வீட்டின் தரைக்கு கீழே தோண்டப்பட்ட குகை - ஜெயமோகனின் குகை குறு நாவல்!

 குகை - ஜெயமோகன்

குறுநாவல்


இக்கதையில் வரும் மனநல குறைபாடு கொண்டவர், புதிதாக வாங்கிய வீடு ஒன்றின் கீழே குகை வழிப்பாதை செல்வதைக் கண்டறிகிறார். அந்த வழிப்பாதையின் மர்மத்தைக் கண்டுபிடித்து என்ன செய்தார் என்பதே குறுநாவலின் மையம். நாவலை நடத்திச்செல்ல பெரிய பாத்திரங்களின் தேவை இல்லை. இதில் மூன்று பாத்திரங்கள் வருகின்றன. அம்மா, மகன், மருமகள் என மூன்றே பாத்திரங்கள்தான். கதை உண்மை சம்பவம் ஒன்றிலிருந்து உருவானது. ஆனால், அதை சாகச கதையாக எழுத்து திறமையால் மாற்றியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். கதையை சொல்பவராக வரும் மகன், மனநல குறைபாடு கொண்டவர். அவருக்கு திருமணமாகிவிட்டிருக்கிறது. ஆனால், மனைவியோடு பேச்சு முறிந்து ஆறுமாதகாலமாகிறது என்றொரு தகவல் கூறப்படுகிறது. இப்படியான மனநல குறைபாடு கொண்டவருக்கு எப்படி மணமாகியிருக்க கூடும். கதையை முழுதாக படித்தால், அவருக்கு சிறுவயது முதற்கொண்டு மனநல குறைபாடு உள்ளதை அறியலாம். மனநல குறைபாடு கொண்ட கணவன், வேலைக்கு செல்லும் நவநாகரிக மனைவி கதை என்பதை தனியாகவே எழுத முடியும். கதைக்கு அது பெரிய முக்கியத்துவம் தரும் விவகாரம் இல்லை. அப்படி பார்த்தால் மனைவி என்ற பாத்திரமே கூட முக்கியத்துவம் கொண்டதாக இல்லை. அந்த வீட்டை வாங்குவது, ஆறுமாதம் விலையுயர்ந்த போன்களை பயன்படுத்திவிட்டு கைவிடுவது என சில இடங்களில் அவரைப் பற்றிய குறிப்புகள் வருகிறது. கதை சொல்லுபவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே எந்த உரையாடலும் நடப்பதில்லை. 


குறுநாவலில் வரும் பெரும்பாலான உரையாடல்கள் அம்மா, மகனுக்கும் மட்டுமே நடக்கிறது. எண்பது ஆண்டு பழமையான வீட்டை மனைவி தனக்கு கிடைத்த பணத்தை வைத்து வாங்குகிறார். அப்படி வாங்குவதற்கு முக்கிய காரணம், அனைவருக்கும் வீட்டில் தனித்தனி அறைகள் உண்டு. அதுவொரு சுதந்திரத்தை தருகிறது. காது மந்தமான அம்மா, தன் விருப்பப்படி டிவி சேனல்களை சத்தமாக வைத்து கேட்கலாம். மருமகள், தனது விருப்பப்படி சுதந்திரமாக அறையில் இருக்கலாம். மனநல குறைபாடு கொண்ட மகன், தனக்கே தனக்கென அறையில் தனியாக இருக்கலாம். சிறிய வீட்டில் தானும் அம்மாவும் முட்டிக்கொள்ள நேரிட்டதை மோதிக்கொள்ள நேர்ந்த சம்பவத்தை நினைவுகூர்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கூறும் கதவு என்பதை மனது என்று கூட பொருள் கொள்ளலாம். அத்தனைக்கும் பொருத்தமாக உள்ளது. அவரது அறையின் தரையில் கீழேதான் குகைவழி உள்ளது. அதை தோண்டித் திறந்து உள்ளே சென்று புழங்குகிறார் மகன். 


யாரும் அறியாத அல்லது மறந்துபோன குகை வழிப்பாதை. மனநல குறைபாடு கொண்ட பாத்திரம், அதில் நிதானமாக நடந்து போகிறது. பல்வேறு வழிகளை கண்டடைகிறது. சில மனிதர்களையும் அடையாளம் காண முயல்கிறது. பல்வேறு ரகசியங்களை கேட்கும் இடம் சுவாரசியமான பகுதி. அப்படியான ஒரு ரகசியத்தை மருத்துவரிடம் கூறுகிறார். அதை தான் சொன்னால் பிறர் நம்ப மாட்டார்கள் என்று கூறுவது, அம்மாவிடம் குகை வழிப்பாதை பற்றி நீளமாக பேசுவது சற்று பொருந்தாதது போல தோன்றுகிறது. மனநல குறைபாடு கொண்டவர், குகைவழிப்பாதையை கண்டறிகிறார். ஆனால், அவர் கண்டறிந்த ரகசியத்தை வேறு யாரிடமும் பகிர முடியாது. அவர் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என்ற வகையில் குகை தன்னுடைய ரகசியத்தை தானே காத்துக்கொள்கிறது. மனநல குறைபாட்டால் எட்டாண்டுகள் படுக்கையில் இருந்தவர், மெல்ல உள்ளுக்குள் இறுகிப்போனவராக மாறுகிறார். அவருக்கு குகை வழியே ஆறுதலாக அமைகிறது. அதன் வழியாக நகரெங்கும் சுற்றித்திரிகிறார். பேருந்து நிலையத்திற்கு கீழே சென்று அதன் இரைச்சலை ஒலிகளை கேட்கிறார். ஒரு வீட்டின் கீழே நின்றுகொண்டு வடமொழி பாடலைக் கேட்கிறார். தனது பயணந்தோறும் பல்வேறு ரகசியங்களை அறிந்துகொள்கிறார். அம்மாவும், மனைவியும் அறியாமல் தனது குகை வழியாக பயணிக்கிறார். முதலில் இரவு மட்டும் சென்றவர், பிறகு பகலிலும் பயணம் செல்கிறார். பகல், இரவு என காலம் மாறுவது போலவே மனிதர்களும் செயல்களும் மாறுகின்றன. வேடங்களும், உண்மைகளும் அரங்கேறுகின்றன. மருத்துவரின் காமவெறியை நாயக பாத்திரம் சொல்லும்போது நாமும் அதே பாத்திரம் போலவே இருந்தால்தான் என்ன என்று தோன்றுகிறது. 


கோமாளிமேடை குழு



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!