லவ் பார் இம்பர்பெக்ட் திங்க்ஸ் புத்த துறவி ஹாமின் சுனிம் = கடந்த காலத்தை கடந்துவிடுங்கள்!
love for imperfect things
buddhist monk haemin sunim
penguin
லவ் பார் இம்பர்பெக்ட் திங்க்ஸ்
புத்த துறவி ஹாமின் சுனிம்
பெங்குவின்
ப.276
துறவி ஒருவர் தன்னுடைய சொந்த அனுபவம், பார்த்த நண்பர்களின் வாழ்க்கை பற்றி பேசி அதற்கான தீர்வுகளை முன் வைக்கிறார். நூலின் அத்தியாயங்கள் சிறியவை. அத்தியாயங்கள் முடிந்தவுடன் மேற்கோள்கள் அறிவுறுத்தல்கள் தனியாக இடம்பெறுகின்றன. நூலை இணையத்தில் பார்த்து எப்படிப்பட்ட நூல் என்று கூட பார்க்கவில்லை. நூலின் தலைப்பைப் பார்த்தவுடனே தரவிறக்கி விட்டேன். அப்புறம் பார்த்தால், நூலின் உள்ளடக்கம் எதிர்பார்க்காதபடி சிறப்பாக இருந்தது.
கொரியாவைச் சேர்ந்த புத்த துறவி ஹாமின் சுனிம். இவர் அமெரிக்காவில் உள்ள யுசி பெர்க்லி, ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுள்ளார். அப்போதுதான் புத்தமதத்தில் ஆர்வம் உருவாகி துறவி ஆகியிருக்கிறார்.தென்கொரியாவில் தன்னார்வ அமைப்பை நடத்தி, மக்களுக்கு குழு தெரபி வகுப்புகளை நடத்தி வருகிறார். இவர், ஆன்மிக வழிகாட்டல்களைக் கொண்டு எழுதும் இரண்டாவது நூல் இது. நூலின் சிறப்பு என்னவென்றால், தான் துறவியாகிய வாழ்க்கையில் செய்த தவறுகள், தடுமாற்றங்கள், அவற்றை எப்படி எதிர்கொண்டு மேலே வந்தேன் என்பதையும் நூலில் கூறியிருக்கிறார். சுனிம் கூறும் கருத்துகள் எவையும் அழுத்தம் கொடுத்து கண்டிப்பாக கூறப்படவில்லை. வாழ்க்கையை இயல்பாக விட்டு, வரும் அனுபவங்களை கவனித்தாலே போதும் என்ற அடிப்படையில் உள்ளது. குறிப்பாக கடந்தகால பகை, வன்மம், பழிவாங்கல், சவால்கள், சுரண்டல், இழிவுபடுத்தல் ஆகியவற்றைப் பற்றிய அத்தியாயங்கள் நன்றாக எழுதப்பட்டுள்ளன. அடிப்படையில், அவர் சொல்வது நடந்து முடிந்தவற்றை திரும்ப நினைப்பதால் நிகழ்காலம் கையைவிட்டு போகிறது என்கிறார். மோசமான உலகில் பல பைத்தியக்காரர்களும் உண்டு என்று கூறுவதோடு, அவற்றை மனம் யோசித்தால் நிதானமாக மறைக்காமல் தவிர்க்காமல் கவனி என்று கூறுகிறார். இந்த அறிவுறுத்தலை பெரும்பாலானவர்கள் கூறுகிறார்களா என்று தெரியவில்லை. இன்னொரு அத்தியாயத்தில் பேஸ்பால் விளையாட்டு வீரர், உழைப்பை உள்ளீடு செய்தும் எதிர்பார்த்த பயனை வெற்றியை பெற முடியாமல் போகிறது. அதற்கு சுனிமின் உதவியை நாடுகிறார். அவரும் உதவுகிறார். ஆனாலும் வீரர் எதிர்பார்த்த பயனைப் பெறமுடியவில்லை. அதற்கு இறுதியாக அவர் கூறும் பதில், அந்த கணத்தில் என்ன முக்கியம், நம் கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறதோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்பதே.
நூலாசிரியரின் தாய் உடல் நலிவுற்று மருத்துவமனையில் சேர்கிறார். அவரை அருகே இருந்து பார்த்து பராமரித்து உடல் நலம் பெற்ற பிறகு வேறு காரியங்களை கவனிக்கத் தொடங்குகிறார். துறவியின் பற்று பற்றி இங்கு பேசுவது சரியல்ல. தனது கடமையை, பொறுப்பை அவர் நிறைவேற்றுகிறார் என்ற கருத்தை புரிந்துகொள்ளலாம். தனக்கு வந்த நோயை புறக்கணிக்கும் தந்தை பற்றி, நூலாசிரியர் எழுதியுள்ளது ஆச்சரியமான ஒன்று. இளமையில் அவரது தந்தை குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட தான் முக்கியமல்ல என்ற கருத்துக்கு வந்துவிடுகிறார். அதிலிருந்து பிறருக்காக தன்னுடைய நலனை தியாகம் செய்து வருகிறார். இதை சுனிம் அடையாளம் கண்டறிந்து அம்மனப்பான்மையை நீக்க உதவுகிறார். தனிப்பட்ட உதாரணம் என்றாலும் சிறுவயதில் குடும்பம், பெற்றோர் நமது ஆளுமையை எப்படி உருவமைக்கிறார்கள் என்பதை அறிய சொந்த அனுபவத்தைக் கோடு போட்டு காட்டியிருக்கிறார்.
மோசமான சீரற்ற உலகில் சமச்சீரற்று இருக்கிறோம். இப்படியான சூழலில் கனிவான புன்னகையை ஒருவரிடமிருந்து பெறுவது மகிழ்ச்சி என்ற கருத்தை நூல் இறுதியாக தருகிறது. வாழ்க்கையிலுள்ள தடைகள், கல்வியிலுள்ள தடுமாற்றங்கள், எதை தேர்ந்தெடுப்பது என்று வரும் குழப்பம், அலுவலக அரசியல், இழிவுகள், வசைகள், அவமானங்கள் என பல்வேறு இடங்களை சுட்டிக்காட்டி இயல்பான வாழ்க்கையின் போக்கில் அதை எதிர்கொள்வதற்கான தீர்வுகளை சொல்கிறார். துறவி சுனிம், அந்தந்த நேரத்தில் செய்யவேண்டிய விஷயங்கள் மீது கவனம் செலுத்துமாறு கூறுகிறார். குறிப்பாக பிளம் எனும் கிராமத்திற்கு சென்று தியானம் செய்வது பற்றிய அத்தியாயம். அதில், நிதானமாக மெதுவாக நடப்பது, உணவை கண்ணை மூடி மெல்ல மென்று விழுங்குவது என சில பயிற்சிகளை செய்கிறார்கள். நிதானமான சிந்தனைக்கு நிதானமாக மூச்சுவிடுதலே போதுமானது என கூறுகிறார் துறவி சுனிம். நூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு பெரும் ஆதரவாக அமைந்துள்ளது ஓவியர் லிஸ்க் ஃபெங்கின் ஓவியங்கள். வாழ்வில் வெல்ல, வியாபார சாதனைகளை செய்வதற்கு ஊக்கம் கொடுக்கும் நூல் அல்ல. ஆனால், உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஊக்கம் கொடுக்கிற உதவுகிற நூல் என்று கூறலாம்.
-கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக