நாக்கை உயிர்ப்பித்த சுலைமானி தேநீர் - கடிதங்கள் - கதிரவன்

 









புராணங்களின் சுவாரசியமான மறுபுனைவு!

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?

ஞாயிறு பொதுமுடக்கம் இல்லை. எனவே, சன் மோகன் அண்ணா அறைக்குச் செல்ல நினைத்தேன். அவர், ஓடிடி ஒன்றுக்கு தனது படத்தை இயக்கும் வேலையில் வேகத்தில் இருந்தார். எனவே, நான் சக்திவேல் சாரின் அறைக்குச் சென்றேன். காலையில் நானும் அவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிடுவது வழக்கம். ஒருவேளை உணவு, ஒரு படம் என்பதுதான் இயல்பாக அமைந்த பழக்கம்.

அவரது அறையில் தெலுங்கு நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அகண்டா படம் பார்த்தோம். ஒவ்வொரு காட்சிக்கும் சக்தி சார் என்னைப் பார்த்து கேலிப்புன்னகை செய்துகொண்டே இருந்தார். அது மட்டுமே சங்கடம். மற்றபடி படத்தில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. பார்ப்பவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். விருப்பங்களை நிறைவேற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இயக்குநர் போயபட்டி சீனு படம் எடுத்திருந்தார். வாழ்க்கையைத் தாண்டிய புனைவுப்படம். தியேட்டரில் விசில் அடித்து பார்க்கவேண்டிய படம். அதற்காகவே படத்தை எடுத்திருக்கிறார்கள். ஓடிடியில் பார்த்தாலும் கூட டிவியின் பிரேமிற்குள் காட்சிகள் அடங்கவில்லை.

கனிமச்சுரங்கத்தில் கிடைக்கும் கதிர்வீச்சு கனிமம் மக்களை எப்படி பாதிக்கிறது, அதை தடுக்க நாயகன் எடுக்கும் முயற்சி அவரது குடும்ப நிம்மதியை எப்படி அழிக்கிறது என்பதே படம். இரண்டு நாயகர்கள். ஒருவர் லௌகீக நாயகன், இன்னொருவர் தனக்கான தர்மத்தின்படி நடக்கும் சந்நியாசி. நாளை எனக்கு அலுவலக வேலைகள் தொடங்குகின்றன.

புராணங்களை மீள்புனைவு செய்து எழுதுவது எனக்கு படிக்க பிடித்திருக்கிறது. இப்போது இந்திய எழுத்தாளர்கள் இப்போது மீள்புனைவு என்ற வகையில் நூல்களை எழுதி வருகிறார்கள். அமீஷ் எழுதிய ராவணன் பற்றிய நாவலை வாசித்துள்ளேன். இப்போது அவர் எழுதிய ராமன் பற்றிய தொடர் நாவலை பீடிஎப்பாக போனில் படித்து வருகிறேன்.

உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள். தேர்தல் நேரம். வீட்டில் பெற்றோரைக் கேட்டதாகச் சொல்லுங்கள். நன்றி!

அன்பரசு

30.1.2022

மயிலாப்பூர்

-----------------------------------------------------------

துவர்ப்பும் இனிப்புமான சுலைமானி தேநீர்!

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். தேர்தல் வேலைகளில் பரபரவென இருப்பீர்கள். உடல்நலனை பார்த்துக்கொள்ளுங்கள். நாளை முதல் அலுவலகத்தில் எப்போதும் போல உதவி ஆசிரியர்கள் பணிக்கு வந்துவிடுவார்கள். இனி சண்டைகளும், கூச்சலும், களேபரங்களும் தொடங்கும். இன்றே சீஃப் டிசைனர் முகத்தில் ஏதோ பீதி தெரிந்தது. முடிந்தளவு பொருட்களை அரசு சிறப்பங்காடியில் வாங்க முடிவு செய்துள்ளேன்.

அரசு சிறப்பங்காடியில் கொஞ்சம் சிறிய அளவுகளில் பொருட்களை வாங்க முடிகிறது. விலையும் சற்று குறைவு. என்ன பணியாளர்கள் சற்று தூக்கம் கலைந்து எழுந்தால்தானே கடை முழுக்க கிடக்கும் பெட்டிகளை அடுக்கி வைக்க முடியும்?

இலக்கியம் கூட நவீனமாகிவிட்டது. தொடக்கத்தில் கவிதைகளை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவார்கள். பின்னாளில் வாய்ப்பு வசதி இருந்தால் நூலாக அச்சிடுவார்கள். இப்போது யூடியூப், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நூலாக்குகிறார்கள்.

ஹிருதயம் மலையாளப் பட பாடல்களைக் கேட்டேன். காதல் உணர்வை உற்சாகமாக நம் மனதிற்குள் செலுத்தும் இசை அமைப்பாளர் ஹெசம் அப்துல் வகாப்பின் இசை அற்புதம். படத்தின் காட்சிகள், இசை ஏற்படுத்தும் காதல் உணர்வை வேறு உயரத்திற்கு கொண்டு செல்கிறது.

கடந்த ஞாயிறு, குங்குமம் சக்திவேல் சாரின் அறைக்குச் சென்றேன். அருகிலுள்ள கடையில் சுலைமானி டீயை அறிமுகப்படுத்தி வைத்தார். நான் தான் அதன் கொதிநிலை தெரியாமல் எடுத்து கையை சுட்டுக்கொண்டேன். துவர்ப்பும், இனிப்பும் கொண்ட வினோத சுவை. அவரின் அறையில் ஒரு படம் பார்த்துவிட்டு உடனே வந்துவிட்டேன். பல்வேறு திட்டங்களோடு தினசரி நாட்களை செலவு செய்யும் ஆதவன் நாளிதழில் பழக்கமான நண்பர்தான் சக்தி.

சூப்பர் மார்க்கெட் சென்றால் கூட பொருட்களை குறைவாகவே வாங்க வேண்டும். இப்போதைக்கு அதுதான் எனது முடிவு. சமையல் செய்வதில்லை எனவே, அது தொடர்பான செலவு குறைந்துவிட்டது. பொருட்களை வாங்கி தேவையின்றி வீணாக்க வேண்டியதில்லை.

அன்பரசு

31.1.2022

மயிலாப்பூர்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்