நில்லாமல் காற்று வீசும் நகரத்திற்கு பயணம்!
நில்லாமல் காற்று வீசும் நகரத்திற்கு பயணம்!
தாராபுரத்திற்கு குறிப்பிட்ட இடைவெளியில் சென்று நண்பரை சந்தித்து வருவது வழக்கம். அந்த நகரில் உள்ள நண்பர், இலக்கியங்களை வாசிக்க கூடியவர். அதோடு பல்வேறு ஊடகங்களில் தேசிய கட்சி சார்ந்து விவாதிக்க கூடியவர். அந்த கட்சி சார்ந்த ஆதரவு நிலை எனக்கு கிடையாது. நூல்களை வாசிக்க கூடியவர் என்பதால் பலமுறை நூல்களை இரவல் வாங்கி வந்திருக்கிறேன். தான் வாசித்த நூல்களை இரவல் கொடுத்தவர், சிலமுறை பழைய நூல்களை அன்பளிப்பாக வைத்துக்கொள்ளவும் கொடுத்திருக்கிறார். கடன் வாங்கி பிறரது தலையில் மசாலை அரைக்கும் மூத்த சகோதரர் வழியாக அறிமுகம் கிடைக்கப் பெற்றவர்.
கிளம்பும் நாளன்று அதிகாலையில் எழுந்தால், அப்போதே தந்தையார் தனக்கான சமையலை தொடங்கியிருந்தார். இரண்டரை மணிக்கு எழுந்து சமையல் செய்துவிட்டு நடைபயணத்தை ஒரு கி.மீ.அளவுக்கு அமைத்துக்கொள்பவர், தேநீர் அருந்த செல்வார். பிறகு, நான்கு மணியைப் போல திரும்ப வீட்டுக்கு நடந்து வருபவர், டிவியை ஓடவிட்டு பாடல்களைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பிறகு அதை ஐந்து மணிக்கு அமர்த்திவிட்டு மோட்டார் விட்டு வீட்டின் வெளியே உள்ளே வாழை, கொய்யா மரங்களுக்கு பாய்ச்சுவார். பிறகு, மீண்டும் தேநீர் குடித்த இடத்திற்கு நாளிதழ் படிக்கச் செல்வார். அப்போதும் சீனி இல்லாத தேநீர் நிச்சயம். இப்படியான ராணுவ விதிமுறை வாழ்க்கையை தந்தை வாழ்ந்து வந்தார்.
அவருடைய தினசரி அலுவல்களி்ல யாரும் குறுக்கே வர அனுமதித்தது கிடையாது. தடைபடவும் விடமாட்டார். வீடுகளில் என்னையோ அவரது மனைவியான என் தாயையோ பெரிய பொருட்டாக மதிப்பதில்லை. என் சோறு என் வாழ்க்கை என வாழ்ந்து வருகிறார். இதற்கு இடையில்தான் நான் எங்காவது கிளம்புவது என்பதை கவனமாக அமைத்துக்கொள்வது.
ராணுவ மேஜரின் செயல்களுக்கு குறுக்கே வராமல் நமது செயல்பாடுகளை அமைத்துக்கொள்ளவேண்டும். அல்லாவிடில் வசைகளை கேட்க நேரிடும்.விதிகளை மீறும்போது, வேலையில்லாமல் நான் தங்கியுள்ள இடம், அனுபவிக்கும் மின்சாரம், அருந்தும் குடிநீர் ஆகியவற்றுக்கான செலவுக் கணக்குகள் ஒப்பிக்கப்படும். சீன தொடர்களில் பிள்ளைகள் தந்தையிடம் கூறும் வசனம் போலத்தான். கீழ்ப்படிதல் முக்கியம். காசு உள்ளவர்களிடம் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். அந்த வகையில் தந்தையே அதிகாரப்பூர்வ நியாயவிலைக்கடை தரவுகளின் படி குடும்பத்தலைவர்.
தாராபுர நண்பரை சந்திப்பது அவ்வளவு எளிதல்ல. அவர் டிவி பிரபலம். உள்ளூர் அளவிலும் பிரபலமானவர். தற்போது உடற்பயிற்சி நிலையங்களில் கூட இளம்பெண்களிடம் பிரபலமாகிவருகிறார் என்று கேள்விப்பட்டேன். ஆறுமுறையாவது அலைபேசியில் அழைத்து பேசினால்தான் தான் எப்போது ஓய்வாக இருப்பேன் என்று அவரால் தெரிவிக்க முடியும் பரபரப்பில் இருந்தார். அதில் தவறேதும் இல்லை. எனக்கு அவரிடம் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை அறிய வேண்டிய அவசியம் இருந்தது. அலைபேசி அழைப்பு சார்ந்து, சகிப்புத்தன்மை பற்றிய பாடத்தை கற்றுக்கொண்டேன். அலைபேசியில் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். நேரடியாக சென்று பேசி தீர்வுகளைத் தேடவேண்டும் என்று எங்கேயோ படித்திருந்தேன். அதை செயல்படுத்திப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது என்று எண்ணினேன்.
நானுள்ள கிராமப் பகுதியில் இருந்து தாராபுரத்திற்கு செல்லும் முச்சந்தி பேருந்து நிலையத்திற்கு செல்ல, அதிகாலையில் பேருந்துகள் ஏதும் கிடையாது. நாலரை மணிக்கு கரூர் செல்லும் பேருந்து வரும். அதில் ஏறலாம். மின்னல் வேகத்தில் நகரும் பேருந்து, நிறுத்தத்தில் கூட முழுமையாக நிற்காது. வேகத்தைக் குறைப்பார்கள். நீங்கள் வேகமாக தொற்றிக்கொள்ளவேண்டும். இதில் தேர்வு பெற்றால் திரைப்பட சண்டை பயிற்சியாளரிடம் திலீப் சுப்பராயனிடம் வேலைக்குச் சேர்ந்துவிடலாம். நான் இன்னும் இப்பயிற்சியில் தேர்வு பெறவில்லை என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. உடல் இலகுரக தன்மையில் இருக்கவேண்டும். லாகவம் பழகவேண்டும். முச்சந்தி பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல மூன்று கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு பெறுவது பற்றி யோசித்துக்கொண்டே எனக்குள் பேசிக்கொண்டே சென்றேன். இங்குள்ள சாலைகளைப் பொறுத்தவரை யாரும் அதிக ஒளிக்கற்றை வெளிச்சத்தை குறைப்பதில்லை. யார் வந்தாலும் சரி, நேராக கண்களுக்குள் ஒளி பாய்ச்சுகிறார்கள். சாலைகளில் இப்போது மஞ்சள் நிற வெளிச்சம் குறைந்துவிட்டது. அப்படியே தும்பைப்பூ ஒளி வெள்ளம் நம்மை நனைக்கிறது. நடந்துசென்றாலும் சரி. பார்த்தால் கண்கள் ஓரிரு நிமிடங்களுக்கு குருடானதுபோல இருக்கிறது. ஊரிலுள்ள நிலம் வைத்துள்ள பணக்காரர்கள் அனைவரும் இவி வாகனங்களை வாங்கிவிட்டனர். நடந்து செல்லும்போது, முச்சந்திகள் வந்தால் திடீரென உங்கள் புட்டத்தின் அருகில் வந்து பீப் பீப் என ஹார்ன் அடித்துவிட்டு புறா எழுப்பும் குர் என்ற ஒலியுடன் செல்வார்கள். என்ன வண்டி என பார்த்தால் உங்கள் கண்களுக்கு வண்டி பின்புறத்தில் சிவப்பு நிறத்தில் விளக்குகள் எரிவது மட்டுமே தெரியும்.
பெட்ரோல், டீசல் வாகனங்கள் இருந்தாலும் கூட இவி வாகனம் ஒன்றை சமகால கௌரவத்திற்காக வாங்கி வைத்து விர்ரென சாலையில் செல்கிறார்கள். கிராமத்திலும் சைக்கிள்கள் மெல்ல குறைந்துவிட்டன. மக்கள் சாலையில் நடந்துசெல்வது இன்னும் அரிது. விவசாய கூலி வேலைக்கு செல்பவர்கள் மட்டுமே நடந்துசெல்கிறார்கள். இப்படிப்பட்ட பகுதியில்தான் மூன்று கி.மீ. நடை.
பேசுவதற்கு நண்பர்கள் இல்லாதபோது, நண்பர்களாக நினைத்தவர்கள் விலகிச்சென்றுவிட்ட பிறகு நமக்குநாமே பேசிக்கொள்வது கூட மோசமில்லைதான். எதுவுமே திட்டமிட்டபடி நடக்கவில்லைதான். அப்படி யோசித்து நடந்து சென்று பேக்கரி அருகே நின்றேன். அங்குதான் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் வண்டியை நிறுத்திவிட்டு தேநீர் அருந்திவிட்டு செல்வார்கள். அன்று பார்த்தால், ஐந்து மணிக்குத்தான் தனியார் பேருந்து மேற்கிலிருந்து கிழக்காக வந்தது. வந்து கொஞ்ச நேரத்தில் மேற்கே காங்கேயத்திற்கு செல்ல தயாராகி வந்துவிட்டது. ஆனால், நான் நின்ற இடத்தில் பேருந்து நிற்கவில்லை. எப்போதும் போல உள்ள இடத்தில் நிற்கவில்லை. டவுன்டானாவைக் கடந்து பூக்கடை அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சென்று நின்றது. நான் வேகமாக பின்னே துரத்திச் செல்ல, சட்டென முன்னே லாரி ஒன்று வந்துவிட்டது. எப்படியோ லாரி போன பிறகு, பேருந்து நகர நகர தொற்றி ஏறிக்கொண்டேன். கடைசி இருக்கை மட்டும் காலியாக இருந்தது. மற்றபடி பேருந்துகளில் பரவலாக ஆட்கள் இருந்தனர். ஒருவகையில் அப்பாடா என்று இருந்தது. அடுத்த தேர்வு, காங்கேயத்தில் இருந்து தாராபுரத்திற்கு செல்லும் பேருந்தில் தொற்றுவதுதான். நடத்துநரிடம் முப்பது ரூபாய் கொடுத்து பயணச்சீட்டை பெற்றுக்கொண்டேன்.
இந்தமுறை பேருந்து ஓட்டுநருக்கு நிறைய கவலைகள் இருந்திருக்க வேண்டும். எப்போதும் குதூகலமான துள்ளலிசை பாடல்கள் ஓடும் பேருந்தில் அன்று புஷ்பவனம் குப்புசாமி ஷண்முகா ஷண்முகா என உருகிக்கொண்டிருந்தார். இரண்டு மூன்று முருகன் பாடல்கள்தான் பாடப்பட்டன. பிறகு மெல்ல தமிழ் திரைப்பட பாடல்களுக்கு மாறினார். ஈரோடு அளவுக்கு முத்தூர், காங்கேயம் புகழ்பெற்றதில்லை. பெரிய தொழில்நிறுவனங்களும் கிடையாது. இந்த வழியில் பெட்ரோல் பம்ப், கல் குவாரி, டெக்ஸ்டைல் நிறுவனம் என தொழில்நிறுவனங்கள் மிக குறைவு. அதற்கு வேலைக்கு வருகிறவர்கள் பெரும்பாலும் வடக்கன்கள். அவர்களுக்கு அங்கேயே குடியிருப்புகள் இருக்கும். வேலை என்றால் திருப்பூருக்கு சென்றால் மட்டுமே கிடைக்கும் நிலை. வறட்சியான பகுதி. மேல்வாய்க்கால் பகுதி. பவானி ஆற்றின் நீரை நம்பியே விவசாயம் செய்யும் நிலை. எனவே, இங்குள்ள மக்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பது, வேலைகளுக்கு திருப்பூர் சென்று உழைப்பது, வாகன நிறுவனங்களுக்கு சென்று மெக்கானிக், விற்பனை என தொழில்களை கற்று பிழைத்து வருகிறார்கள். சிறுவயதிலேயே துணி ஆலைகளுக்கு வேலைக்கு சென்று சம்பாதிக்க தொடங்கிவிடும் ஆண்களும் பெண்களும் முத்தூர் காங்கயம் பகுதிகளில் அதிகம்.
நான் ஏறிய இடம் தொடங்கி காங்கேயம் வரை கிளுவை, வேல மரங்களே மிகுதி. உள்நாட்டு தொழிலாக சாராயம் காய்ச்சலாம். அதை அரசு செய்வதால், சாராயம் காய்ச்சியவர்களும் கூட தொழிலை கைவிட்டுவிட்டார்கள். திருப்பூர், நாட்டின் 68 சதவீத உற்பத்தி எனும்போதெல்லாம் நொய்யலாறு பல்வேறு நிறங்களில் ஓடுவதையும், அதன் ஓரங்களில் விவசாய நிலங்கள் வெடிப்புற்று, தென்னை மரங்கள் வெடித்துப் போய் கிடப்பதையும் நினைத்துக்கொள்வேன்.
படிக்கட்டு அருகே நான் உட்கார்ந்திருந்த இடத்தில் தள்ளச்சொல்லிவிட்டு அமர்ந்த நடத்துநர், செம குளிர் தெரியுமா, தொவைச்சுப் போட்ட டிரெஸ் எல்லாம் காயவே இல்லை என ரொம்பநாள் தெரிந்த நண்பன் போல என்னிடம் பேச முயன்றார். நான் வேலை பற்றிய கவலையில் ஆழ்ந்திருந்தேன். முக்கியமாக பேருந்து நட்புகளில், பொதுவான அரசியல் பேச்சுகளிலே ஈடுபாடு காட்டுவது இல்லை. அது பெரும்பாலும் மனநிம்மதியை குலைப்பதாகவே இருந்துவிடுவது வாடிக்கை.
எனது கான்க்ரீட் முகத்தில் எந்த உணர்ச்சியையும் பார்க்காதவர். சட்டென நீங்க திருப்பூருக்கு போறீங்களா, வேலைக்கா என்று கேட்டார். எனது யோசனைகளிலிருந்து விலகி வந்து பதில் சொல்ல முயன்று தோற்றேன். ஏதோ, தலையை வலமும் இடமுமாக ஆட்டி வைத்தேன் என்று நினைவு. அதைப் பார்த்த அவர், பயணம் முடியும் வரை என்னிடம் ஏதும் பேசவில்லை. செய்தியை தெளிவாக புரிந்துகொண்டிருக்க கூடும். மகிழ்ச்சி. பதிலாக வேலைக்கு செல்லும் ஒரு இளைஞனை அருகில் இழுத்து உட்கார வைத்த நடத்துநர், தனது வேலையில் உள்ள பிரச்னைகளை பேச தொடங்கினார். குழந்தை பேசத் தொடங்கியதும் என்னென்னவோ உளருமோ அதுபோலவே இருந்தது அவரது பேச்சு. மீசை வைத்த குழந்தையாக இருக்கக்கூடும். நடத்துநராக இருப்பதன் அவலத்தை விளக்கிவிட முயன்று கொண்டிருந்தார்.
தனியார் பேருந்து காங்கேயத்தை அடைவதற்குள் ஒட்டுமொத்த பயணிகளும் ஆன்மிக பரவசத்தை நாம் அடைந்து அத்தனை வாய்ப்புகளும் இருந்தன. முத்தூரில் பத்து நிமிடம் நின்ற பேருந்தில் பட்டன் காளான் பெட்டி ஒன்று ஏறியது. மாணவிகள், வேலைக்கு செல்வோர் வேகமாக வந்து ஏறினார்கள். காங்கேயத்திற்கு அந்த நேரத்தில் வேறு பேருந்துகள் கிடையாது. முத்தூரில் இருந்து காங்கேயம் இருபது கி.மீ என சாலையோர நடுகல் கூறியது.
பேருந்து ஓட்டுநர், உயரம் குறைவாக தடித்து அகலமாக தெரிந்தார். நெற்றியில் திருநீறு துலக்கமாக தெரிந்தது. முகத்தில் அப்படியொரு அபூர்வ புன்னகை பூத்திருந்தது. பால் பாக்கெட்டில் உள்ள மாட்டின் ஏகம் நானே என்ற அனைத்தும் உணர்ந்த புன்னகையைப் போல...
அடுத்து பேருந்து இயக்கப்பட்டு நேராக பாத கருப்பணசாமி கோயிலுக்கு சென்றது. அதாவது வழியில் உள்ள கோயில்தான். ஆனால், அங்கு சென்றதும் பேருந்தின் எஞ்சின் முற்றாக அணைக்கப்பட்டுவிட்டது. ஓட்டுநர் இறங்கி பாதகருப்பணசாமி பக்தராக மாறி சூடம் கொளுத்தினார். கோவில் பூட்டப்பட்டு இருந்தது. எனவே வெளிப்புறம் உள்ள சாமி ஒன்றுக்கு ஒரு சூடமும், உட்புறம் இருந்த சாமிக்கு ஒரு சூடமும் வைத்து கொளுத்தினார். இந்த தனியார் பேருந்து எப்போதுமே முதல் பயணத்தின்போது பாதகருப்பண்ணசாமி கோவிலில் ஓட்டுநர் வேண்டுதல் வைத்தபிறகு வண்டியை எடுப்பது வாடிக்கை. விபத்து ஏதும் நடந்துவிடக்கூடாது அல்லவா?
ஓட்டுநரோடு இன்னும் ஒரே ஒரு வயதான பெண்மணி இறங்கி திருநீற்றை அள்ளி தலையில் போட்டுக்கொண்டு நெற்றியில் வைத்தபடி வந்தது. மகத்தான ஆன்மிக பயணத்தை செய்துகொண்டிருக்கிற பெருமை ஓட்டுநரின் முகத்திலும் புன்னகையிலும் தெரிந்தது. இல்லையா பின்னே? தனியார் பேருந்துகள் பயணிகளிடம் எதிர்பார்ப்பது பணம் ஒன்றை மட்டுமே. அது கிடைத்துவிட்டால் அப்புறம் அவர்களுக்கும் சரக்குகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இறங்கு இறங்கு என மிரட்டுவதுதான் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை. நான் சென்ற பேருந்தில் உட்காரும் கடைசி இருக்கையில் உட்காருபவர்கள் காலை கீழே வைக்க முடியாதபடி, பேருந்து சக்கரம் ஒன்று கிடந்தது. முடிந்தவரை பயணிகளை இழிவுபடுத்தவேண்டும். சித்திரவதை செய்யவேண்டும். அவர்களே பின்னாளில் அதற்கு பழகிக்கொள்வார்கள் என அரசு பேருந்து நிறுவனங்கள் எண்ணிக்கொள்கின்றன. யாரும் எதற்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த பாவத்தை எல்லாம் பாத கருப்பண்ணசாமியைத் தவிர வேறு யார் கழுவ முடியும்?
*********************************
காங்கேயத்தில் நிதானமாக சென்று இறங்க தனியார் பேருந்துக்கு ஒரு மணிநேரம் தேவைப்பட்டது. பிறகு, அங்கு சென்று இறங்கியதும் பழநிக்கான பேருந்து ஒன்று கிளம்பும் உத்தேசத்தில் நகர்ந்தது. அதில் சென்று ஏற ஒரு நிமிட தயக்கம் இருந்தது. ஏறுப்பா, எடமிருக்குது என நடத்துநர் அலறினார். சரி என ஏறிவிட்டேன். தனியார் பேருந்துகளில் தாராபுரத்திற்கு 22 ரூபாய் கட்டணம். அரசு பேருந்துகளில் 30 ரூபாய் வாங்கினார்கள். எட்டு ரூபாய் அதிகம்.
எனக்கு எப்போதும் பயணங்கள், அதில் வரும் மனிதர்கள் சிறப்பாக தொல்லை கொடுப்பார்கள். ஒன்பது கிரகங்கள் உச்சவேகத்தில் சுழன்றால் வேறு எப்படி நடக்கும்? அந்த வகையில் நடத்துநர் அப்பணியை தொடங்கினார். தாராபுரம் சொல்லி நாற்பது ரூபாயைக் கொடுத்ததற்கு இரண்டு டிக்கெட் என தவறாக டைப் செய்துவிட்டு கசங்கலான பத்து ரூபாயைக் கொடுத்தார். பதிலுக்கு, டிக்கெட்டை கொடுக்கவில்லை. முன்னே இருந்த தாராபுர பயணிக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு, இங்கே கொடுத்துவிட்டேன். தாராபுரம்தானே எறங்கறீங்க, பிரச்னை இல்லை என்றார். இதெல்லாம் அவராகவே சொல்லிக்கொண்டது. முதலில், ஓட்டுநர் அருகே இருந்து சைகையில் ஏதோ சொன்னார். எனக்கு விளங்கவில்லை. பிறகு அருகே வந்து ஊமைச்செய்தியை ஒளி,ஒலிச்செய்தியாக்கினார். நடத்துநராக இருப்பது சாதாரணமில்லை. வித்தைக்காரராக இருக்கவேண்டும் என புரிந்து தெளிந்தேன்.
காங்கேயம், ஊதியூர், தாராபுரம் என பேருந்து வேகமெடுத்து நகர்ந்தது. அதிகமாக எங்குமே நிற்கவில்லை. எட்டு ரூபாய் அதிகமென இருப்பது இதற்குத்தானோ என நினைத்துக்கொண்டேன். தனியார் பேருந்து அனைத்து நிறுத்தங்களிலும் நின்று முடிந்தவரை ஆட்களை ஏற்றுவார்கள். தனியாருக்கு லாபம்தானே ஒரே கொள்கை. அதனால்தான் அவர்கள் டிக்கெட்டை குறைத்து வாங்குகிறார்களோ என்னவோ? அரசைப் பொறுத்தவரை விதிகள்தான் முக்கியம். அதற்கு மாறாக நடந்தால் மக்களைக் கூட பேருந்தில் ஏற்றமாட்டார்கள். தாராபுரத்தில் போய் இறங்கினால், அங்கு பேருந்து நிலைய கட்டுமான வேலைகள் தொடங்கி நடந்துகொண்டிருந்தது. ஈரோடு, தாராபுரம் என நிறைய இடங்களில் பேருந்து கட்டுமானங்களை செய்கிறார்கள். நிறைய கட்டுமானம் நிறைய லாபமா ஒன்றும் புரியவில்லை அந்த நிலையத்தை அப்படியே ஒரு சுற்று சுற்றி வந்து இடது பக்கமாக சாலையில் தெற்கு நோக்கி நடக்கத்தொடங்கினேன்.
இலக்கிய நண்பருக்கு அலைபேசியில் அழைக்க நினைத்தேன். தூங்கிக் கொண்டிருப்பார். எதற்கு என விட்டுவிட்டேன். அதுவே எனக்கு பிரச்னையாக மாறியது.
பெரிய பேரங்காடி, கிருஷ்ணா பலகாரக்கடை எல்லாமே தொடங்கிவிட்டிருந்தன. நான் நேராக அப்படியே தலப்பாக்கட்டி, விக்னேஷ் போர்வெல் ஆகிய நிறுவனங்களை தாண்டி நடந்தேன். உடுமலைப்பேட்டை செல்லும் நான்கு சாலை சந்திப்பை அடைந்தேன். அதன் முனையில் அகில உலகத்திலும் புகழ்பெற்ற சூர்யா பேக்கரி ஒன்று இருந்தது. அப்போதே அங்கு ஆறுபேர் போல உட்கார்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். அங்கு சென்று தேங்காய் பன் ஒன்றை வாங்கினேன். தாய் வாங்கி வரும் அதே பன்தான். முப்பது, நாற்பது என விற்று இப்போது நாட்டுச்சசக்கரை போட்டு ஐம்பது ரூபாய்க்கு வந்துவிட்டது. பழநி நடத்துநர் கொடுத்த கசங்கலான பத்து ரூபாயை அப்படியே பேக்கரியில் தள்ளிவிட்டு நடக்கத் தொடங்கினேன். கிழிந்த கசங்கலான நோட்டுகள் கையில் வந்துவிட்டால் இப்போது மாற்றாவிட்டால் எப்போது என உறுதிமொழி எடுத்துக்கொண்டு செயலில் இறங்கிவிடவேண்டும். இல்லையெனில் காசை செல்லாக்காசாக எண்ணிவிட வேண்டியதுதான்.
இந்த வழியில்தான் ரோட்டரி கிளப், அரிமா அரங்கம், பொன்னு மெட்ரிக், டிஎன்78, மகிழ் சிறுதானிய பலகாரக்கடை எல்லாம் தாண்டி சென்றால் நண்பருடைய குடியிருப்பு வரும். இந்திய வங்கி ஒன்றின் புதிய கிளை ஒன்றும் தனியாக புதிய கட்டிடத்தில் தெரிந்தது. பால் தயிர் விற்கும் கடை எனக்கு இடதுபுறம் தெரிந்தது. அதில் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி வேலை செய்துகொண்டிருந்தார். அதையொட்டி ஒரு சாலை கிழக்கே சென்றது. அந்த சாலையில் போக வேண்டும் என்ற நினைவு. அங்குதான் நண்பர் முன்பு இருந்தார். அங்கு சென்றபோது இரண்டாவது வீடு, அவருடையது. வீடு பூட்டியிருந்தது. நல்லவேளை முன்பக்க கேட் பூட்டப்படவில்லை. நண்பரின் பனிரெண்டு ஆண்டு உழைப்புக்கு உள்ளான பைக் ஒன்றும், இரண்டு லட்ச ரூபாய் பைக் ஒன்றும் நின்றது. கதவு பூட்டப்பட்டு இருந்தது. வீடு முழுக்க குப்பை.கொய்யா, சீத்தாப் பழ மரங்களில் இருந்து இலைகள் உதிர்ந்து இடைச்சந்து முழுக்க பழுத்த இலைகளாகவே கிடந்தது. அனைத்து இடங்களிலும் தூசி இருந்தது. ஊதியவுடன் பறந்தது.
நண்பரை தொடர்பு கொள்வது நமது ஆசை, ஆனால், அதை அவர் ஏற்று பேசுவார் என்பது பேராசை. அப்படிப்பட்டவர்தான் நண்பர். இரண்டு முறை அழைத்தேன். எடுக்கவில்லை. பிறகு அவரே அழைத்தார். பைக்கை எடுத்துக்கொண்டு அவர் உள்ள இடத்திற்கு வரச்சொன்னார். எனக்கு வண்டி ஓட்டத்தெரியாது. நான் வீட்டிலேயே இருக்கிறேன். நீங்களே வாருங்கள் என்றேன். எதையும் சொல்லவில்லை. கோபித்துக்கொண்டார் போல. உடனே அழைப்பைத் துண்டித்தார். பிறகு, இரண்டு மணிநேரம் கழித்து வந்தார். அந்த நிதானம் என் வயிற்றுக்கு பொறுக்கவில்லை. வாங்கி வந்த தேங்காய் பன்னை மொட்டை மாடிக்குச் சென்று பிய்த்து தின்றேன்.
தேங்காய் பன்னில் உலர்ந்த திராட்சையெல்லாம் கூட போட்டிருந்தார்கள். அப்படியாயினும் கூட பத்துரூபாய் அதிகம் என்றே தோன்றியது. பாதியை நண்பருக்கு கொடுத்துவிடலாம் என மனதில் திடமான உறுதிமொழியை எடுத்துக்கொண்டேன். பிறகு கீழே வந்து உட்கார்ந்து முக்கால் மணிநேரம் கழித்தே நண்பர், இவியில் வந்து இறங்கினார். ஆக மொத்தம் மூன்று வண்டிகள் ஆயிற்று. இதில் பொறாமை ஏதும் இல்லை. அவரால் அத்தனையையும் பராமரிக்க முடிகிறது. செய்கிறார். இதில் வயிற்றெரிச்சலுக்கு வேலை என்ன? அந்த வண்டிதான் அடிக்கடி வெயிலில் பற்றி எரிகிறது என்று புகார் வந்த வண்டியா என்று தெரியவில்லை. வாடகைக் கார்களை இயக்கும் தரகு நிறுவனத்தின் தயாரிப்புதான் அது. நன்றாக இயங்கினால் சரி. இத்தனை வண்டிகளை எப்படி ஓட்டுவார் என்றுதான் யோசனை. இத்தனை நாட்களுக்கு இந்த வண்டி என ஓட்டுவாரா? என்னென்னமோ யோசனைகள் எல்லாம் எனக்கு வந்தன.
புத்தக நண்பர் முதலில் வயிற்றில் மட்டும் தொப்பையைக் கொண்டிருந்தார். இப்போது வயிற்றில் தொப்பை குறைந்து கை, கால்கள் நன்றாக கரணை கரணையாக தோற்றமளித்தன. தேநீர்சட்டை, டிராயர் அணிந்திருந்தார். நகரத்திற்கான நாகரிகம் தனி அல்லவா? கட்டாகுஸ்தி பயில்வான் போல தோற்றமளித்தார். வயது அதிகரிக்க நண்பருக்கு தலைமுடி நன்றாக கருப்பாக மாறி வந்தது. நண்பர் வசித்து வந்த வீட்டில் முன்புறம் வரவேற்பறை. அதில் ஷோகேஸ்கள் இருந்தன. அதில் நண்பர் வாங்கிய விருதுகள், நூல்கள் இருந்தன. படிப்பில் செய்த சாதனைகள், கட்சி வட்டாரத்தில் செய்த பணிகள் ஆகியவற்றுக்கு விருதுகளைப் பெற்றிருந்தார். அதைக் கடந்து உள்ளே சென்றால் இடதுபுறம் படுக்கை அறை. அதற்கடுத்து பின்புறம் செல்லும் வழியில் குளியலறை, கழிவறை தனியாக கட்டப்பட்டிருந்தது. குளியலறை அருகே பலஜோடி செருப்புகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு கிடந்தன. கழிவறை அருகே அழுக்குத் துணிகள் சலவைக்கு குவியலாக வைக்கப்பட்டிருந்தது. பின்புற வழியைத் திறந்தால் கொல்லைப்புறம் அங்கு தென்னை மரங்கள் உண்டு. துணி துவைக்கும் கல். மற்றொரு கழிவறை உண்டு. அதை விருந்தினர்க்காக வீடு கட்டியவர் கட்டியிருக்க கூடும். இப்போது பயன்படுத்தும்படியாக இல்லை.
கொல்லைப்புற வழிக்கு அடுத்து சமையலறை இருந்தது. உள்ளே பிளாஸ்டிக் மேசை ஒன்று போட்டிருந்தது. எரிவாயு அடுப்பு வலதுபுறம் இருந்தது. சற்று சிறிய அடுப்பு. இடதுபுறம், பாத்திரங்களை கழுவும் பகுதி. சமையல் செய்த குக்கர் நீரில் ஊறிக் கிடந்தது. சன்னல் அருகே, மின் அடுப்பு ஒன்று பிளக் இணைக்கப்படாமல் இருந்தது. சமையலறை அடுக்குகள் முழுக்க உடற்பயிற்சி செய்பவர்களுக்கான புரதம், தானியங்கள், நாப்கின்கள், குப்பைகளை எடுத்துச் செல்லும் பேக்குகள் இருந்தன.
எரிவாயு அடுப்பின் அருகே இருந்த அடுக்குகளில், பல்வேறு பருப்பு வகைகள், உடனடி காபி, சர்க்கரை, தேயிலைத்தூள் ஆகியவை இருந்தன. அருகில் மெரூன் நிறத்தில் அமெரிக்க தயாரிப்பு குளிர்பதனப்பெட்டி நிறுத்தப்பட்டிருந்தது.
நண்பர் எதை பயன்படுத்துகிறாரோ அது மட்டுமே தூசி இல்லாமல் இருந்தது. அனைத்து அறைகளுக்கும் திரைச்சீலை இருந்தது. வெளியில் உள்ளவர்கள் கூட எளிதாக அறையை முற்றாக பார்த்துவிட முடியாத பாதுகாப்பை திரைத்துணிகள் தந்தன. அறையினுள் அலங்கார விளக்குகள் உயரத்தில் இருந்தன.
புத்தக நண்பர், வீட்டில் இருந்த ஒரு அறையை சுத்தமாக்கி கொண்டிருந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை, பேனுக்கான இரும்புத்துண்டுகளை எடுத்து ஒன்றாக கட்டி அதை அறுக்க பிளேடு தேடிக்கொண்டிருந்தார். அந்த வீட்டில் ஏராளமான ட்யூப் லைட்டுகள் இருந்தன. அவை பழுதானவை இயங்குபவை என வேறுபாடே இல்லை. பத்து லைட்டுகள் தேறும். அவற்றை அவர் பட்டியொன்றில் போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார். எரிந்த பல்பை அப்படியே வைத்துவிட்டு மீதி பல்புகளை அப்படியே சுவரோடு சாய்த்து வைத்தார். நான் வாங்கி வந்த தேங்காய் பன்னை சிறிது சாப்பிட்டுவிட்டேன் என்று சொல்லிக் கொடுத்தேன். நண்பர் ஏதும் சொல்லவில்லை. வாங்கிச் சென்று மேசையில் வைத்துவிட்டார். பிறகு எப்போதும் போல வேலைதான்.
பிறகு, சாப்பிடலாங்களா என்று கேட்டுவிட்டேன். ம் என்றவர் உள்ளே சென்று தோசை மாவை ஊற்றி தோசை சுட்டார். நல்லவேளை என நினைத்துக்கொண்டேன். பொதுவாக வெளியே சென்று உணவு வாங்கிக் கொடுத்த வரலாறு முன்பு உண்டு என்றாலும் உடற்பயிற்சிக்கு பிறகு நண்பரின் மனநிலை மாறிவிட்டிருக்கிறது. சாப்பிட்ட பிறகு அதிகாலையில் நடந்து வந்த களைப்பு கண்ணை இருட்டியது. படுக்கை அறையில் ஓரமாக வைத்திருந்த பாயை எடுத்து வந்து விரித்து பனியன், கொண்டு போயிருந்த ஷார்ட்ஸைப் போட்டுக்கொண்டு படுத்துவிட்டேன். பிறகு எழுந்தபோது நண்பர் சட்டை, சிமெண்ட் நிற ஒற்றை மடிப்பு வேட்டிக்கு மாறியிருந்தார். வேலை விஷயம் கைகூடாது என மறுப்பாக கூறிவிட்டார். சரி என மனதிற்குள் சொல்லிக்கொண்டுவிட்டேன். அந்த விவகாரத்தில் செய்ய ஏதுமில்லை.
இரவு நேரத்தில்தான் தாராபுரம் ஆபத்தானதாக மாறுகிறது. வந்தால் அந்த நாள் இரவு தங்கிவிட்டு, திரும்ப அடுத்தநாள் அதிகாலையில் கிளம்பி ஊருக்கு செல்வது வழக்கம். இந்தமுறை மேலே பாய்ந்து கடித்த கொசுக்கள் பீதியூட்டின. காட்டில் கொசுக்கள் அடையாய் அப்பின என எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுவாரே அதேபோல்தான் நிலைமை இருந்தது. டிவி பார்க்கும்போதும் கொசுக்கள் கடித்தன. அதை அடித்துக்கொண்டே இருவருமாக அடித்தபடி இருந்தோம். ஹிம்சைக் கட்சியைச் சேர்ந்த நண்பரும், நானும்தான். அவர் சென்று கட்டிலில் படுத்துவிட்ட பிறகும் கூட நான் சற்றுநேரம் பன்மைவெளி, சீர்மை பதிப்பக நூல்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்புறம் இரவு பனிரெண்டு மேல்தான் படுக்கையில் சாய்ந்தேன். அப்போதும் கைதொட்ட இடமெல்லாம் கொசுக்கள்தான். ரீங்காரமிட்டபடி உட்கார்ந்த இடமெல்லாம் கடித்துக்கொண்டே இருந்தன. தோள்பட்டை முதுகு எல்லாம் தடித்துவிட்டன. வேறுவழியின்றி நண்பரின் போர்வை ஒன்றை படுக்கை அறையில் இருந்து எடுத்து வந்து போர்த்திப் பார்த்தேன்.
நெஞ்சுக்கு அநீதி, அதுவும் என்னுடயை உயரத்திற்கு போதவில்லை. மின்விசிறி உச்ச வேகத்தில் சுழன்றபோதும், போர்வையைப் போர்த்தினால் வியர்வை ஊறி சொட்டியது. போர்வையை விலக்கினால் கொசு கடிக்கிறது. அன்றைய நரக அனுபவம் வேறெந்த தாராபுர நாட்களிலும் எனக்கு கிடைக்கவில்லை. வீடுகளை பெரிதாக கட்டினாலும் சாக்கடைகளை மூடாமவல் விட்டார்களோ, குப்பைகளை முறையாக பராமரிக்கவில்லையோ தெரியவில்லை. அடை அடையாய் வந்து உடலின் மீது அப்புகின்றன கொசுக்கள். சற்றே கண்ணயர்ந்து பிறகு எழுந்தபோது போனைத் தட்டுத்தடுமாறி எடுத்து உசுப்பியபோது மணி நான்கு. எழுந்து கழிவறை சென்றேன். அங்கு நண்பர் மேற்கத்திய கழிவறை வைத்திருந்தார். அதில், தண்ணீர் சிறுதொட்டியில் இருந்து விசையைத் தட்டினால் வருமே அது வரவில்லை. பிறகு பக்கெட்டில் குழாய் நீரை பிடித்து அதை கழிவறைக் குழியில் ஊற்றினேன். இந்திய கழிவறையில் தண்ணீரை ஊற்றினால் சற்று வேகமாக கழிவுகள் மறையும். மேற்கத்திய கழிவறையில் அதிக நீர் தேவைப்பட்டது.
நண்பரிடமிருந்து நம்பூதிரி பற்பசையை மட்டும் பயன்படுத்திக்கொண்டு, நீரில் குளித்துவிட்டு வெளியே வந்தேன். அறையில் கொசுக்களின் ரீங்காரம் குறையவில்லை. இரவில் நண்பர், கொசுக்களோடு டென்னிஸ் ஆடிக்கொண்டிருந்தார். கொசுக்கள் மின்சார கம்பியில் சிக்கி வெடித்து கருகி இறந்தன. இது மனிதர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறதா என்னவோ ஒன்றும் புரிவதில்லை. கழிவுகளை அகற்றுவதை விட, திறந்தவெளி சாக்கடைகளை மூடுவதை விட மின் கொசுமட்டையை வாங்கிவிடுவது எளிதான ஒன்று அல்லவா? வாங்கி சர்வீஸ் ஒன்று இரண்டு என சொல்லி கொசுக்களை அடித்துக்கொண்டிருக்கலாம். என்னவொரு ராஜதந்திரம்? யார் யாரைக்கொண்டு பிழைக்கிறார்கள் என தெரிந்துகொண்டுவிட ஏதுவான பல்வேறு வாய்ப்புகளை நகரம் நமக்குத் தருகிறது.
#பேருந்து #காற்று #நகரம் #வேலை #அலைச்சல் #வினோதம் #மனிதர்கள் #பாதகருப்பண்ணசாமி #பக்தி #பழநி #பேருந்து நிலையம் #கொசு #நகரப்பேருந்து #முத்தூர் #காங்கேயம்
#muthur #kangayam #dharapuram #bus #job #frustration #help #regret #journalism #salary #people #childish #behaviour #money #coconut bun #bakary
கருத்துகள்
கருத்துரையிடுக