வங்கி ஓடிபியில் பணியாளருக்கு ரேட்டிங்கை வழங்குவது எப்படி? பத்து நிமிட வழிகாட்டி கட்டுரை
யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - பலவித அனுபவங்கள்
நான் கணக்கு வைத்துள்ள வங்கி விவசாயிகளுக்கானது. இப்போது மெல்ல படித்த வர்க்கத்தினருக்காக கட்டாயமாக மாறி வருகிறது. படிக்காத வாடிக்கையாளர்களைக் கூட மிரட்டி கட்டாயப்படுத்தி கடன் அட்டையை திணித்து அதன் வழியாக பணத்தை எடுக்கச் சொல்கிறார்கள். அதற்கான சேவைக் கட்டணம் அவர்களுக்கு முக்கியமானதாக படக்கூடும். ஊழியர்களுக்கு ஆண்டு இலக்கு கூட நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். இந்தவகையில் அதுவரை வழங்கப்படாத கடன் அட்டை நிறைய பெண்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பெண்கள் அனைவருமே கல்வியறிவற்றவர்கள். அதுவரை படிவத்தில் காசு வேண்டுமென்றால் அதை வங்கியிலுள்ள சீருடை தரித்த பெண்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு வந்து காசாளரிடம் கொடுத்துத்தான் பெறுவார்கள். ஆனால், படிவம் எழுதுகிறவர்களைக் கூட, இன்று கட்டாயப்படுத்தி கொடுத்த கடன் அட்டை இருக்கிறதல்லவா, அதைப் பயன்படுத்துங்கள் என வங்கி அதிகாரிகள் கூச்சலிடுகிறார்கள்.
மாற்றங்கள் இந்திய சமூகத்தில் மெதுவாகத்தான் வரும் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் போல. இதுபற்றி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஒருமுறை கூறியிருக்கிறார். நூலகம் ஒன்றை தொடங்கி அதை இலவசமாக பயன்படுத்த சொன்னாலும் கூட ஏழ்மையில் உள்ள கல்வியறிவு இல்லாதவர்கள் அதை எப்படி பயன்படுத்துவார்கள்? அது அவர்களுக்கு பயன் தராது என்று கூறுகிறார். அரசின் நோக்கம் பழுதற்றது. ஆனால் அதை நடைமுறைப்படுத்தும்போது கவனிக்க வேண்டியவற்றை கவனிக்க வேண்டுமே? அந்த அடிப்படை இங்கிதம் கூட வங்கி அதிகாரிகளுக்கு இல்லாமல் போய்விட்டது. அதே படிப்பறிவு இல்லாத பெண்களின் பணத்தில்தான் அதிகாரி சம்பளம், ஓய்வூதியம், குடியிருப்பு சலுகை எல்லாமே பெற்றிருக்கிறார். அவரது தலைக்கு மேலே சுழலும் மின்விசிறிக்கான மின் கட்டணத் தொகை கூட அப்படித்தான் வரப்போகிறது. எதற்கு இந்த அநியாய கோபம்? சீற்றம்?
******************************************
ரேட்டிங் பரிதாபங்கள்
வங்கிகள் தம் அதிகாரிகளின் பணியை, வாடிக்கையாளர்களை வைத்து அடையாளம் கண்டுபிடிக்க முயல்கின்றன. நல்ல நோக்கம். ஆனால், அதை எப்படி செய்கிறார்கள் என்பதுதான் நாம் அறியவேண்டியது. வங்கி அதிகாரி எப்படி வேலை செய்கிறார், லாபம் ஈட்டித் தந்திருக்கிறார், புதிய கண்டுபிடிப்புகள் ஏதேனும் செய்திருக்கிறாரா என ஆராய தனிக்குழுவைக் கூட வைத்திருக்கலாம். ஆனால், இதிலும் கூட வாடிக்கையாளர்களை வேலை செய்ய வைக்கிறார்கள். அவர்களின் தந்திரத்தை எப்படி என பார்ப்போம்.
நீங்கள் வங்கியில் பணம் கட்ட வருகிறீர்கள். உங்களிடம் காசாளர் பணம் வாங்கிப் போடுகிறார். பிறகு ஒரு சீட்டை அச்சு குத்தி உங்களுக்கு கொடுப்பார். அப்போது திடீரென அலைபேசி எண் கேட்பார். அதைக் கொடுத்தால், அவர் கணினியில் அதை தட்டச்சு செய்வார். உடனே உங்கள் அலைபேசிக்கு வங்கியில் இருந்து நான்கு எண்கள் தனிச் செய்தியாக வரும். அது பத்து நிமிடங்கள்தான் செயலில் இருக்கும். பிறகு செயலிழந்துவிடும். அதை காசாளர் உங்களிடம் கேட்பார். சொன்னால் உடனே அதை தனக்கான ரேட்டிங்காக மாற்றிக்கொள்வார். என்னவொரு வினோதம் பாருங்கள். எனக்கு இப்படியான சம்பவம் ஒருமுறை நடந்தது. அதை நான் எதற்கு கேட்கிறார் என்று தெரியாமல் செய்தேன். பிறகு பார்த்தால், அதை வாடிக்கையாளர் செய்யவேண்டியதாக வங்கி அமைத்திருக்கிறது. வாடிக்கையாளர், தன் சொந்த இன்டர்நெட் பேக்கில் வங்கி அனுப்பிய இணைய இணைப்பை சொடுக்கி உள்ளே சென்று காசாளர் அல்லது வேறு வங்கி அதிகாரிக்கு ரேட்டிங் கொடுக்கவேண்டும். இதை நான் கணக்கு வைத்துள்ள வங்கி அதிகாரி நூதனமாக தானே செய்துகொண்டு பணியுயர்வு, பதவி உயர்வு பந்தயத்தில் முந்திக்கொள்கிறார்.
இதை சுருக்கமாக சொன்னால், தேர்வு நடக்கிறது. மாணவர் தேர்வு எழுதுகிறார். அந்த விடைத்தாளை அவரே திருத்தி மதிப்பிட்டுக்கொள்கிறார். அது எப்படி சரியானதாக இருக்கும். நூற்றுக்கு இருநூறு மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடுவார்தானே? வங்கியாவது கொஞ்சம் யோசிக்க வேண்டாமா? உங்கள் அதிகாரியைப் பற்றி விசாரிக்க வேண்டுமென்றால் அதை நீங்கள்தான் முனைப்பாக செய்யவேண்டும். அல்லது வாடிக்கையாளர்தான் செய்யவேண்டும் என்ற சத்தியாகிரக பிடிவாதமா, ஒரு எந்திரத்தை நிறுவுங்கள். அதில் பட்டன் அழுத்தி சுமார், சூப்பர், பரவாயில்லை, தேறாது என குமுதம் வார இதழ் போல சொல்லிவிட்டு போகலாம்.
ஒரு வாடிக்கையாளருக்கு எதற்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள்? அவர் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டாமா? இன்று வங்கிகள் பெரும்பாலானவை, வாடிக்கையாளர்களுக்கு வைப்புத்தொகை நாள் கடந்தால் கூட குறுஞ்செய்திதான் அனுப்புகின்றன. முன்பு வீட்டு முகவரிக்கு கடிதங்கள் வரும். அதையும் ஒழித்துக் கட்டி வலுக்கட்டாயமாக டிஜிட்டல் இந்தியாவுக்கு கொண்டு வந்தாயிற்று. இதன் காரணமாக பணத்தை வங்கியில் போட்டவர்கள், அவர்களாக விழிப்புணர்வோடு இருக்கவேண்டியுள்ளது. வங்கிகள், வைப்புத்தொகையை வாடிக்கையாளர் வரும் நாள் வரை அப்படியே வைத்துள்ளன. அதை அவர்கள் சேமிப்புக் கணக்கில் கூட சேர்ப்பதில்லை. அப்படியொரு காரிய கடமை உணர்வு.
இந்த ரேட்டிங் விவகாரத்தை அந்தரங்கம் கருதி ஒருவரின் அலைபேசிக்கு அனுப்புகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். குறிப்பிட்ட கிளைப்பிரிவு அதிகாரிகள் பற்றி விசாரித்து அறிய, அதிலுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அஞ்சல் தலை வைத்த கடிதங்களை அனுப்பி வங்கிச்சேவை பற்றி கருத்துகளை கேட்கலாம். வங்கி அதிகாரிகள் பற்றி கேட்டு அறியலாம். நன்றாக பணியாற்றி உதவினார்களா, பணியில் நிறை என்ன குறை என்ன என்று கேட்டு அறியலாம். அக்கடிதத்தை வாடிக்கையாளர் நிரப்பிவிட்டால் அதை அப்படியே மடித்து ஒட்டி அஞ்சல் பெட்டியில் போட்டுவிடலாம். இதுபோல ஏற்பாடு வாடிக்கையாளர்களுக்கு எளிதானது. இணையம் என்பது எங்களது கிராமத்தில் இளைஞர்களின் கையில் உள்ளது. ஆனால், நட்சத்திரங்கள், மதிப்பீடு கொடுப்பதை பத்து நிமிடங்களுக்குள் செய்வது கடினம். இதைப் புரிந்துகொண்ட சில சுயநலமான வங்கி அதிகாரிகள், தங்களுக்கு தாங்களே மதிப்பீடு கொடுத்துக் கொள்கிறார்கள். வங்கிகள் தங்கள் திட்டங்களிலுள்ள குறைகளை புரிந்துகொள்வார்களா என்று தெரியவில்லை.
காசு பெறும் எந்திரங்களில் கூட கணக்கு விவரங்களை தாளில் தருவதில்லை எனும்போது மதிப்பீடு பற்றி கடிதம் அனுப்புவார்களா என்று சிலர் விமர்சனம் எழுப்பலாம். ஒரு வங்கி தன்னுடைய அமைப்பில் உள்ள நல்ல பணியாளர்களை கண்டுபிடிக்க கொஞ்சம் செலவு செய்யலாம். தவறில்லை. உலகை காகிதம் தயாரிப்பது மட்டுமே மாசுபடுத்துவதில்லை. நேர்மையின்மையும், அலட்சியமும், ஊழலும்தானே? அதைப்பற்றியும் யோசித்தால் மக்களுக்கு பயனாக இருக்கும். இதிலும் நான் அக்கறைப்படுவது பொதுத்துறை வங்கிகளைப் பற்றி மட்டுமே.
வடக்கு நாட்டில் நடைபெற்ற கோவில் குடமுழுக்குக்கு விடுமுறை கொடுக்கும் விழிப்புணர்வு பெற்ற வங்கிகள், அவ்வளவு எளிதில் விழித்துவிட மாட்டார்கள்.
******************************************
***தா எனும் பெயர் கொண்ட பால் நிறுவனம். பெரியார் மண்ணில் எண்பதுகளில் உருவாக்கப்பட்டது. அதன் அத்தனை பொருட்களும் நான் வாழும் சிறு நகரில் கிடைப்பதில்லை. பால் தயிர் மட்டுமே. அதில் பத்து ரூபாய் பால் பாக்கெட்டை வாங்கினேன். பால் வாங்கி தயிர் போடலாமா என்று யோசனை வந்தது. அதற்காக சோதனை முயற்சியாக பத்து ரூபாய் பாக்கெட்டை வாங்கினேன். அந்த பாலை நன்கு காய்ச்சி தேநீருக்கு ஊற்றியபோது எந்த மணமுமில்லை. சுவையும் தெரியவில்லை. பாலை எப்படி பதப்படுத்தினார்களோ என்னவோ, இதற்கு வாடிக்கையாளர் மின்னஞ்சலுக்கு கடிதம் அனுப்பியதில் எந்த பதிலும் இல்லை. எதிர்பார்த்த ஒன்றுதான். இந்திய நிறுவனங்களின் தனித்தன்மை இது. நான் என்ன கொடுக்கிறேனோ, அதுதான். அதற்கு மிஞ்சி நீ எதையும் கேட்காதே. கேட்டாலும் சொல்லமாட்டேன் எனும் மனநிலை. இதெல்லாம் அவர்களுடைய அடுக்கதிகாரம், சாதி மனநிலையில் இருந்தே உருவாகி வருகிறதா என்று தெரியவில்லை.
இத்தகைய கிணற்றுத்தவளை மனநிலையால்தான் வெகு சீக்கிரமே தொழிலில் இருந்து காணாமல் போகிறார்கள். புதுமைகள் செய்யமுடியாமல் அப்படியே தேங்கிப் போகிறார்கள்.
பொதுவாக கருத்து தெரிவிக்கும் கடிதம்தான் அது. அதில் இன்னும் கூடுதல் தகவலுக்கு பேட்ச் எண்களை இணைத்திருக்கவேண்டும். எதிர்காலத்தில் அதை கவனமாக செய்யவேண்டும். இன்றுள்ள பெரும் நிறுவனங்கள், பிடித்த கருத்து என்றால் பதிலும், எதிர்மறையாக கருத்து என்றால் கள்ள மௌனமும் சாதிக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்த வகையில் முடிந்தவரை பதிலளிக்க முயல்கின்றன. அதற்கென தனிபிரிவு ஆட்களை வைத்துள்ளன. இப்படி பதில் கூறுபவர்களைக் கொண்டே வாசகர்களிடம் சர்வே போன்றவற்றைக் கூட எடுக்க முயல்கிறார்கள். அதாவது, பொருளுக்கு உங்கள் ரேட்டிங் என்ன, நண்பருக்கு பரிந்துரை செய்வீர்களா என்று....
பார்ப்போம்.
கோமாளிமேடை குழு
#யாவரும் ஏமாளி #மதிப்பீடு #ஓடிபி #தந்திரம் #வங்கி #பால் #தரம் #வாடிக்கையாளர் சேவை #புகார் #சேவைக் கட்டணம் #விமர்சனம் #ஏமாற்றம் # கூடுதல் வேலை
#bank #gov enterprise #ratings #rules #complex #employee #honest #tax money #complaints #privacy #system #reply #response #otp #frustration #facility
கருத்துகள்
கருத்துரையிடுக