வெப்பத்தால் உருகும் உடல், மனம்!

 














அரசு சொத்தை விற்பது சுலபம்!

அன்புள்ள கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

சென்னையில் பள்ளி, கல்லூரிகள் தொடங்கிவிட்டதால் வேலை பரபரப்பாக நகர்கிறது. புத்தக பதிப்பு என்பது அனைவருக்கும் ஏற்ற வேலை அல்ல. எனவே வேலைநேரம் மெதுவாக நகர்வது போலவே தெரிகிறது.

அரசின் பொதுச்சொத்துகளை நிறுவனங்களை அடகு வைத்து பணம் பெறுவதைப் பற்றிய கட்டுரையை இந்து ஆங்கில நாளிதழில் படித்தேன். எனக்கு இது சரியான கொள்கையாக படவில்லை. குறிப்பிட்ட நாட்களுக்கு சொத்துகளை தனியாருக்கு கொடுத்து அடிப்படை கட்டமைப்புக்கான நிதியைப் பெறுவது என்பது புத்திசாலித்தனமாக முடிவல்ல. இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள் மக்களிடம் அதிகளவு கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளும் என கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

நாளிதழ் பணியில் இருந்து உதவி ஆசிரியர், எழுத்தாளர் பாலபாரதி விலகிக்கொண்டுவிட்டார். வேறு ஏதோ அரசு இதழுக்கு ஆசிரியராகி வெளியேறுகிறார். இவர் பொறுப்பேற்று பார்த்து வந்த பக்கங்கள் எனக்கு வரும் என நினைக்கிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய சமூக பொறுப்புணர்வு பற்றிய நூல் ஒன்றை நாளிதழின் பதிப்பகத்திற்காக எழுதவிருக்கிறேன்.

உடலையும் மனதையும் பக்குவதாக வைத்துக்கொள்வது நாளுக்குநாள் கடினமாகிக்கொண்டே வருகிறது. உங்களது பெற்றோரின் நலத்தைக் கேட்டதாக சொல்லுங்கள். நன்றி!

அன்பரசு

2.9.2021

மயிலாப்பூர்

--------------------------------














நூல்களுக்கான நகாசு வேலை!

அன்புள்ள நண்பர் கதிரவன் அவர்களுக்கு, வணக்கம்.

நலமாக இருக்கிறீர்களா? இந்த வாரம்தான் சற்று நிதானமாக இருக்க நேரம் கிடைத்தது. எல்லாமே காந்தியின் அருள்தான். வேலைகள் எப்போதும் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது. பதிப்பக வேலைகள் இந்தளவு சலிப்பாக நகரும் என நினைக்கவில்லை.

நான் வேலைசெய்யும் நாளிதழ் நிறுவன ஆட்களால் தான் வேலை மோசமாக மாறியுள்ளது. சிற்பி கற்களை உளி கொண்டு செதுக்குவது போல செதுக்கி வருகிறார்கள். இப்படி நகாசு பார்த்தால் எப்போது நூலை அச்சுக்கு அனுப்பி வேலையை முடிப்பது? நூல்களுக்கான சந்தை என்பதே இனி மந்தமாகத்தான் இருக்கும். வேலை இழப்பு, பொருளாதாரம் என நிறைய சிக்கல்கள் நமக்கு முன்னே உள்ளன. அலுவலக ஆட்கள் சோற்றைத் தவிர ஏது பற்றியும் கவலைப்படுவதில்லை. வாங்கி வந்த கற்பகாம்பாள் கபாலி பக்கோடாவை சூடாக சாப்பிடு என ஆலோசனை வழங்குகிறார்கள்.

நான் தங்கியுள்ள அறையில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மழைக்காலமாக இருந்தாலும் மாறி வரும் காலநிலை மாற்றத்தை உடலால் தாங்குவது கடினமாக உள்ளது. ஒவ்வாமை பற்றிய நூலை எழுதி தொகுத்து வருகிறேன். சொந்த உடல்நலம் சார்ந்த சுயநலம் காரணமாகவே நூலை எழுதுகிறேன். உலகம் முழுவதும் அலர்ஜி பிற நோய்களை விட அதிகரித்து வருகிறது.

ஃபிரன்ட்லைன் மாத இதழின் கட்டுரைகளை படித்து வருகிறேன். ஓடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் செய்துவரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பற்றி படித்தேன். ஐந்து முறை முதல்வர் ஆனவர் தான் நவீன் பட்நாயக். அடுத்தமுறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்புள்ளவர் இவர்தான். ஏராளமான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். நன்றி!

அன்பரசு

3.10.2021

மயிலாப்பூர்



கருத்துகள்