இரு வேறு காலகட்ட கதிர் பாத்திரங்கள் சமூகத்திற்காக உழைக்கும் செயல்பாடுகள் - கதிர் 2022 - தினேஷ் பழனிவேல்

 

 

 

 


 

 

 

 

கதிர்

தினேஷ் பழனிவேல்


இரண்டு வேறு காலகட்டங்களில் நடைபெறும் கதை. இரண்டிலும் கதிர் என்ற நபர் எப்படி செயல்படுகிறார். அவரது வாழ்க்கை எப்படி சமூகத்திற்கானதாக மாறுகிறது என்பதையே இயக்குநர் சொல்ல நினைத்திருக்கிறார்.

யாருக்காக, எதற்கு வாழ்கிறோம் என்ற கேள்விக்கு பதில் காண்பது முக்கியம். இதுதான் தந்தியில் போடுவது போல கதையின் மையம்.

1970களில் நடக்கும் கதை. கோவையைச் சுற்றியுள்ள கிராமம் ஒன்றில் உழைப்புக்கு நெல் அல்லாது கூலி தர சொல்லி கம்யூனிஸ்டுகள் கூற, அதை பின்பற்றும் விவசாயிகள் என்ன விளைவுகளை சந்தித்தார்கள் என்பது பின்கதையாக விரிகிறது. தொடக்கத்தில் காவல்துறையினர் மலைப்பகுதி அருகில் கைதிகளுடன் வர, திடீரென சொல்லி வைத்தது ஜீப் நின்றுபோக அங்கே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கிறது. ஜீப்பின் பின்புறத்தில் ரத்தம் கசிகிறது. இதுதான் தொடக்ககாட்சி. இதற்குப் பிறகு படம் நவீன காலத்தில் நகர்கிறது.

பொறியியல் படித்துவிட்டு ஊருக்குள் பீர் அடித்துவிட்டு சுற்றுபவன் கதிரவன். அவனது அப்பா, ஊருக்குள் தொழிலதிபராக இருக்கிறார். மகனைப் பார்த்து கவலைப்படுகிறார். சாதி மாறி கல்யாணம் செய்தவர்களை பிடித்து அடிக்கையில் அது காவல்நிலையத்தில் பஞ்சாயத்தாகிறது. இதில் அப்பாவுக்கும் மகனுக்கும் பிரச்னையாக, கதிரவன் சென்னைக்கு பஸ் ஏறுகிறான். அங்கு வந்து ஏதாவது வேலை தேடிக்கொள்ள நினைக்கிறான். அப்படி நேர்காணலுக்கு போகும்போது கற்ற கல்வியும் கைகொடுக்க மறுக்க, ஆங்கிலமும் சறுக்குகிறது. கூடவே தங்கியிருக்கும் வீட்டுக்காரம்மாவோடும் தகராறு தலைதூக்கிறது. கதிரவன் சென்னையில் வேலை தேடிக்கொண்டானா, அவனது வாழ்க்கை மாறியதா என்பதே கதை.

படத்தில் கதிரவன் சண்முகமாக நடித்துள்ள வெங்கடேஷ், வீட்டு ஓனராக நடித்துள்ள ரஜினி சாண்டி ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ரஜினி சாண்டி, இவரின் பேச்சும் இவருக்கான காட்சிகளும் தான் படத்திற்கு பெரும் பலம்.

படத்தின் பின்பகுதியில் வரும் சந்தோஷ் பிரதாப்பின் கம்யூனிச விஷயங்களுக்கு நேரம் குறைவு. காட்சிகளும் விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் ஆகியோரின் பிரச்னையை உறுதியாக கையாளும் அளவில் இல்லை. இரண்டு பகுதிகளிலும் வரும் கதிர் என்ற பாத்திரங்களுக்கு உள்ள வேறுபாடும், அவர்கள் ஒன்றுபடும் இடங்களை இயக்குநர் காண்பிக்க நினைத்திருக்கிறார். உண்மையில் இதை திரைப்படமாக உருவாக்காமல் வெப் தொடராக எடுத்திருக்கலாம். அப்போது இன்னும் வலிமையாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

படத்தில் காதல் ஊறுகாய் போலத்தான் இருக்கிறது. இந்த வகையில் படத்தை எடுத்த துணிச்சலுக்காக இயக்குநர் தினேஷ் பழனிவேலை பாராட்ட வேண்டும். பவ்யா படத்தில் சிறிதுநேரம் வந்தாலும் பார்க்க அழகாக இருக்கிறார் நடிக்கவும் முயன்றிருக்கிறார்.

படத்தில் கிராமத்தில் வரும் சண்டை மூட்டிவிடும் மாமா பாத்திரம் நகைச்சுவைக்கு பெரும் உதவியாக இருக்கிறது. வசந்தியை ஒருதலையாக காதலித்து அந்தப் பெயரைக் கேட்டாலே அழுகை வரும் பாவம் காட்டும் இளைஞரும் நன்றாக நடித்திருக்கிறார்.

வாழ்க்கை பிறருக்கானதே...

கோமாளிமேடை டீம்


கருத்துகள்