புதிர்ப்பாதையிலிருந்து நம்பிக்கை பெற்று தப்பி வாழ்க்கையை அடைய கற்றுத்தரும் நூல்! - ஸ்பென்சர் ஜான்சன் (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)
புதிர்ப்பாதையிலிருந்து தப்பித்து வெளியேறுதல்
ஸ்பென்சர் ஜான்சன்
தமிழில் நாகலட்சுமி சண்முகம்
மின்னூல்
என் சீஸை நகர்த்தியது யார் என்ற நூலின் இரண்டாம் பகுதி. நூல் சிறியதுதான். வேகமாக படித்துவிடலாம்.
நாம் நம்புகின்ற நம்பிக்கை தவறாக இருக்கும்போது, அது நம்மை தொழில் வாழ்க்கையில் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து துன்பத்திற்குள்ளாக்குவதை எழுத்தாளர் வலுவாக சொல்ல நினைத்துள்ளார். அதற்குத்தான் புதிர்ப்பாதையில் சீஸ் தேடும் கதை கூறப்படுகிறது. இதில் ஜெம், ஜா, ஹோம் மற்றும் இரு சுண்டெலிகள் உள்ளன.
சுண்டெலிகளும், ஜாவும் புதிர்ப்பாதையில் இருந்த சீஸ்களைத் தேடி கண்டுபிடிக்க கிளம்புகின்றனர். ஆனால் ஜெம், இன்று இல்லாவிட்டால் என்ன நாளை இதே இடத்தில் சீஸ் கிடைக்கும் என காத்திருக்கிறான். பாறையின் புதிர்ப்பாதையில் யார் சீஸை வைப்பது, அதற்கான ஆதாரம் பற்றி அவன் ஏதும் கவலைப்படுவதில்லை. இதனால் நாளுக்குநாள் அவனுக்கு உணவு கிடைக்கவில்லை. ஆளும் மெலிய நம்பிக்கையும் மெலிகிறது. அப்போது ஹோம் என்ற சிறு குள்ளப் பெண் அவனுக்கு ஆப்பிள் தந்து உதவுகிறாள். ஜெம்முக்கு அது ஆப்பிள் என்பது கூட தெரிவதில்லை. சீஸ் தவிர ஏதும் சாப்பிடமாட்டேன் என அப்போது் அடம் பிடிக்கிறான். இறுதியில் பசி வெல்கிறது. மெல்ல, தனது நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டு சோதனைகளை செய்து புதிர்ப்பாதையிலிருந்து பசுமையான புல்வெளிக்கு எப்படி செல்கிறான் என்பதே நூலின் இறுதிப்பகுதி.
சுய முன்னேற்ற பேச்சாளர்கள், தொழிலதிபர்களுக்கு இந்த நூல் முக்கியமானது. இதில் சொல்லும முதுமொழிகள் அனைத்துமே கதை வடிவில் சான்றுகளோடு யோசித்துப் பார்த்தால் சரிதானே என்று தோன்றும்படி அமைத்திருக்கிறார்கள். நாகலட்சுமி சண்முகம் நூலை பிரமாதமாக மொழிபெயர்த்திருக்கிறார். நூலை படிக்கும்போது சோர்ந்த மனங்கள் துணிவு பெற நிறைய வாய்ப்புகள் உள்ளன.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக