கணியம் சீனிவாசன் செய்த உதவி - கடிதங்கள் - கதிரவன்

 













பரஸ்பர உதவி!

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? இன்று மடிக்கணினியை அன்வர் என்பவரிடம் பழுது நீக்க கொடுத்தேன். புதிதாக ஓஎஸ் பதிவாகும்போது அதில் உள்ள கோப்புகள் அழிந்துவிடும். கணியம் சீனிவாசன் சார் செய்யும் உதவி இது. முன்னமே கூறியுள்ளது போல அவரின் தளத்திற்கு நிறைய நூல்களை இலவசமாக கொடுத்துள்ளேன். இதில் என்னுடைய சுயநலமும் உள்ளது. பரஸ்பர சகாயம் என நினைக்கிறேன்.

மூன்றாவது மாடியில் ஆட்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. 14 பேருக்கு 2 கழிவறை 2 குளியலறை உள்ளது. ஆட்களின் வரத்து கூடியதால், நான் இன்டக்ஷன் ஸ்டவ்வில் சமையல் செய்வது குறைந்துவிட்டது. வயிற்றுக்கு பிரச்னை செய்யாத இடத்தில் தான் உணவு வாங்கி சாப்பிடுகிறேன். அலர்ஜி பாதிப்பு எப்போது வெளியே வருமோ?

அன்பரசு

23.12.2021

மயிலாப்பூர்


--------------------------------------------------------------------------------------------------------------

பிறரை விற்றுப்பிழைக்கும் சுயநலம்!

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?

வேலைகள் இப்போது அதிகரித்துள்ளன. நாளிதழ் பொறுப்பாசிரியர் கட்டுரைகளை முன்கூட்டியே மென்பொருளில் பதிவிடச் சொன்னார். ஆனால் கோ ஆர்டினேட்டர் இரண்டு நாட்களுக்கு முன்னர் பதிவிட்டால் போதும் என கோபமாக பேசுகிறார் . தலைவலிக்கிறதாம்.

வேலை செய்ய விருப்பமில்லை என்பதை எப்படியெல்லாம் சொல்லுகிறார் பாருங்கள். எங்கள் நாளிதழில் எழுத வேண்டுமெனில், எடிட்டரின் அன்பும் ஆதரவும் தேவை. ஆனால் நேற்று ஆபீசுக்கு வந்த கிரைம் கதை எழுத்தாளர் ஒருவர், சக உதவி ஆசிரியர்களின் தொலைபேசி எண்களை சேகரித்தார். கொடுப்பதே பெறுவதற்காகத்தான் என்று பழமொழி ஒன்றைச் சொல்வார்கள். அதுபோலவே, ஒரு டப்பா நிறைய மிட்டாய் கொடுத்து அலைபேசி எண்ணைப் பெற்றார். இதைப் பெற்றுக்கொடுத்தவர் சக உதவி ஆசிரியரான பெண்மணி. அவருக்கு பிறரை குறைந்த விலைக்கேனும் விற்றுக்கூட தன்னை பெருமையாக நினைக்க வைக்கவேண்டும் என்பதுதான் லட்சியம். அதை செவ்வனே நிறைவேற்றினார். அந்த எழுத்தாளர் கட்டுரை எழுத வாய்ப்பு கேட்டு வந்தார். அவர் வந்து உட்கார்ந்த நிலையைப் பார்த்தால் நாங்கள் அவரிடம் வேலைசெய்பவர்கள் போல இருந்தது.

அடுத்தநாள் அந்த பெண்மணியின் ஆஸ்தான தம்பியாக உள்ள உதவி ஆசிரியர், மிட்டாய் கொடுத்த எழுத்தாளர் மெசேஜ்கள் அனுப்பி தொல்லை செய்கிறார் என புகார் கூறினார். அவரது எண்ணை பிளாக் செய்துவிடு என அவரின் லூசு அக்காவான உதவி ஆசிரியப் பெண்மணி பதில் சொன்னார். அவரால் தான் இந்த எழுத்தாளர் பிரச்னை என்பது அவருக்கு புரியாதது போல காட்டிக்கொண்டார். எங்கள் ஆபீஸ் முழுக்க இதுபோன்ற ஆட்களே கடுஞ்சுயநலமிகளே நிரம்பியிருக்கிறார்கள். அடுத்தவர்களை எப்படி பயன்படுத்தலாம் என்பதையே யோசித்துக் கொண்டிருப்பார்கள். நன்றி!

அன்பரசு

25.12.2021

மயிலாப்பூர்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்