நான்கு இட்லி ஒரு உளுந்துவடை - பேக்கேஜ் உணவுக்கடைகளின் வணிக உத்திகள்
நான்கு இட்லி ஒரு உளுந்துவடை
திருவண்ணாமலை செல்வது என்பது அங்கு குடிகொண்டுள்ள தெய்வத்தை பார்க்க அல்ல. அப்படி நிறையப் பேர் நினைப்பார்கள். அந்த தெய்வத்தை வழிபடும் அளவுக்கு உடலில் தெம்பு இல்லை. எனவே, அந்தப்பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. பதிலாக மதுரை காரியாப்பட்டியிலிருந்து புலம் பெயர்ந்து திருவண்ணாமலையில் வாழும் நண்பரை பார்க்க சென்றேன். பெரிதாக ஒன்றும் இருக்காது. அவருடன் பேசுவது, நான்கைந்து கடைகளில் இட்லி, புரோட்டா தின்பது, சில நூல்களை வாசிப்பது அவ்வளவுதான் திருவண்ணாமலைக்கான பயணம் என்பது. பெரிய வேறுபாடு ஏதும் இருக்காது.
சிலசமயங்களில் ஆன்மிக நண்பர், வெளிநாட்டு பக்தர்களுக்கு புகைப்படம், வீடியோ எடுத்து தருவது என ஒப்புக்கொண்டு வேலை செய்வதுண்டு. அப்போது தன்னைப் பார்க்க வரும் என்னைப்போல ஆசாமிகளை தனது உதவியாளர் ஆக்கிக்கொண்டுவிடுவார். அப்புறம் என்ன ஏற முடியாத மலைகளில் பேண்டும் சட்டையுமாக தொங்கிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். இப்படி ஒருமுறை கந்தாஸ்ரமம் செல்ல முயன்றபோது நேரிட்ட இடர்ப்பாடு சொல்ல முடியாத கஷ்டத்தை உடலுக்கும் மனதுக்கும் கொடுத்தது.
முஸ்லீம்கள் தாங்கள் வாழும் நாடு எதுவாக இருந்தாலும் மதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். தாய்நாட்டிற்கு ஆபத்து வந்தாலும் கூட அப்படித்தான் என அம்பேத்கர் கூறுகிறார். அந்த வகையில் ஆன்மிக நண்பர், திருவண்ணாமலையில் என்ன அநீதி நடந்தாலும் அவங்க பக்கம் நியாயம்னு இருக்குதுல்ல அதையும் பேசணுமல்ல என்று வந்துவிடுவார். இந்த வகையில் காலை டிபன் ஐட்டம் பற்றி பேசினோம். நான்கு இட்லி கூடவே உளுந்து வடையை அனைத்து இடங்களிலும் வைக்கிறார்கள். நான்கு இட்லி நீங்கள் கேட்டாலும் உளுந்து வடை தினகரன் இணைப்பிதழ் போல பின் அடித்து அல்லது கோந்து போட்டு பக்கங்கள் ஒட்டாமல் வந்து சேர்வது போல தட்டடையும். இட்லிக்கு காசு நீங்கள் கொடுப்பீர்கள். வடைக்கு அதுவும் உங்கள் தலையில்தான் விடியும். ரவுண்ட் பிகர் வருவதற்காக இத்தகைய அரும்பாடு. ஆன்மிக நண்பரிடம் இதுபற்றி கேட்டபோது, பெரிய ஹோட்டல்களில் ஒரு இட்லி 15 ரூபாய், 20 ரூபாய் தெரியுமா? இங்கு மட்டும் 6 ரூபாய்க்கு கொடுக்கிறாங்க, வடை வெக்கலீன்னா எப்படி அவங்களுக்கு கட்டுபடியாகும் என்றார்.
எனக்கு நாலு இட்லிதான் தேவை. அதுக்குத்தான் எங்கிட்ட காசு இருக்கு. அப்போ எனக்கு சாப்பிட இட்லி குடுக்கமாட்டாங்க. அப்படித்தானே என்றேன்.
வாழை எலை வெக்கிறாங்க, ரெண்டு சட்னி, சாம்பார் வெக்கிறாங்க. முப்பது ரூபாய் கூட குடுக்க மாட்டியா?
வாழை எலையில வைக்கணும்னு நான் கண்டிஷன் போடலியே, விலையைக் குறைச்சு குறிப்பிட்ட வெலையிலேயே விக்கணும்னா பிளாஸ்டிக் பேப்பர் விரிங்க. விலையை இன்னும் கூட குறைக்கலாமே?
நான்கு இட்லி, ஒரு உளுந்துவடை என்பது திருவண்ணாமலை ஓட்டல்களில் உள்ள பேக்கேஜ் பாணி. சுட்ட வடையை யார் தலையிலாவது கட்டவேண்டுமே? நீ சாப்பிடுகிறாயா இல்லையா என்பது உனது பிரச்னை. வைப்பது என் வேலை. அவ்வளவுதான். நான் இப்படித்தான் செய்வேன். வடையை வைப்பேன். தின்றுவிட்டு காசு கொடுப்பது உன் வேலை என நடந்துகொள்கிறார்கள். இதற்கு நண்பர் போன்றோரின் சப்பைக்கட்டு வேறு. அவர்களுக்கு லாபம் வரும் வரையில் எல்லாமே சரி. நஷ்டம் வந்தால் பிரச்னையில்லை. விதிமுறையை மாற்றி எழுதிக்கொள்ளலாம்.
ஆன்மிக நண்பர் பதினைந்து ரூபாய் என்று ஒரு இட்லி விலை சொன்னார். சரிதான்.ஆனால் அங்குள்ள ஓட்டல் சூழலும், ஆறு ரூபாய் இட்லி சூழலும் ஒன்றாக முடியுமா?
திருவண்ணாமலை மெல்ல வட இந்திய மாநிலம் போல மாறி வருகிறது. நகரெங்கும் மாடுகள் இஷ்டம்போல திரிகின்றன. ஏதாவது நோய் வந்தால் எளிதாக மக்களுக்கு பரவிவிடும். சாலை முழுக்க சாணி. அதில் கால் படாமல் போக ஜெமினி சர்க்கஸ் பார்த்த அனுபவங்களையெல்லாம் மீள காட்சிபடுத்த வேண்டியிருக்கிறது.
விசிறி சாமியாரின் ஆசிரமம் அருகே உள்ள வீட்டில் தங்கியிருந்தேன். ஒருமுறையேனும் அங்கு சென்று சாப்பிட்டிருக்கலாம். ஒருமுறை கொரோனா சர்டிபிகேட் பார்த்துதான் சோறு போடுகிறார்களம் என ஆட்டோ டிரைவர் சொன்னார். வேறுவழியின்றி வந்த வழியே திரும்ப நேரிட்டது. அப்போது புகைப்பட கலைஞர் ஜானி அருகில் இருந்தார். இந்தமுறை சென்றபோது ஆசிரமத்தை மறந்தாயிற்று. முக்கியமாக மதியம் சோறு தின்னும் பழக்கமும் தொலைந்துவிட்டது. இதற்கு, யாரை குறை சொல்வது?
திருவண்ணாமலையில் தெலுங்கு மொழியில் சில போர்டுகளைப் பார்த்தேன். ஆன்மிக நண்பர், ஆந்திரத்தில் இருந்து தெலுங்கர்கள் இங்கு வந்து நிலங்களை வாங்கிப் போட்டு வருகிறார்கள். வீடுகளை வாடகைக்கு விடும் தொழில்களை செய்கிறார்கள் என்று பதற்றமானார். இந்திய ஒன்றியத்தில் யாரும் எங்கு வேண்டுமானாலும் போய் நிலங்களை வாங்கலாம். விற்கலாம். தங்கலாம். அல்லது நாடோடியாக திரியலாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். உள்ளூர் பதற்றம் என்பது நகரில் உள்ள பெரும்புள்ளிகள் உருவாக்கும் போலியான பீதி, வதந்தி செய்திகள் என்றே புரிந்துகொள்ளவேண்டும்.
சீர்கேடுகளை புனிதமாக்குவதுதான் வாழும் நகருக்கு செய்யும் விசுவாச பணி என ஆன்மிக நண்பர் நம்புகிறார். மகிழ்ச்சி.
இரண்டு புரோட்டாவும் கறி குருமாவும் சாப்பிட்டுவிட்டு ரவுண்ட் பிகராக முப்பது ரூபாய் கொடுத்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தேன்.
குறிப்பு சேலம் வழியாக திருவண்ணாமலை செல்லவேண்டுமென்றால், டீலக்ஸ் அல்லாத பேருந்து எனில் ரூ.145 டிக்கெட். டீலக்ஸ் என்றால் ரூ.150 வாங்குகிறார்கள்.
சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் திருநங்கைகளின் தொல்லை அதிகம். இதயமே நின்றுவிடும் அளவுக்கு கடும் நெடியைக் கொண்ட வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு பிச்சைப்பணம் பத்து ரூபாயைக் கேட்கிறார்கள். அரைமணிநேரம் பேருந்து நின்றால் ஐந்து பேர் வந்துவிடுகிறார்கள். அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ள பரம்பொருள் என்பார்கள். அதுபோல அனைத்து பேருந்து நிலையங்களிலும் திருநங்கைகள் இல்லாமல் இல்லை. இவர்களெல்லாம் சுயம்பாக இயங்குகிறார்களா அல்லது வலையமைப்பு போல இருப்பவர்களா என ஒன்றும் புரியவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக