இனவெறிக்கு எதிராகவும், சமூகநீதிக்காகவும் உழைத்தவர் - மிச்செல் பாச்லெட்
மிச்செல் பாச்லெட்
சிலி நாட்டில் இரண்டு முறை அதிபராக இருந்து பல்வேறு சீர்திருத்தங்கள் செய்தவர். அண்மையில் ஐ.நா அமைபின் மனித உரிமை அமைப்பில் இருந்து பதவி ஓய்வு பெற்றார். தனது பணிக்காலம் முடியும் முன்னர் சீனாவின் ஷின்ஜியாங் நகரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
மிச்செலின் பதவிக்காலம் அதிகாரப்பூர்வமாக நிறைவு பெறும் சில நிமிடங்கள் முன்னதாகத்தான் அவர் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகிறது.
மிசெல் சிலி நாட்டின் அரசியல்வாதி என்பதோடு, எதிர்ப்புகளைப் பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்படாமல் செயல்படும் அதிகாரியும். கூட. அப்படித்தான் 2020ஆம் ஆண்டு இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மக்கள் அரசால் பாகுபாடாக பிரிக்கப்பட்டு அவர்கள் துயரப்படக்கூடாது என்ற அக்கறையும் கரிசனையும் இருந்ததே வழக்கு தொடுக்க காரணம். இதற்கு இந்திய அரசியல்வாதிகள் இதெல்லாம் எங்கள் உள்நாட்டு விவகாரம் என சப்பைக்கட்டு கட்டி பேசினார்கள்.
மிச்செலின் காலத்தில்தான் சவுதி அரேபியா ஏமன் நாட்டின் மீது தொடுத்த தாக்குதல், ராணுவ உதவிகளை ஐ.நா மனித உரிமை அமைப்பு கேள்வி கேட்டது. மேலும் இஸ்ரேல் நாடு பாலஸ்தீனியர்களின் மீது நடத்தி வரும் தாக்குதல் பற்றியும் பல்வேறு வினாக்களைத் தொடுத்தது.
சிலி நாடு பல்வேறு ஆண்டுகளாக ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த நாடு. சிலி பல்கலையில் மருத்துவப்படிப்பு படித்த மிச்செல், பின்னாளில் சால்வதோர் அலாண்டேவின் உனிதாத் பாப்புலர் என்ற சோசலிச கட்சியில் உறுப்பினரானார். ராணுவ கலகம் ஏற்பட்டபோது மிச்செலின் தந்தை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு மாரடைப்பால் காலமானார். மிச்செல் மற்றும் அவரது அம்மா இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு சிறையில் இருந்து விடுக்கப்பட்டனர். சிலி நாட்டிலிருந்து ஆஸ்திரேலியா, ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகருக்கு வந்தனர். அங்குதான் மருத்துவப்படிப்பை மிச்செல் முழுமை செய்தார். அவர் குழந்தைநலப்படிப்பை படித்து மருத்துவரானார்.
பிறகு அரசியல் கைதிகளின் குழந்தைகளை பார்த்துக்கொண்டு அவரிகளின் உரிமைகளைப் பாதுகாக்க தொடங்கினார். சிறிது காலம், இன்டர் அமெரிக்கன் ராணுவக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். பிறகு 1997ஆம் ஆண்டு சிலியின் ராணுவ அமைச்சருக்கு உதவியாளராக இருந்தார். பிறகு சுகாதாரத்துறை அமைச்சர், ராணுவ அமைச்சர் என செயல்படத் தொடங்கினார். அப்போது அதிபராக இருந்தவர், ரிகார்ட்டோ லாகோஸ்.
மிச்செல் தனது அரசியல், பணிச்செயல்பாடு என இருவகையிலும் மக்களின் செல்வாக்கைப் பெற்றார். இதன் காரணமாக, 2006ஆம் ஆண்டு நாட்டின் அதிபராக தேர்தலில் நின்று மக்கள் ஆதரவுடன் வென்றார். அப்போது பொருளாதார பிரச்னைகள் இருந்தது. அப்போதும் கூட சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வறுமையைக் குறைத்து, கல்வி, ஓய்வூதிய திட்டங்களை மேம்படுத்தினார். இதனால் அவரது பதவிக்காலம் முடியும்போது கூட அவருக்கு மக்களிடையே 84 சதவீத ஆதரவு இருந்தது.
இதனால் அடுத்த தேர்தலிலும் அதிபர் வேட்பாளராக நின்றார். வென்றார். ஆனால் இம்முறை நாட்டின் முக்கிய வருவாயான செம்பின் விலை மிகவும் குறைந்துவிட்டது. அந்த நேரத்திலும் கூட தொழிலாளர்களுக்கான ஊதியம், தொழிலாளர் சங்கங்கள் ஆகியவற்றை முறைப்படுத்த முயன்றார். பொருளாதார பாகுபாட்டைக் குறைக்க முயன்றார். ஆனால் அவரது அமைச்சரவையில் உள்ளவர்கள் செய்த ஊழல்கள் வெளியே வர அரசுக்கு தலைகுனிவு ஏற்பட்டது. இதனால் முதல் காலகட்டத்தை விட இரண்டாவது கட்டத்தில் மிச்செலின் செல்வாக்கு சரிந்தது உண்மையே. இரண்டாவது பதவிக்காலம் முடிந்தவுடன், ஐ.நாவின் மனித உரிமை அமைப்பின் ஹை கமிஷனராக பதவி ஏற்றார். இனவெறிக்கு எதிரான செயல்பாடு, சமூக இடைவெளி ஆகியவற்றை 2018ஆம் ஆண்டு முதல் இன்று வரை அடையாளம் காட்டி எதிராக செயல்பட்டது மிச்செலின் சாதனை. இனியும் தனது பணியை அவ்வாறே தொடர்வார் என நம்பலாம்.
தி இந்து ஆங்கிலம்
image - outlook india
கருத்துகள்
கருத்துரையிடுக