பழைய நண்பரோடு நடந்த உரையாடல் - கடிதங்கள் - கதிரவன்

 














பழைய நண்பரோடு பேச்சு!

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? வீட்டில் உள்ளவர்களையும் கேட்டதாகச் சொல்லுங்கள். நான் இன்றுதான் நெல்சனின் டாக்டர் தமிழ்ப்படம் பார்த்தேன். சீரியசான பிரச்னை தான்; அதை அணுகுகிற முறை காமெடியாக இருந்தது. நிறைய இடங்களில் வசனமாக இல்லாமல் காட்சி ரீதியாகவே காமெடி செய்திருக்கிறார்கள். நடித்த எஸ்கேவுக்கு மட்டுமல்லாமல் பார்க்கும் நமக்கே புதிய அனுபவத்தை படம் தருகிறது.

இதை எழுதும்போது நீங்கள் ஜெய்பீம் படத்தைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். சூர்யா தனது தொண்டு நிறுவனம் மூலம் செய்யும் சமூக சேவைகளில் திரைப்படங்களையும் புதிதாக இணைத்திருக்கிறார். துணிச்சலான முயற்சி. தியேட்டரை விட ஓடிடி இதற்கு சரியான தளம். இப்போதைக்கு தமிழில் அமேசான் நிறுவனத்திற்கு சூர்யா மட்டுமே அம்பாசிடராக இருக்கிறார். அந்திமழையில் பெண்கள் மனதைப் புரிந்துகொள்வது பற்றி பலரும் தங்கள் கருத்தை எழுதியிருந்தனர். சிறப்பிதழ் வாசிக்க நன்றாகவே இருந்தது.

தீபாவளி அன்றும் இங்கு மழை பெய்தது. துவைத்துப் போட்ட துணிகள் முழுமையாக காயவில்லை. நாளை அலுவலக வேலை உள்ளது. உடுத்திச்செல்ல துணி வேண்டுமே? 8ஆம் தேதி நாளிதழ் தொடங்கும் என நினைக்கிறேன். ஒரு வாரத்திற்கு கட்டுரைகள் பேக் அப் இருக்கிறது. அடுத்தடுத்த வாரங்களுக்கு கட்டுரைகளை தயாரிக்கவேண்டும். வெகு நாட்களுக்குப் பிறகு குங்குமம் வார இதழின் ஆராய்ச்சியாள நிருபரான பேராச்சி கண்ணன் சாரோடு போனில் பேசினேன். மகிழ்ச்சி. நன்றி!

அன்பரசு

4.11.2021

மயிலாப்பூர்

------------------------------------------------------------------------------------------------















பூஞ்சை பூக்கும் அறைச்சுவர்!

அன்பு நண்பர் கதிரவன் அவர்களுக்கு, வணக்கம்.

நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் மயிலாப்பூரில் வெள்ளப் பிரச்னை குறைவு. ஆனால் முதல்வர் தனது அலுவலகத்திற்கு செல்லும் வழியான ராதாகிருஷ்ணன் சாலை மழைநீரால் மூழ்கிவிட்டது. வடிகால் அமைப்புகள் சரியாக இயங்கவில்லை. பிளாஸ்டிக் குப்பைகள் வடிகால் அமைப்பில் அடைத்துக்கொண்டுவிட்டன.

சாலையில் தூய்மை பணியாளர் குப்பைகளை மழைநீரில் அகற்றிக் கொண்டிருக்கும்போதே, ஒருவர் அலுவலகத்தில் இருந்து குப்பையை எடுத்து சாலையில் தேங்கியுள்ள நீரில் வீசி எறிந்தார். என்ன சொல்வது இவர்களை? ஒவ்வாமைக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன். ஊருக்குப் போய் சித்த மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

நாளிதழ் தொடங்குமா என்றே தெரியவில்லை. ஆசிரியர் வேலை என்ற பெயரில் ஏதோ ஒன்றை எங்களுக்குக் கொடுத்து சமாளிப்பது போலவே தெரிகிறது. சீன சிறுகதைகள் -வானதி, அருகர்களின் பாதை - ஜெயமோகன் என இரு நூல்களைப் படித்தேன். ஜெயமோகனின் எழுத்து பயணத்தின்போதும், காடுகளை விவரிக்கும்போதும் புத்துயிர் கொள்கிறது. சில இடங்களை காவிக்கட்சிக்கு ஆதரவாக வரிந்துகட்டி எழுதியிருக்கிறார். அதை தவிர்த்துவிட்டுப் படித்தால் பிழை ஏதும் இல்லை. பிரச்னையும் இல்லை.

நான் தங்கியுள்ள அறையில் மேல் விதானம், பக்கவாட்டு சுவர் என எங்குமே ஈரம் கசிகிறது. மழைபெய்தால் மழைநீர், வெயில் அடித்தால் வெக்கை என வாழ்க்கை நகர்கிறது. ஈரம் வந்தாலே அதில் பூஞ்சை பூத்துவிடுகிறது. எனது உடலிலும் பூஞ்சைத் தொற்று பாதிப்பு வேறு உள்ளது. எனவே, உங்கள் உடலை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

அன்பரசு

13.11.2021

மயிலாப்பூர்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்