அற்புதமான விமானங்களை வடிவமைத்த ஜப்பானிய பொறியாளரின் கனவு - விண்ட் ரைசஸ் - anime
விண்ட் ரைசஸ்
அனிமேஷன்
ஜப்பான்
அடிப்படையில் தேசியவாதப் படம்தான். ஆனால் அதைத்தாண்டிய விமானங்களை கட்டமைக்கும் கனவு கொண்ட ஒருவனின் வாழ்க்கை தான் அனிமேஷன் படத்தை உயிரோட்டமாக்கியிருக்கிறது.
இந்த அனிமேஷன் படம், ஜெர்மனியில் உள்ளது போன்ற நவீனத்துவத்துடன் அதிவேகம் செல்லும் விமானங்களை கட்டமைக்கும் பொறியாளர் ஒருவரின் கதையைப் பேசுகிறது. சிறுவயதில் இருந்தே விமான பைலட்டாக மாறும் ஆசையுடன் ஜீரோ உள்ளான்,ஆனால் கண்பார்வை சற்று குறைவானதால், பொறியாளர் ஆகிறான். அப்போது உலகப்போர் காலகட்டம். எனவே, வேகமாக செல்லும் ஆயுதங்களை கொண்டு செல்லும் விமானங்களை தயாரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஜீரோ தனது விமானத்தை எப்படி உருவாக்குகிறான் என்பதே படம்.
படம் நெடுக விண்ணில் பறக்கும்போது அல்லது வாகனத்தில் பைக்கில் போகும்போது நமது முகத்தில் காற்று அடிக்குமே, வேகமாக, மெதுவாக என பல்வேறு விதமாக.. .அப்படி காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. விமானத்தை உருவாக்குபவனான ஜீரோ, காற்றில் தனது கனவுகள் அலைபாய திட்டங்களை தீட்டுகிறான். பெரும்பாலானவை, எஞ்சின் கோளாறுகள், மோசமான எரிபொருள், ஜப்பானில் வீசும் காற்றுக்கு சமாளிக்க முடியாமல் உடைந்துபோகின்றன. எனவே, அவன் வேலைசெய்யும் நிறுவனம் அவனையும், இன்னொருவனையும் ஜெர்மனிக்கு விமானங்களை ஆய்வு செய்ய அனுப்புகிறது. இருவரும் அங்கு ஆய்வுகளைச் செய்து விமானங்களை எப்படி தயாரிக்க வேண்டும் என்ற அறிவைப் பெறுகிறார்கள்.
இவற்றையெல்லாம் தாண்டி மனம் சோரும்போதெல்லாம் இத்தாலி விமான வடிவமைப்பாளர் ஒருவரைப் பற்றிய கனவைக் கண்டுகொண்டே இருக்கிறான் ஜீரோ. அதுதான் அவனை நிகழ்கால பிரச்னை அனைத்தில் இருந்தும் காக்கிறது. அவன் எதைப்பற்றியும் கவலையே படுவதில்லை. அவன் விமானத்தின் இறக்கைகளைப் பற்றி மட்டுமே யோசிக்கிறான்.அதை எடை குறைவாக எப்படி அமைப்பது, கூடுதலாக வேகத்திற்கு என்ன விஷயங்களை செய்யவேண்டும், ஒட்டுமொத்தமாக விமான எடையை குறைப்பது எப்படி என யோசிக்கிறான். இதற்கிடையே நிலநடுக்கம் ஒன்றின்போது ரயில் வந்த இளம்பெண் ஒருத்தியைக் காப்பாற்றுகிறான். அவளைத்தான் பின்னாளில் காதலியாக ஏற்கிறான். இத்தனைக்கும் அவளது அம்மாவுக்கு இருந்த உயிர்கொல்லி நோய் இருக்கிறது. ஆனால் ஜீரோவுக்கு அதெல்லாம் பெரிய பிரச்னையாக தெரியவில்லை. இருவருக்குமான காதல் மொழி அவ்வளவு வலுவாக இருக்கிறது. பின்னாளில் உலகப்போரில் ஜீரோவின் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெளிப்படையாக சொன்னால் விமானத்தில் மக்கள் பயணிக்கவேண்டும் என்பதுதான் ஜீரோவின் ஆசை. அதில் துப்பாக்கி அல்லது வெடிகுண்டு எடுத்துச்சென்று மக்கள் மீது வீச வேண்டும் என்பதல்ல. ஆனால் நற்குணங்கள் கொண்ட ஒருவனால் இந்த உலகில் அனைத்தையும் கட்டுப்படுத்தி விட முடியுமா என்ன?
ஜீரோவின் விமானம் பறந்து வெற்றியடையும் அதே நேரத்தில் ஜீரோவின் மனதில் ஆழமான வெறுமை சட்டென உருவாகிறது. அது அவனது நோயுற்ற மனைவி இறந்தபோன சமயம்... இதை பிரமாதமாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள். பிறகு ஜீரோ இறுதிக்காட்சியில் தனது ரோல்மாடலான இத்தாலி விமானியை சந்திப்பது..... புல்வெளியெங்கும் உடைந்துபோன விமானங்களாக கிடப்பது நிலையை சொல்லாமல் சொல்லுகிறது. அப்போதும் ஜீரோ பார்ப்பது வானைத்தான்.அ ங்கு அவன் விமானங்கள் பறந்துகொண்டிருக்கின்றன.
காற்று எப்போதும் வீசிக்கொண்டுதான் இருக்கிறது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக