வீடு தேடி வந்து வலியைப் போக்கும் தன்னார்வ அமைப்பு - கேன் சப்போர்ட் தன்னார்வ அமைப்பு
வலிநிவாரண சிகிச்சைக்கு நாங்க இருக்கோம் - கேன் சப்போர்ட் அமைப்பின் மருத்துவ சேவை
இந்திய மாநிலங்களில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு, அதன் இறப்பு அளவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. புற்றுநோய் தொடக்கத்தில் கண்டுபிடித்தால் தடுக்கலாம் என்பது உண்மை. ஆனால் அறிகுறிகளை கவனிக்காதவர்களுக்கு இறப்பு உறுதி. இறுதிக்கட்டத்தில் புற்றுநோய் காரணமாக ஏற்படும் வலி என்பது நோயாளிகளின் உறவினர்களே பயங்கொள்ளும்படியாக இருக்கும்.
டெல்லியைச் சேர்ந்த கேன் சப்போர்ட் என்ற தன்னார்வ அமைப்பு, புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நகரங்களில் வலி நிவாரண சிகிச்சைகளை வழங்கி வருகிறது. இந்த தன்னார்வ அமைப்பு திரட்டும் நன்கொடைகள் மூலமே மாத்திரை, சிகிச்சை, நோயாளிக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றையும் வழங்க முடிகிறது.
பொதுவாக இந்தியாவில் தற்போது மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் என்பது ஏழைகளுக்கு எட்டாத ஒன்றாகவே இருக்கிறது. அதுவும் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை, மருந்துகள் என்பது ஏழைக் குடும்பங்களை கடன் வலையில் சிக்க வைத்துவிடும். இப்படி வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று மருந்து, மாத்திரைகள், வலியைக் குறைப்பதற்கான ஆலோசனைகளை கேன் சப்போர்ட் அமைப்பு செய்து வருகிறது. பாதிக்கப்பட்டவர் குடும்பத்தின் வருமான ஆதாரமாக இருந்தால், பெண்கள் தொழில்செய்யவும் தேவையான உதவிகளை கேன் சப்போர்ட் அமைப்பு வழங்குகிறது. இவை மனிதநேய அடிப்படையில் செய்யப்படுகின்ற உதவிகள் எனக்கொள்ளலாம்.
இந்த தன்னார்வ அமைப்பின் நிறுவனர், ஹர்மலா குப்தா. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹாட்கின்ஸ் லிப்போமா என்ற புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சை பெறும்போதுதான் வலி நிவாரண சிகிச்சையை தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினால் என்ன என்று தோன்றியிருக்கிறது. யோசிப்பதோடு இல்லாமல் இறங்கி நடைமுறைப்படுத்தவும் தொடங்கிவிட்டார். இந்த அமைப்பிடம் மொத்தம் முப்பது குழுக்கள் உள்ளன. இவர்கள் நகரின் பல்வேறு இடங்களுக்கு வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை என சந்தித்து நோயாளிகளுக்கு மருந்து, ஆலோசனைகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இப்போது புள்ளிவிவரங்களுக்குப் போகலாம்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்க்கை முறை மாற்றம், புகையிலை, மாசுபாடு காரணமாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. புற்றுநோய் பாதிப்பு, நோயாளிகளின் மரணம் ஆகியவற்றின் அடிப்படையில் உ.பி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தகவலை தேசிய புற்றுநோய் பதிவேட்டு திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது.
நாம் தமிழகத்தைப் பார்ப்போம். 2020ஆம் ஆண்டில் மட்டும் 88, 866 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மரணத்தறுவாயில் இருப்பவர்களின் எண்ணிக்கை 48,314.
டைம்ஸ் ஆப் இந்தியா 2.9.2022
image pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக