நிறுவனத்தை, ஊழியர்களை உடைத்து நொறுக்கும் எதிர்மறை மனிதர்கள், அவர்களின் உளவியல்









ஒருவரின் உளவியல் சார்ந்த இயல்பை எப்படி கணக்கிடுவது எப்படி? மேலேயுள்ள அனைத்து அத்தியாயங்களிலும் ஒருவர் நடந்துகொள்வதைப் பார்த்து மற்றொருவர்தான் அவரை சிகிச்சைக்கு தயார்படுத்துவதைப் பற்றி பேசியிருந்தோம். ஆனால் இதெல்லாம் சரி என்றாலும் மருத்துவரே ஒருவருக்கு உளவியல் ரீதியாக பிறழ்வு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பார்?


மையர்ஸ் பிரிக்ஸ் டைப் இண்டிகேட்டர் என்ற அளவீடு இதற்கென பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இதை எம்பிடிஐ என குறிப்பிடுகிறார்கள். இதை வைத்துத்தான் ஒருவரின் பாதிப்பு, குண இயல்பு, வரம்பு, வலிமை, பலவீனம் எல்லாவற்றையும் அடையாளம் காண்கிறார்கள். 


எம்பிடிஐ அளவீட்டை மருத்துவர்கள் இசபெல் மையர்ஸ் மற்றும் கேத்தரின் பிரிக்ஸ் ஆகியோர் உருவாக்கினர். இதற்கு கோட்பாடு அடிப்படையில் உதவியது, கார்ல் ஜங் என்பவர். உளவியல் ரீதியாக சிக்மண்ட் பிராய்டிற்கு பிறகு, கவனிக்கப்படும் உளவியல் வல்லுநர், கார்ல் ஜங். 


பிறரது பாராட்டுகள், வாழ்த்துகள் மூலம் ஆற்றல் பெற்று தன்னை வடிவமைத்துக் கொள்பவர் என்றால் அவர் வெளிவயமானவர். சிந்தனைகளை தனக்குள்ளேய உருவாக்கி அதன் வெளிப்பாடுகளை மட்டும் தேவைக்கு ஏற்ப வெளியில் பகிர்ந்துகொள்ளும் மனிதர்களை உள்வயமானவர்கள் என கொள்ளலாம். வெளிவயமானவர்கள் பிறரிடம் தொடர்பு கொள்வதில் திறமையானவர்கள். உள்வயமானவர்கள் சிறப்பான சிந்தனைகளை, யோசனைகளை கூறக்கூடியவர்களாக இருப்பார்கள்.  


உள்வயமானவர்கள் பெரும்பாலும் சந்திப்புகளை, போனில் பேசுவதைத் தவிர்க்க நினைப்பவர்கள். எனவே இவர்களிடம் பேச வேண்டும் என நினைப்பவர்கள் முடிந்தவரை குறைவாக பேசுவதே நல்லது. நம்பிக்கையான குறைந்த நண்பர்களையே கொண்டிருப்பார்கள். நம்பிக்கை வந்தால் மட்டுமே பிறரிடம் பேசுவார்கள். வேலைக்காக பேசுவதும் குறைவாகவே இருக்கும். கூட்டத்தை விட தனியாக இருப்பதே  மனநிம்மதியாக இருக்கும் வழி என வாழ்வார்கள். இங்கே சொன்னவைக்கு அப்படியே எதிர்ப்பதமாக இருக்கும் விஷயங்கள்தான் வெளிவயமானவர்கள் கடைபிடிப்பது. எனவே இரு பிரிவினரும் ஒன்றாக வேலை செய்யும் போது நிறைய குழப்பங்கள் ஏற்படலாம். ஆனால் ஒருவரையொருவர் புரிந்துகொண்டால் எந்த பிரச்னையும் இருக்காது. 


மனிதர்களின் குணங்கள் 


இயேசு சொன்னது போல தவறு செய்யாத மனிதன் யார் இருக்கிறார்? ஏதாவது ஒரு இடத்தில் சில விஷயங்கள் புரிந்துகொள்ளாமல் சில வார்த்தைகள் விட்டிருப்போம். அதுவே பின்னாளில் அவன் இப்படி சொல்லியிருக்கிறான் என சொன்னவை பிரம்மாண்ட தடைக்கற்களாக மாறி உறவை கெடுத்திருக்கலாம். வேலையின் முன்னேற்றத்தை அழித்திருக்கலாம். நாம் இல்லையென்று வெளிப்படையாக மறுத்தாலும், உண்மை மனதிற்கு தெரியும் அல்லவா? வசை பாடுவது, வதந்திகளைப் பரப்புவது, கேலி, கிண்டல் செய்வது, விமர்சனம் செய்வது, ஆளுக்கேற்ப மாற்றிப் பேசுவது என செய்வதை நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் செய்திருப்போம். 


எதிர்மறையாளர்கள் என ஒருவரை எப்படி அடையாளம் காண்பது, பிரச்னைக்கான தீர்வு என்பதை விட எப்போதும் குறைகளை சொல்வதும், விமர்சிப்பது, தன்னை புகழ்ந்து அதிக வேலை செய்வதாக காட்டிக்கொள்வார்கள். இப்படி இருப்பவர்கள் முக்கியமான பொறுப்பில் இருந்தால், அதன் அடித்தளத்தையே மெல்ல அரிப்பார்கள். முதலில் நிறுவனத்தில் உள்ள சிறந்த வேலையாட்கள் மெல்ல கழண்டு கொள்வார்கள். பிறகு நிறுவனத்தை வீழ்த்த எதிரிகள் தேவையா என்ன, அந்த சூழலிலும் எதிர்மறையான குணம் கொண்டவர்கள், அது நிறுவனத்தின் தவறு அல்லது வேலை விட்டு சென்றவர்கள் நேர்மையானவர்கள் இல்லை என்று பேசிக்கொண்டிருப்பார்கள். 


ஒருவரை தாக்க அவரின் பலவீனத்தை தவறுகளைக் கண்டுபிடிக்கவேண்டும். அதைக் கண்டுபிடித்து உரத்த குரலில் அனைவரின் முன்னிலையில் கூறுவார்கள். பாதிக்கப்பட்டவருக்கு சாக்கடை நீர் முகத்தில் தெரித்தது போல இருக்கும். ஒருவர் செய்யும் தவறுகளை கணக்கெடுத்து அதை கதையாக்கி இன்னும் பெரிதாக்கி மேலாளரிடம் சொல்லுவார்கள். சோம்பேறியாக இருக்கும் பலரின் வேலைகளையும் தானே செய்வதாக நாடகம் ஆடுவார்கள். இப்படி செய்வதற்கான முக்கியக் காரணம், தன்னம்பிக்கையின்மை. 


பிற காரணங்கள் இதோ


தாழ்வுணர்ச்சி

குறைகளை கூறுவதன் மூலம் அங்கீகாரம் கிடைப்பதாக உணர்வது

பிறரது குறைகளை பகிரங்கமாக சொல்லி அவர்களை கீழே தள்ளி தன்னை முக்கியப்படுத்திக் கொள்வது

வதந்தி, போலிச்செய்திகள், புகார்கள் என சொல்லுவது எல்லாம் வேலையில் ஏற்படும் சலிப்பின் வடிவங்கள்

மனச்சோர்வு குறைபாட்டில் மத்திய வடிவம் எனவும் எதிர்மறை குணங்களைக் கூறலாம். 

image - pixabay

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்