ஆழமான துயர் தரும் வலி - கடிதங்கள் - கதிரவன்

 





ஆழமான துயர் தரும் வலி!

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?

உங்கள் உடல், மனம் மேம்பட இறைவனை வேண்டுகிறேன். மறைமலை அடிகள் எழுதிய கடித நூலொன்றைத் தரவிறக்கி வாசித்தேன். தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் தேர்ந்து விளங்கிய ஆளுமை. தனித்தமிழில் எழுதுவது, சைவத்தைப் பரப்புவது என வாழ்ந்து வந்திருக்கிறார். தமிழக அரசு இணைய மின் நூலகத்தில் நிறைய அரிய நூல்கள் கிடைக்கின்றன. இந்த நூலை அங்கிருந்தே தரவிறக்கி வாசித்தேன்.

இன்று சன் மோகன்ராஜ் அண்ணா அறைக்குச் சென்றேன். அவர் தனது மனைவி, குழந்தை ஆகியோரை சென்னைக்கு கூட்டி வர உபாயம் யோசித்து வந்தார். வருமான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார். மின்னல் முரளி மலையாளப் படம் பார்த்தேன். கிராமத்து சூப்பர் ஹீரோ கதை. நன்றாக திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள். படத்தில் நம்மை யோசிக்க வைக்கும் எதிர்மறை நாயகன் பாத்திரம் ஷிபு தான். அதாவது, நாடக கலைஞரான குரு சோமசுந்தரம்.

இவர், தனது அம்மா, காதலி என இருவரையும் வெவ்வேறு காலகட்டங்களில் சுற்றியுள்ளவர்கள் காரணமாகவே இழக்கிறார். பூமியில் வாழ்வதற்கான பொருளை அவர் இழக்கும்போது கடுமையாக கோபமுறுகிறார். அதில் ஏதும் தவறிருப்பதாகத் தோன்றவில்லை.

நாயகனான ஜெய்சன் என்பவரின் வாழ்க்கை பெரிதாக ஈர்க்கவில்லை. ஷிபுவின் வாழ்க்கை ஆழமான துயரைக் கொண்டது. தன் வாழ்க்கையில் சிறு மகிழ்ச்சியை அவர் பெறும்போது வாழ்வின் பெரும்பகுதியை அவர் இழந்திருக்கிறார். அப்படி கிடைத்த வாழ்வும் சுற்றியுள்ளவர்களால் அழிகிறது. ஊரார் மீதான பழிவாங்கலை முடித்துவிட்டு கிளம்பும்போது அவர் வாழ நினைத்த வாழ்க்கை அவரது வீட்டுக்கே வருகிறது. அந்த நேர பரவசத்தில் எதுவும் பேச முடியாமல் கண்ணீர் பெருக நிற்கும் காட்சி, காதலியிடம் பேசுவது படத்தில் எனக்கு பிடித்திருந்தது.

ஷோபாடே நூலை திரும்ப படிக்கத் தொடங்கியிருக்கிறேன். படித்து முடிக்கவேண்டும். நாளை எப்போதும் போல அலுவலகம் செல்லவேண்டும். வேலையும் எப்போதும் போல சுவாசம் போல தடையின்றி தொடரும்.

அன்பரசு

26.1.2022

மயிலாப்பூர்

-----------------------------------------------------


வயிறெனும் போர்க்களம்!

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?

நாளிதழில் உள்ளாட்சித் தேர்தல் வேலைகள் நெருக்கிக்கொண்டு இருக்கும். தங்களுக்கும் வேலைகள் அதிகரிக்கும். கட்டுரைகளை எழுதும் வேலைகள் ஓரளவுக்கு முடிந்துவிட்டன. முன்னமே இதற்கான கட்டுரைகளை எழுதி வைத்துவிட்டேன். அதற்கான தேதிகளை மட்டும் மாற்றினால் போதும்.

மாதத்திற்கு எழுதியதால் பதிப்பிக்கும் தேதியை எடிட்டர் மாற்றிச் சொன்னார். இதனால் வேலை செய்யாமல் இருக்க முயலும் கோ ஆர்டினேட்டர் கட்டுரைகளை மாற்றத் தடுமாறிவிட்டார். பகிரங்கமாக எங்களது கட்டுரைகளை அழிப்பேன் என மிரட்டுவதால், உதவி ஆசிரியர்களே அவர் செய்யும் வேலையை செய்து கட்டுரைகளை வேறு தேதிகளுக்கு மாற்றவேண்டி இருந்தது.

எண்ணெய் பலகாரங்கள் எதைச் சாப்பிட்டாலும் வயிற்றுக்குள் தட்டு முட்டு சாமான்களை உருட்டுவது போல சத்தம் எழுகிறது. சிலசமயம் பலகாரங்களின் வாசனையைப் பொறுக்க முடியாமல் சாப்பிட்டால் இரவில் வயிற்று உப்புசம், வாந்தி, பேதி ஆகிறது. உடலை பராமரிப்பதில் அதிக கவனம் தேவைப்படுகிறது.

எங்கள் நாளிதழ் பள்ளிகளுக்கு போகிறதா என்று தெரியவில்லை. குறைந்த பிரதிகள்தான் அச்சிடுகிறார்கள் என சீஃப் டிசைனர் சொன்னார். தகவல்படத்திற்கான வேலைகளை இனி நான் தான் செய்யவேண்டும். எனவே, கஷ்டமான துயரங்கள் இனி தொடர்கதைதான். சீஃப் டிசைனரோடு சேர்ந்து வேலை செய்வது என்றால் சும்மாவா? உடலைக் கவனித்துக்கொள்ளுங்கள். பார்ப்போம்.

நன்றி!

அன்பரசு

10.2.2022

மயிலாப்பூர்

படம் - பின்டிரெஸ்ட் 

கருத்துகள்