அநீதி வில்லன்களை எதிர்க்கும் பொறுப்பான திருடன் - சிரஞ்சீவி, ராதா

 


















தொங்கா 


சிரஞ்சீவி, ராதா மற்றும் பலர் 


யூசுவலான பழிக்குப்பழி கதைதான். அதையே சீரியல் போல மாற்றி வள வளவென இழுத்து பிறகு சுபம் போட்டிருக்கிறார்கள். 


சிரஞ்சீவி கார்களைத் திருடுவது, பணத்தை கொள்ளையடிப்பவர்களிடமிருந்து கொள்ளையடிப்பது என செய்து பிழைக்கிறார். இன்னொரு விஷயம், அவர் தனது குடும்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார். திருடர் என்றாலும் அவர் ஒரு லட்சியவாதி. திருடும் பணத்தில் தனது மெக்கானிக் நண்பனுக்கும், தனக்கு கொஞ்சம் வைத்துக்கொண்டு மீதியை அனாதை இல்லங்களுக்கு கொடுத்துவிடுகிறார். எவ்வளவு நல்ல மனசு பாருங்க சாரே!


ஊரில் இரண்டு பணக்கார ர்கள் இருக்கிறார்கள். அத்தனையும் கடத்தல், பிறரை ஏமாற்றுதல் செய்தே சம்பாதித்தது. அவர்களிடம் உள்ள சொத்துக்களை தன் பக்கம் இழுத்து அவர்களை கதறவிட நினைக்கிறார். ஏன் அப்படி செய்கிறார் என்றால் நிச்சயம் அதற்கான ஃபிளாஷ்பேக் சொல்லித்தானே ஆகவேண்டும். அதை முதலிலேயே சொல்லிவிடுவதால், கதையில் புதிய பாத்திரங்களைக் கொண்டு வந்து கதையை இழுக்கிறார்கள். 


வருமானவரித்துறை அதிகாரி விஸ்வநாதன், அடுத்து இன்ஸ்பெக்டர். விஸ்வநாதனை தூண்டிவிட்டுத்தான் ஊரின் இரு பணக்காரர்களையும் பீதி அடைய வைக்கிறார் சிரஞ்சீவி. அடுத்து, ஒரு பெண் ரயில் இருப்புபாதையில் தற்கொலை செய்துகொள்ள ஓடுகிறாள். என்னாச்சு, நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாளா என்றால் அந்த காலத்தில் ஏது நீட் தேர்வு? இல்லை சிம்பிள். காதல் தோல்வி. அனாதை ஆசிரம பெண்ணை கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது காதலன் மனதில் ஏதோ தடுமாற்றம். அதையும் சிரஞ்சீவி தானாகவே போய் தீர்க்க நினைக்கிறார். தீர்த்தும் வைக்கிறார். அப்போதுதான் அவருக்கு அந்த லூசு பெண் தனது சொந்த தங்கை எனத் தெரிகிறது. ஆனால் தங்கை கல்யாணம் நடக்க அவளது காதலனுக்கு அவனை வளர்த்த மாமா செய்த செலவுத்தொகையை தரவேண்டும். எனவே சிரஞ்சீவி இதற்காக ஒரு திருட்டை நடத்துகிறார். அதாவது திருடனிடமிருந்து திருட்டு. இதில் வருமான வரித்துறை அதிகாரி பாதிக்கப்பட்டு அவரது தங்கை திருமணம் நிற்கிறது. அவமானப்பட்டு, துக்கப்பட்டு, வெட்கப்பட்டு இன்னும் பட்டில் என்னென்ன வார்த்தை இருக்கு... தற்கொலை செய்துகொள்கிறார். 


இதனால் சிரஞ்சீவி என்ன செய்வார்? வருமான வரித்துறை அதிகாரியின் தங்கையை மனைவியாக ஏற்றுக்கொள்வாரா, தன்னை அண்ணனாக மாற்றிக் கொள்கிறார். அப்போதுதானே பணக்கார வில்லனின் மகள் ராதாவை எளிதாக மணக்க முடியும்? தங்கைக்கு உதவி செய்வதை ராதாவே ஒரு காட்சியில் கிண்டல் செய்கிறார். அட ஆண்டவா?... சன்டிவியில் திருமுருகன் கோபி பாத்திரத்தில் சந்தித்து சவால்களை விட சிரஞ்சீவி நிறைய சிக்கல்களை சந்திக்கிறார். இறுதியில் வருமான வரித்துறை அதிகாரியின் தங்கையை வில்லனின் மகனுடன் மணம் செய்து வைக்கிறார். அதற்காக கல் உடைக்கிறார், பைக் ரேஸில் பங்கேற்கிறார், ஒரு பெண்ணுடன் குத்துப்பாட்டுக்கு கூட ஆடுகிறார். அதாவது நேர்மையாக குறிப்பிட்ட பணத்தை சம்பாதிக்க வில்லன் சொல்லுகிறார். அதை சிரஞ்சீவி ஏற்றுக்கொண்டு என்னென்னமோ செய்கிறார். எதற்கு என பார்ப்பவர்களுக்கே புரியவில்லை. 


கார் சேசிங் இறுதியில் படம் முடியும்போது சிரஞ்சீவியை விட நமக்கு ரிலாக்சாக ரிலீஃபாக இருக்கிறது. 


பொறுப்பான திருடன்

கோமாளிமேடை டீம் 






கருத்துகள்