நவீன தமிழிலக்கிய அறிமுகம் ஜெயமோகன்
நவீன தமிழிலக்கிய அறிமுகம்
ஜெயமோகன்
கிழக்கு பதிப்பகம்
பொதுவாக இப்படியான நூல்களை எழுத்தாளர்கள் எழுதுவது அரிது. எழுதினால் நிறைய வசைகளே வீடு தேடி வரும். பரவாயில்லை என எழுத்தாளர் ஜெயமோகன் துணிந்து எழுதியிருப்பார் போல. நூலை வாசித்தாலே நீங்கள் அதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
தன்னுடைய ரசனை அடிப்படையில் ஜெயமோகன் வாசித்த பல்வேறு எழுத்தாளர்களை வகைமைபடுத்தி நூல்களை விமர்சித்து எழுதியுள்ளார். பெரும்பாலும் இடதுசாரிகளுக்கு இலக்கியப் பரப்பில் பெரிய இடம் இல்லை. இப்படி அவர்களது படைப்புகள் பற்றி விமர்சனம் செய்வது அவர்களுக்கு கோபத்தை உருவாக்ககூடும். ஆனால், நூலை வாசிக்க வாசிக்க ஜெயமோகன் அவர்களின் பரந்துபட்ட இலக்கிய வாசிப்பு நம்மை முற்றாக ஆட்கொள்கிறது.
நவீன தமிழிலக்கிய அறிமுகம் போன்ற நூல்,இலக்கிய வாசிப்புக்கு வரும் வாசகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த நூலும் அதேபோல இலக்கியத்தை வகைமை பிரித்து எப்படியான நூல்கள் இங்குள்ளன. அதிலுள்ள பல்வேறு இசங்கள் என்னென்ன என விளக்கியுள்ளது. இதை தெரிந்துகொண்டவர்கள் அதற்கேற்ப நூல்களை எழுத்தாளர்களைத் தேடிப்பிடித்து நூல்களை வாசித்துக்கொள்ளலாம். இதனால் தேவையில்லாமல் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருக்கும் அலைச்சல், மன உளைச்சல் ஆபத்துகள் குறைகிறது.
தமிழில் வணிக எழுத்தாளர் என்று ஜெயமோகன் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து அவர்களை முன்னிறுத்துகிறார். கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் ஆகிய இரு நூல்களின் வணிக வெற்றி அடிப்படையில் இப்படி கூறுகிறார் என்று நினைக்கிறேன். வணிக எழுத்து மாறிக்கொண்டே இருப்பது. அந்தவகையில் நூல் எழுதப்பட்ட காலத்தில் வைரமுத்து வெற்றிகரமானவர். நூலை அவசரமாக எழுதினேன் என்று ஜெயமோகன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். அப்படியும் கூட நூலில் ஏராளமான எழுத்தாளர்கள், அவர்களது படைப்புகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
தமிழிலக்கிய அறிமுகத்தில் நூல் நிறைவுற்றபிறகு இடம்பெற்றுள்ள கலைச்சொற்கள் முக்கியமானவை. அவை ஆங்கிலம், தமிழ் என இரண்டிலும் எழுதப்பட்டுள்ளதால், அவற்றைக் குறித்து வைத்துக்கொள்ளலாம். நிறைய சொற்களை நாம் தமிழாக்கம் செய்யும் வேலை மிச்சம். இதையும் கடந்து சென்றால், எழுத்தாளர்களது படைப்புகள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. அவையும் வாசகர்களை நூல்களை தேடிப்படிக்க உதவும்.
-கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக