பிரிவினை காயங்களை ஆற்ற முயன்ற காந்தி!

 












காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய சத்தியாகிரகத்தின் இந்திய முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினார். ஆனால் வெளிநாட்டில் பெற்ற வெற்றபோல உடனே இங்கு வெற்றி கிடைக்கவில்லை. 1930ஆம் ஆண்டு ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராடியபோது மக்கள் ஆங்கிலேயர்களை அடித்து வன்முறையை உருவாக்கிய சம்பவங்கள் நடந்தன. இயக்கத்தைத் தொடங்கிவிட்டோம் எனவே, அப்படியே நடத்தி சுதந்திரத்தைப் பெறுவோம் என காந்தி நினைக்கவில்லை. போராட்ட அமைப்பைத் தொடங்கி திடீரென இடையில் போராட்டத்தை நிறுத்துவது தனக்கு அவமானம் என காந்தி நினைக்கவில்லை. தான் நினைத்த வடிவில் போராட்டம் நடைபெறவேண்டும் என பிடிவாதமாக இருந்தார். இதன் விளைவாக சிலமுறை தான் தான் நடத்த்திட்டமிட்ட போராட்டங்களை நோக்கம் நிறைவேறும் முன்னரே நிறுத்தியிருக்கிறார்.


பிறரைப் புரிந்துகொண்டு மக்களின் நலன்களை முன்னிறுத்த காந்தி முயன்றார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தோல்வியும் அடைந்திருக்கிறார். நீதிமன்றத்தில் வாதிட முடியாமல் தனது சக வழக்குரைஞர்களிடம் வழக்காடுவதற்கு கோரியவர்தான் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற ஊடகவியலாளர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி பேசினார். அவர்களையும் வசியப்படுத்தி, சுதந்திரத்திற்கு ஆதரவான கருத்துகளை உருவாக்கினார். இந்தியா என்றாலே காந்தி பிறந்த ஊர் என உலக நாடுகளைக் கூற வைத்தார். இந்தளவு பெருமையும் புகழும் பெற்ற தலைவர் அன்றைய காலத்தில் காந்தியைத் தவிர வேறு யாருமில்லை.


இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கூட காந்தி இந்தியக்கொடியை கையில் எடுத்து மகிழவோ, தனது உழைப்பின் பெருமை என பேசவோ இல்லை. அந்தளவு இந்து, முஸ்லீம் பிரச்னைகள் காந்தியை பெருமளவு புண்படுத்தியிருந்தது. இந்தியா சுதந்திர வெற்றியில் திளைத்தபோது, காந்தி பிரிவினை காயங்களை ஆற்ற முயன்று கொண்டிருந்தார். கல்கத்தாவில் காந்தி சென்ற நவகாளி யாத்திரை, கலவர கிராமங்களைப் பார்த்து மக்களைத் தேற்றுவதற்கானதுதான். அவமானங்களை காந்தி வாழ்க்கை முழுக்க எதிர்கொண்டுவந்தார்.


தென்னாப்பிரிக்காவிற்கு ரயில் முதல் வகுப்பில் சென்றுகொண்டிருந்தபோது, வெள்ளையர்களாலும், அவருக்கு ஆதரவான சீட்டு பரிசோதகராலும் ரயில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு சென்ற குதிரை வண்டியிலும் பெட்டியில் உட்கார அனுமதி மறுக்கப்பட்டது. இத்தனைக்கும் அவர் வெள்ளையர்களுக்கு நிகராக பயணச்சீட்டு தொகை கொடுத்தும் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார். குதிரைவண்டி பயணத்திலும் காசு கொடுத்துத்தான் பயணித்தார். ஆனாலும் நிறவெறி அவரை காயப்படுத்தியது. பிறகு தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிடோரியாவில் அதிபர் க்ரூகரின் மாளிகை அருகே நடந்து சென்றதற்காக பாதுகாவலர்களால் தாக்கப்பட்டு கீழே விழுந்தார். வெள்ளையர்களின் இனவெறி சட்டம் (1900) எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட காந்தி, அரசியல் கைதி பட்டியலில்தான் வருவார். அவரை கொள்ளை, கற்பழிப்பு, கொலை செய்த குற்றவாளிளளுடன் அடைத்து வைத்து ஆங்கிலேயர் அவமானப்படுத்தினார். காந்தி இதற்கெல்லாம் பெரிய எதிர்வினை ஆற்றவில்லை. இனவெறியோடு ஆங்கிலேயர்கள் நடத்திய தாக்குதலுக்கு காவல்துறையில் புகார்கூட தரவில்லை. பின்னாளில் அவரைத் தாக்கியவர்கள் காந்தியின் அணுகுமுறையில் ஈர்க்கப்பட்டு, அவரைப் பின்பற்றத் தொடங்கியது தனிக்கதை.


காந்தி, இந்திய மக்களின் பிரதிநிதியானது அவர்களின் உணர்வுகளை சரியாக புரிந்துகொண்டதால்தான். ஆனால் அவருக்கு தலைவருக்கான அதிகாரமும், அதன் எல்லைகளும் தெரியும். அதனால் அதற்குட்பட்ட செயல்பாடுகளை மட்டுமே செய்தார். தனது தவறுகளை வெளிப்படையாக மக்களிடமே ஒப்புக்கொண்டார். தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் காந்திக்கு இதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது. கடவுளே உண்மை என்ற கருத்திலிருந்து பின்னாளில் உண்மையே கடவுள் என்ற பக்குவத்திற்கு வந்து சேர்ந்தார் காந்தி.


தான் ஒரு இந்து என்று கூறினாலும் கூட அனைத்து மதங்களையும் மதிக்கும், அதன் குறைபாடுகளை புரிந்துகொண்டு அம்மத மக்களிடம் உரையாடல் நடத்தும் பக்குவத்தைக் கொண்டிருந்தார். அதனால்தான் காந்தி அனைத்து மதங்களுக்கும் பொதுவானவராக மதிக்கப்படும் தலைவராக இருக்கிறார். அரசியலில் இருந்தாலும் சுதந்திரத்திற்கான முயற்சிகளை திட்டமிட்டு செய்தார். சுதந்திரம் பெற்ற அரசில் காந்தி எந்த வித பதவியையும் எதிர்பார்க்கவில்லை. அவர் மாகாணங்களையும் குடியரசில் ஒன்றுபடுத்தி இருக்கச்செய்ய முயன்றார். இதற்கு சாத்தியமான வழிகளாக மதம், சாதி, மொழி ஆகியவற்றைப் பார்த்தார். அவை ஏற்கனவே சமூகத்தில் இருந்தன. எனவே, அவற்றை சற்றே மாறுபடுத்தி சீர்திருத்தம் செய்து பயன்படுத்த நினைத்தார்.


ஆங்கிலேயர்கள் விதித்த உப்பு வரிக்கு எதிராக தண்டி யாத்திரையை காந்தி தொடங்கினார். இதன்மூலம் மக்களை எளிதாக சென்றடையலாம் என காந்தி நினைத்தார். ஆனால் அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த பலருக்கும் காந்தியின் தண்டி யாத்திரையில் நம்பிக்கை இல்லை. மோதிலால் நேரு, காந்தி உப்புவரிக்கு எதிரான யாத்திரையில் ஈடுபடக்கூடாது என்று கோரி 21 பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதினார். காந்தி அதற்கு பதிலாக நீ போராட்டத்தில் ஈடுபடு. அப்போது அதற்கான காரணம் தெரியும் என்று ஒற்றை வாசகத்தை எழுதி அனுப்பினார். மோதிலால் நேரு அதற்குப் பிறகு யோசிக்கவில்லை. அலகாபாத் கடற்கரையில் உப்பை கையில் ஏந்தினார். போராட்டத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது அவரைக் கைது செய்ய ஆங்கிலேயரின் காவல்துறை தயாராக காத்திருந்தது. காந்திக்கு, தனது கைது பற்றிய தகவலை தந்தி அனுப்பிவிட்டு சிறை சென்றார் மோதிலால் நேரு.


எளியவர்கள் பயன்படுத்தும் உப்புக்கு வரி என்பது அனைத்து மக்களையும் பாதிக்கும். அதுதொடர்பான போராட்டம் என்பது மக்களை கிளர்ச்சியடையச் செய்யும் என்பதை காந்தி உணர்ந்திருந்தார். இதனால்தான் தண்டி யாத்திரையில் காந்தி குனிந்து உப்பு எடுக்கும் புகைப்படம் பலருக்கும் பெரும் உள்ளக்கிளர்ச்சி தருவதாக உள்ளது. காந்தி எழுதிய பேசிய அனைத்தும் தெளிவான அர்த்தம் கொண்டவை. அதை சரியாக புரிந்துகொள்ளாமல் போனவர்கள் உண்டு. ஆனால் அவர் தனது கருத்தை எளிமையாக சரியாக கூறிவிடுவதை தவறவிட்டதில்லை.






கருத்துகள்