலுவலக வேலையையும் அதற்கு பயன்படுத்திக்கொள்வார்கள். புத்த துறவி ஹனிம் சுனிம் கூறுவது போல மிகப்பெரிய பரந்த உலகில் சில பைத்தியக்காரர்கள்....
நம்பர் 1 வார இதழ் குழுமத்தில் பணியாற்றிவிட்டு வந்தவர். தொழில் தொடர்பான மாத இதழ்களில் பணியிலிருந்தவரை , நான் வேலை செய்த குழுமத்தில் வெகுசன வாரஇதழ் சினிமா நிருபர் பரிந்துரைத்தார். இந்த பத்திரிகை நிறுவனத்தைப் பொறுத்தவரை திறமை என்றால் கத்திரித்த முடிக்கு சமானம். அனைத்துமே சிபாரிசுதான். அதன் அடிப்படையில்தான் உங்களுக்கு சம்பளம், இன்க்ரிமென்ட், போனஸ் என அனைத்துமே வரும். குறிப்பாக யாருடைய ஆள் நீங்கள் என்பது முக்கியம். பத்திரிகையாளர் சக்திவேல், இதுபோல அரசியல் சமாச்சாரங்களில் பெரிதாக ஈடுபடக்கூடிய ஆள் இல்லை. முதலில் அவர் பெற்று வந்த சம்பளம் எனக்கு பொறாமையைக் கொடுத்தது. உழைக்கிறவர்களுக்கு இல்லை என்கிறார்கள். ஆனால் சிபாரிசு என்றால் அள்ளிக் கொடுக்கிறார்களே என்று கோபம் வந்தது. பெரும்பாலும் நானும் அவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்யும் சூழல் இல்லை. அவர் வெகுசன வார இதழில் தலைமை உதவி ஆசிரியராக இருந்தார். நான் குழந்தைகளுக்கான பொதுஅறிவு வார இதழில் வேலை செய்தேன். பெயருக்குத்தான் அந்த இதழுக்கு பொறுப்பு. ஆன்மிகம், வேலைவாய்ப்பு, வெகுசன இதழ் ஆகியவற்றில் எழுதுபவர்களுக்கு பணத்தை தபால்துறை வழியாக அனுப்பும் கிளர்க் பணியும் எனக்கே எனக்குத்தான். என்னென்னமோ இணைப்பிதழ்கள், பதிப்பக பணிகளை எல்லாம் செய்தேன். சம்பளம் அடிமாட்டு சம்பளம்தான். இதெல்லாம் மனதில் ஓட சக்திவேல் சாரோடு பேசக்கூட தோன்றவில்லை. என் அருகில் அமர்ந்திருந்த வெகுசன வார இதழ் நிருபர் கூட தினசரி பேச்சுக்கு இடையில் சக்திவேலின் சம்பளம் பற்றிய பொறாமையை ஒருமுறையேனும் வெளிப்படுத்தி விடுவார். இன்னொருவர் மீது பொறாமைப்பட்டு, கோபமுற்று என்ன பயன்? அடிப்படையில் சம்பளத்தை கவனமாக பேசாதது என்னுடைய தவறுதான் என பின்னர் புரிந்துகொண்டேன். பிறகு, சக்திவேல் சாரிடம் பேசத் தொடங்கினேன். அவரிடமுள்ள கற்றுக்கொள்ள வேண்டிய குணம், அலுவலகத்திற்குள் மட்டும்தான் வேலை. அங்கிருந்து வெளியே சென்றுவிட்டால் அதைப்பற்றி பேசவே மாட்டார். நெகிழ்வாக தேநீர், சுவையான பலகாரம், உணவு அருந்திக்கொண்டு வாழ்வை அனுபவிப்பதுதான் அவரது பாணி.
அவர் தலைமை உதவி ஆசிரியர் என்றாலும் அவருக்கே கட்டுரைகள் செல்லாமல் திருத்தப்பட்டதையெல்லாம் என்ன சொல்வது? அது அந்த வார இதழில் இருந்த சீனியர், ஜூனியர் மேலாதிக்க பிரச்னைகள். அனுபவிக்க கிடைத்த எந்த நொடியையும் தவற விடாத மனிதர். வேலையை செய்யும்போது தீவிரமாக எடுத்துக்கொள்வார். அவ்வளவுதான். மற்ற நேரங்களில் அதைப்பற்றி பேசுவது, பதற்றம் அடைவது என்பதை நான் பார்த்ததே கிடையாது. நிறுவனம் கட்டுமானம் சார்ந்து செயல்பாட்டை தொலைதூர நகர் ஒன்றுக்கு மாற்றியது. அங்குதான் நாளிதழ், வார இதழ் அச்சுப்பணிகள் நடைபெற்றன. அங்கு சென்றபிறகு நானும் சக்திவேல் சாரும் நெருக்கமானோம். நான் அதிகமாக பலரிடமும் உரையாடமும் குணம் கொண்டவனல்ல. சக்திவேல் பலரிடமும் பேசுவார். அவருக்கு பெரும்பாலும் திரைப்படங்கள் பிடிக்கும். தினசரி மூன்று திரைப்படங்களைப் பார்க்க கூடியவர். அநேகமாக அத்துறை சார்ந்து பின்னாளில் எழுத்தாளரோ, திரைக்கதை ஆசிரியரோ கூட ஆகலாம். நாம் செய்யும் செயல் நம்மை அந்த இடத்திற்கு கூட்டிச்செல்லும் என நம்புகிறேன்.
தேநீர் அருந்துவதில் அவருக்கென தனி ரசனை இருந்தது. அதை அவர் எங்குமே விட்டுக்கொடுத்ததில்லை. பாரடைஸ் என்ற பிரியாணிக்கடை, காலையில் தேநீரை, பிஸ்கட்டுடன் விற்பார்கள். இரண்டுமே பிரமாதமாக இருக்கும். தேநீர் சற்று கெட்டியாக இருக்கும். பால் தண்ணீர் ஊற்றாத காரணமோ என்னவோ? பிஸ்கட் அவர்களே போட்டார்கள். மென்மையானது. சாப்பிட சுவையானது. அதற்கே அங்கு ஏகப்பட்ட கூட்டம் கூடும். நாங்கள் வேலை செய்த அலுவலகத்திலிருந்து அப்படியே கிழக்கே வந்தால் தரமணி சாலை வந்துவிடும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏராளம் இருந்தன.
ஆந்திரா உணவகங்களும் அங்கு நிறைய இருந்தன. உண்மையைச் சொன்னால் நான்கு திசைகளிலும் பல்வேறு வகையான உணவுகளை பரிமாறும் நிறுவனங்கள். ஓட்டல்கள் இருந்தன. தகவல் தொழில்நுட்ப பணியல்லவா? நிறைய காசு புழங்குகிற இடம். நானும், சக்தி சாரும் சேர்ந்து தேநீர் அருந்துவது பாரடைசில்தான். காலை, மாலை இருவேளைகளிலும் கூட்டம் அதிகம். சில நாட்களில், ஸ்வீட் சாப்பிடலாமா என்பார். அப்படி என்றால், உயர்தரமான ஏதாவது கடைக்கு போக தயாராகிவிட்டார் என்று அர்த்தம். பாரடைஸ் ஓட்டலுக்கு அருகில் வட இந்திய இனிப்பு பலகாரம் விற்கும் கடை இருந்தது. கடையோடு, மேற்தளத்தில் உணவகமும் இருந்தது. கீழ்தளத்தில் இனிப்பு, மேற்தளத்தில் உணவகம். இந்த இனிப்பகத்தில் நிறைய இனிப்புகளை சக்தி சாரோடு சேர்ந்து உண்டிருக்கிறேன். சாப்பிடாதை சாப்பிடவேண்டும் என்பதே அவரது லட்சியம். நானும் அதற்கு குறுக்கே நின்றதில்லை. நூறு கிராம் வாங்கி சாப்பிடுவோம். இனிப்போ, பாரடைஸ் பிரியாணியோ, கேரளத்தின் சாப்பாடோ செலவிடும் தொகையில் பாதியை நான் பகிர்ந்துகொள்வேன். உறவு முறிந்தால் செலவழித்த பணம்தான் பூதாகரமாக முன்னே நிற்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்தேன். வார இதழ் தயாரிப்பில் என்ன பிரச்னை என்றால் அதில் ஈடுபடும் நிருபர்கள் தம்முடைய வாழ்பனுபவம், வாசிக்கும் அனைத்தையும் செய்திக்கட்டுரை ஆக்க முடியுமா என்று பார்ப்பார்கள். இதுவொரு உளவியல் நோய்க்கூறு. சக்திவேல் சாரைப் பொறுத்தவரை அவர் திரைப்படங்களைப் பற்றித்தான் எழுதுவார். ஆனால், அதில் எந்த விமர்சனமும் இருக்காது. படத்தின் கதையை மட்டும் சொல்லிவிட்டு அப்படியே நகர்ந்துவிடுவார். நாளிதழ் குழுமமே படத்தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்திருந்தது கூட காரணமாக இருக்கலாம். ஆனால், அவருடன் படம் பார்த்தால், பார்த்த பிறகு சொல்லும் விமர்சனங்கள் வெடிச்சிரிப்பை உருவாக்க கூடியது.
வேறொரு நிறுவனத்திற்கு வேலை செய்யப்போன பிறகு, அங்குள்ள சூழல் எனக்கு பிடிபடவில்லை. உண்மையில் அது நிறுவனமா, பைத்தியக்கார விடுதியா என்றே தெரியவில்லை. வாரம் ஆறு நாள் வேலை. அப்படி பாடுபட்டு வேலை பார்த்தும் எந்த வேலையும் முடியவும் இல்லை. செய்த வேலைகள் திருப்தியாகவும் வரவில்லை. ஞாயிறு மட்டுமே விடுமுறை. அந்த நாளில், பெரும்பாலான கடைகள் மதியத்தில் மூடப்பட்டு விடும். நகரின் மையத்தில் உள்ள வணிக தெரு மட்டுமே திறந்திருக்கும். அதுவும் கூட்டநெரிசலில் விழி பிதுங்கும். நான், சக்திவேல் சார்க்கு போனில் அழைத்து அவரது அறைக்கு வரலாமா என்று கேட்பேன். சில நாட்களில் அவருக்கு தனிப்பட்ட வேலைகள், பயணம் இருக்கும். அப்போது தவிர பெரும்பாலான நாட்களில் என்னை வரச்சொல்லி இருக்கிறார். காலையில் நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வடபழனியில் உள்ள கேம்பஸ், காப்பர் கிச்சன், தள்ளுவண்டி கடைகளில் சாப்பிட்டிருக்கிறோம். பெரும்பாலும் மதிய உணவு சாப்பிடும் நேரம் நான் இருப்பதில்லை. ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு உடனே கிளம்பிவிடுவேன். சக்தி சாருக்கு ஏகப்பட்ட திரைப்படத்துறை நண்பரகள் உண்டு. நூல்கள் வாசிப்பு, திரைக்கதை எழுதுவது, நண்பர்களோடு சேர்ந்து திரையரங்குகளுக்கு செல்வது என பரபரப்பாக இருப்பார். இப்படி பார்க்கும் படங்கள்தான் வெகுசன இதழில் கட்டுரைகளாக மாறும்.
சக்தி சாரின் வேலைச்சூழல் பற்றியோ, என்னுடைய வேலைச்சூழல் பற்றியோ இருவரும் பேசிக்கொண்டதேயில்லை. இப்படி இருக்கவேண்டும் என பேச்சை நான் திட்டமிட்டதில்லை. அது, தானாகவே அப்படி நடந்தது. உணவு, தேநீர் செலவை பகிர்ந்துகொண்ட பிறகு நான் கிளம்பிவிடுவேன். அவருடன் சேர்ந்து பார்த்த திரைப்படங்கள், அனுபவங்களை விரிவாக்கிக்கொள்ள உதவின. அவரிடம் பெற்ற நூல்கள், என் அறிவை விரிவாக்கின. பார்வையை ஆழப்படுத்தின. கைகடிகாரம் ஒன்றை ஆன்லைனில் வாங்குவது பற்றி யோசித்தேன். ஆனால், அப்படி வாங்குவது பற்றிய தயக்கம், சந்தேகங்கள் இருந்தன. அதுபற்றி கூறியதும், தன்னுடைய கணக்கு வழியாக கடிகாரத்தை வாங்கிக்கொடுத்தார். நான் அதற்குரிய விலையைக் கொடுத்துவிட்டேன். பிறகு எனக்கு இணையத்தில் பொருட்களை வாங்குவது பற்றிய தைரியம் கிடைத்தது. அவரில்லை என்றால் என்னுடைய ஞாயிற்றுக் கிழமைகள் கடுமையாக இருந்திருக்கக்கூடும். அவருடன் இருந்த நேரத்தில் வெளியுலகில் என்னை பிடுங்க காத்திருக்கும் கழுதைப்புலிகளைப் பற்றி ஏதும் எண்ணவில்லை. குறைந்தபட்சம் அந்த நேரம் மட்டும் என்று உறுதியாக கூறலாம். தரம், விலை என இரண்டிலும் உச்சம் தொடும் பொருட்களை பயன்படுத்தி வந்தவர். எனவே, நான் பயன்படுத்தும் உண்ணும் பொருட்களை எதையும் அவருக்கு கொடுக்க இயலவில்லை. அவருக்கு அவை பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்ததுதான் காரணம். மற்றபடி, சக்தி சாருடன் செலவிட்ட நேரம் அனைத்துமே முக்கியமானது.
இறுதியாக என்னிடம் கூட பெரிய வார்த்தைகள் ஏதுமில்லை. நன்றி என்ற ஒற்றைச் சொல் தவிர. நன்றி சார்.
கருத்துகள்
கருத்துரையிடுக