அழையாத விருந்தாளி! - ஒரு பக்க கதை



கேசவன், பிரமாண்டமான தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்தான். அறைக் கதவைத் தட்டியதும், கம் இன் என்ற கம்பீரக்குரல் கேட்டது. மருத்துவர் ஜீவா என பெயர் பலகை கூற, நெற்றியில் சுருக்கங்களோடு வெள்ளை உடை அணிந்த மனிதர் அமர்ந்திருந்தார்.

''நீங்க, கேசவன்தானே?, ஐம் ரைட். உங்களுக்கு கை கால்ல இருக்கிற விறைப்புத் தன்மை, வலி, வீக்கம் பத்தி டெஸ்ட் பண்ணோம். முடிவு, ஒரே நோயைத்தான் குறிக்குது'’

''என்ன நோய்ங்க சார்?’’

''சுருக்கமா ஆர்ஏ. முடக்குவாதம். துரதிர்ஷ்டவசமா இதைக் குணப்படுத்த முடியாது. ஆனா, நோயோட தீவிரத்தைக் குறைக்க மருந்து இருக்கு. இது, மரபணு ரீதியாக வர்ற நோய்’’.

அதிர்ந்த கேசவன், தழுதழுத்த குரலில் ''இந்த நோய், என்னோட குழந்தைக்கும் வருமா?’’

''வாய்ப்பு இருக்கு. குழந்தைக்கும் உங்கள மாதிரியே 30 வயசுக்கும் மேல வரலாம். ட்ரீட்மென்டை எப்ப தொடங்கலாம்னு சொல்லுங்க’’, என்று தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு மருத்துவர்,மற்றொரு நோயாளியைப் பார்க்க விடைபெற்று சென்றார்.

மனைவி பூங்கொடிக்கு கருப்பை நீர்க்கட்டி காரணமாக கரு தங்கவில்லையே என்ற மனக்குறை மறைந்து நிம்மதியும் பரவ, தளர்வாக பைக் நிறுத்தியிருந்த இடத்திற்கு நடந்தான்.

வீட்டின் முன் பைக்கை நிறுத்திவிட்டு, காலிங்பெல்லை அழுத்தினான் கேசவன். கதவைத் திறந்த பூங்கொடி முகத்தில் பூரிப்பு தெரிந்தது.

''நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வரப்போறாங்க'’

''ஓ மாமாவும், அத்தையுமா?, எங்கே நிக்குறாங்க? போன் பண்ணாங்களா? ‘’

''இல்ல, இது புது ஆள். ஆனா, நம்ம வீட்டுக்கு வந்துசேர 280 நாள் ஆகுமாம்'’ என்றவளை ஒரு நிமிடம் குழப்பமாக பார்த்தான். தன் வயிற்றைக் காட்டி புன்னகைத்த மனைவியை, பாய்ந்து கட்டிப்பிடித்தவன் தேம்பியபடியே அழத்தொடங்கினான்.

-ச.அன்பரசு

குறிப்பு - இரு ஒரு பக்க கதைகளும் வார இதழின் ஒரு பக்க கதைப்போட்டிக்கு அனுப்பி தோல்வியுற்றவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!