பௌத்த மத வேட்கையால் நேபாளம், இலங்கை, பர்மா சுற்றியலையும் பார்ப்பனரின் இடையறாத அலைச்சல்!

 பௌத்த வேட்கை

தர்மானந்த கோசம்பி

தமிழில் தி.அ.ஶ்ரீனிவாசன்

காலச்சுவடு வெளியீடு

தன் வரலாற்று நூல்.


NIVEDAN by Dharmanand Kosambi

First published in English as ‘Nivedan’ by PERMANENT BLACK

© 2011 Meera Kosambi


பௌத்த வேட்கை என்ற நூல், தர்மானந்த கோசம்பி என்ற சரஸ்வத் பார்ப்பனரின் பௌத்த தேடுதலைப் பற்றிப் பேசுகிறது. கோசம்பி, பௌத்தம் கற்க கோவாவில் இருந்து நேபாளம், இலங்கை, மியான்மர் என பல நாடுகளுக்கு சென்றிருக்கிறார். இறுதியாக இந்தியாவுக்கு திரும்பி தான் கற்ற பௌத்தத்தை கல்லூரியில் போதித்திருக்கிறார். பிறகு, உயிர்வாழும் ஆசை அற்றுப்போய், வார்தா ஆசிரமத்தில் உண்ணா நோன்பிருந்து உடலை உகுத்திருக்கிறார். 


இந்த நூல் நிவேதன் என்ற பெயரில் மராத்தி மொழியில் வெளியானது. அதை கோசம்பியின் பேத்தி மீரா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பின் வழியாக ஶ்ரீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்து உதவியிருக்கிறார். நூலில், பௌத்தம் கற்க எத்தகைய சவாலையும் சந்திக்க தயார் என்ற கிளம்பிய மனிதனின் அலைச்சலை எழுத்து வழியாக உணர முடிகிறது. அதை வாசகர்களின் மனதில் பதிவு செய்த வகையில் மொழிபெயர்ப்பாளர் ஶ்ரீனிவாசன் வெற்றிபெற்றுவிட்டார். 


குழந்தை திருமணம் சிறுவயதில் நடந்தாலும் கூட அதைப்பற்றிய கவனம் கோசம்பியிடம் எப்போதும் இருக்கவில்லை. பௌத்த மதம் பற்றி கற்கவேண்டும் என்ற தேடுதல் அவரை துரத்திக்கொண்டே இருக்கிறது. தொடக்கத்தில் சமஸ்கிருதம் மொழியைக் கற்க முயல்கிறார். வீட்டில் அதற்கு பெரிய ஆதரவில்லை. தனது முயற்சியாலே பாலிமொழியைக் கற்கிறார். இந்த மொழியைக் கற்பதன் வழியாகவே பல்வேறு நட்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார். சில இடங்களில் அதை முறையாக கற்காதவர்கள் பொறாமை கொள்கிறார்கள். துன்புறுத்தல்களும் நடைபெறுகிறது. ஆனால், கோசம்பி அதையெல்லாம் தனது பொறுமை வழியாக கடந்து வருகிறார்.  


இதில் மகந்த் என்பவர், பௌத்த விகாரையை விஷ்ணு கோவிலாக்க முயல்வதும், பள்ளிகளைக் கூட கட்டாமல் மக்களை குறைந்த கூலிக்கு வைத்து சுரண்டுவதையும் படிக்கும்போது வருத்தமாக இருந்தது. மகந்த், அந்தப்பகுதியில் பெரும் செல்வந்தர். ஆனாலும் பணம் சேர்க்கும் பேராசை மக்களுக்கு கல்வி அறிவை பிறர் கொடுக்க முன்வந்தாலும் தனது செல்வாக்கால் தடுக்க முயல்கிறார். இவரைப் போலவே பிறரை சுரண்ட நினைக்கும் சில மனிதர்கள் நூலில் வருகிறார்கள். அவர்களில் ஹரிநாத் டேவும் ஒருவர். இவர் தொடக்கத்தில் கோசம்பியிடம் இருந்து பாலி மொழியைக் கற்கிறார். பின்னாளில் பணி, பதவி உயர்வு பெற்று குடிபோதைக்கு அடிமையாகிறார். வேறு இடங்களுக்கு கோசம்பி பாலி மொழியைக் கற்பிப்பதை தடுக்க நினைக்கிறார். தன்னை சுரண்ட நினைக்கிறார் என ஓரிடத்தில் கோசம்பி எழுதியுள்ளார். எப்படி பார்த்தாலும் மற்றவர்களோடு ஒப்பிடும்போது ஹரிநாத் டே, கோசம்பிக்கு செய்த உதவிகள் அதிகம். 

  

இவருக்கு அடுத்து லான்மென் என்ற ஹார்வர்ட் பேராசிரியர். இவர் வாரன் என்ற ஆய்வாளரின் குறிப்புகளைக் கொண்டு, அவர் ஏற்படுத்திய நிதியாதாரத்தில் ஆய்வுகளை செய்கிறார். இதற்கு தர்மானந்த கோசம்பியும் பல்வேறு திருத்தங்களை செய்து உதவுகிறார். ஆனால், நூலின் அட்டையில் லான்மென் தன்னுடைய பெயரை மட்டுமே போட்டுக்கொள்வதாக கூறுகிறார். அதற்கு கோசம்பி, பெயர்களை போடுவதாக இருந்தால் ஆய்வுக்குறிப்பு, நிதி அளித்த மறைந்த ஆய்வாளர் வாரன், லான்மென், கோசம்பி என பெயர்கள் இடம்பெற வேண்டும். அல்லாதபோது வாரன் பெயர் மட்டுமே இடம்பெறவேண்டும் என்கிறார். இதை லான்மென் ஏற்கவில்லை. அத்தோடு கோசம்பிக்கும் லான்மெனுக்குமான உறவு முறிகிறது. அமெரிக்காவில் வுட்ஸ் என்ற ஆய்வாளர், ஓகாகூரா என்ற இருவர் மட்டுமே கோசம்பிக்கு உதவிகளை செய்கிறார்கள். 


நூல் நெடுகவே பார்ப்பனரான கோசம்பி, சைவ உணவுப்பழக்கத்தால் நிறைய சிக்கல்களை சந்திக்கிறார். அதுவும் புத்த பிக்குவாக இலங்கையில் இருக்கும்போது சந்திக்கும் அனுபவங்கள் இன்னும் மோசமானவை. பிட்சை எடுத்து உண்கிறார். பர்மா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள உணவுகள் அவரது உடல்நிலையை பாதிக்கிறது. உணவு, உடலின் நோய்கள் கடந்து பௌத்த தியானத்தை கோசம்பியால் செய்ய முடிகிறது. நூலில் சற்று நெகிழ்ச்சியான நிதானமான பகுதி என்றால் அது ஜெர்மனிய துறவியான தியான திரிலோக் என்பவரை சந்தித்து அவரோடு தியானம் செய்யும் பகுதிதான். 


நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியாவில் உள்ள சாதி தீண்டாமையாலேயே சரஸ்வத் பார்ப்பனரான கோசம்பி பாதிக்கப்படுகிறார். காசியில் அவருக்கு உணவு கிடைக்க பல்வேறு சத்திரங்களின் கதவுகளை தட்டுகிறார். இறுதியாக கிடைக்கும் சத்திர உணவும் கூட சிபாரிசுக் கடிதம் மூலமாகவே கிடைக்கிறது. சித்பவன் பார்ப்பனர்கள் சாப்பிட்டுவிட்டு போனபிறகு, இரண்டாவது பந்தியில் உட்கார்ந்து சாப்பிடவேண்டும். இதற்காக சில மணிநேரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்பகுதிகளை அவர் கரிய அங்கத வார்த்தைகள் மூலம் கடக்கிறார். அந்த நேரத்திலும் கூட கற்க வேண்டிய நூல்களை எடுத்து சென்று படிப்பதுதான் கோசம்பியின் பொறுமைக்கு உதாரணம். 


ஒருவர் சமைத்ததை இன்னொருவர் சாப்பிட மாட்டார் என்ற பிரச்னை இந்தியாவில் எந்தளவு ஆழமாக வேரோடி போயிருக்கிறது என்பதை நூலில் தனது அனுபவங்கள் வழியாக சொல்ல முயன்றிருக்கிறார். ஓரிடத்தில் நிறைய பயண, நிதி உதவிகளை செய்த ம. சிங்காரவேலர், இலங்கையில் உள்ள துறவியிடம் கோசம்பி ஒரு பார்ப்பனர் என்பதால் நம்பக்கூடாது என்று கூறிவிட்டு செல்கிறார். தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் செய்த சதிச்செயல்கள், பௌத்த துறவி என்பதையும் தாண்டி கோசம்பியை பார்ப்பனராக பார்க்க வைத்திருக்கலாம். பல்வேறு இடங்களுக்கு பயணிப்பதும், புதிய மொழிகளை கற்பதும். நூல்களை வாசிப்பதும் கோசம்பியை அறிவில் விசாலமானவராக மாற்றுகிறது. 


புத்த பிக்குவாக இருப்பவர், சமையல் செய்ய முடியாமல் உணவு உண்ண முடியாமல் தடுமாறி, பிக்குவத்தை துறப்பது முக்கியமான நிகழ்ச்சி. இதற்குப் பின்னரே பாலி மொழி, பௌத்தம் ஆகியவற்றை இந்தியாவில் தீவிரமாக பரப்ப முயல்கிறார். இதற்காக பரோடா மன்னர் கூறியபடி மாதம் 50 ரூபாய் சம்பளத்தையும் கூட ஏற்கிறார். அப்போது அவருக்கு ஹரிநாத் டே என்ற அரசு அதிகாரி மூலம் மாதம் 250 ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு கூட கிடைக்கிறது. 


பாலி மொழியைக் கற்றுக்கொண்டு பௌத்த நூல்களை வாசிப்பதோடு, நண்பர்கள் மூலம் ஆங்கிலத்தையும் தானே முனைந்து நூல்கள் வழியாக கற்றுக்கொள்ள முயல்கிறார். இதில் அவர் பெறும் தேர்ச்சி பின்னாளில் அவர் லான்மேனுடன் செய்த ஆய்வு நூலுக்கு ஆங்கில முன்னுரை எழுதுவது வரையில் செல்கிறது. இந்த மொழிகளைக் கற்கும் திறனுக்கு ஹரிநாத் டே, இலங்கை பித்தபிக்கு சுமங்கலா ஆகியோரும் முன்னோடிகள் எனலாம். 


கோசம்பியின் பௌத்த வேட்கை பயணம் பயணம் வழியாக இந்திய சமூகத்தில் உள்ள சாதிமுறை, கல்வி பிரச்னைகள், அடுக்கதிகாரம், பௌத்தம் பற்றிய மக்களின் பார்வை, மூடநம்பிக்கைகள், பல்வேறு நாடுகளில் உள்ள பௌத்த வழிபாட்டு முறைகள், உணவுமுறைகள், பாலி மொழி நூல்கள், சோசலிச நூல்கள் ஆகியவற்றையும் வாசகர்கள் அறிந்துகொள்ள முடிகிறது. அயல்நாடுகளில் சுற்றியலைந்த அனுபவத்தில் சமூக அறிவியல் மீது கோசம்பிக்கு ஆர்வம் உருவாகிறது. இது தொடர்பான நூல்களையும் வாங்கி படிக்கிறார். தேவாலயங்களுக்கு சென்று பல்வேறு உரைகளைக் கேட்கிறார். வார இறுதியில் பல்வேறு குழுக்களின் உரைகளைக் கேட்டு நிறைய விஷயங்களை உள்வாங்க முனைந்திருக்கிறார். இதெல்லாம் அவர் சற்று திறந்த மனதோடு இருப்பதால் சாத்தியமாகியுள்ளது. 


நூலின் இறுதியில் ஆங்கிலம், மராத்தி மொழிகளில் உதவிய மேற்கோள் நூல்கள் பட்டியல் உண்டு. அதைப் படிக்க நினைப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 


-கோமாளிமேடை குழு 


# தர்மானந்த கோசம்பி #பௌத்தம் #பாலி மொழி #இலங்கை #பர்மா # நேபாளம் #சைவ உணவு #மிருக பலி #தியானம் #திரிபீடகம் #புத்தர் #மகாபோதிசபை #ம சிங்காரவேலர் #அயோத்திதாசர் #நூல் விமர்சனம் # தன்வரலாறு #மீரா கோசம்பி #காலச்சுவடு 


#buddhist #meditation #dharmanand kosambi #kalachuvadu #autobiography #marathi #maharashtra #saraswat brahmin #book review #tamil books #nivedan #translation #tamil #buddha 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!