மூளையில் மின்னும் வலி!

 உணர்வெழுச்சி கொண்ட நாவல்!

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.

வீட்டில் அப்பாவும் அம்மாவும் நன்றாக இருக்கிறார்களா? வேலை எப்படி போகிறது? தாய் -என்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய நாவலைப் படித்தேன். 1334 பக்கம். தொழிலாளர்களின் போராட்டம்தான் கதையின் மையம். பொதுமக்களிடம் புரட்சி பற்றி நீலவ்னா பாத்திரம் பேசுவது போல அமைந்த பகுதிகள் உணர்வெழுச்சியுடன் அமைந்துள்ளன.

ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி இதழுக்கான வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அப்படித்தான் மேலிடம் கூறியிருக்கிறது. பார்ப்போம். பதிப்பக வேலைகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன. இந்தளவு பதிப்பக வேலைகள் ஜவ்வாக இழுபடுவதை நான் எங்கும் பார்க்கவில்லை.

அறையில் படுத்து தூங்க பாய் இன்னும் வாங்கவில்லை. பிளாஸ்டிக் பாய்தான் என்னுடைய விருப்பம். சாதாரண பாய் வாங்கினால், எளிதாக பூஞ்சைத் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுகிறது. தேவன் எழுதிய சின்னஞ்சிறு கதைகள் எனும் நூல் தொகுதியைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். குறைவான விவரிப்புகளுடன் புன்னகையோடு படிக்கும் சிறுகதைத் தொகுதி இது.

அன்பரசு

12.7.2021

மயிலாப்பூர்

------------------------------மூளையில் மின்னும் வலி!

அன்புள்ள கதிரவனுக்கு, வணக்கம். நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. ஒரே ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தாலும் அதில் என்மீதான உங்களின் அன்பு வெளிப்படையாகவே தெரிந்தது. மிக்க நன்றி!

என்னால் முடிந்தவரை கடிதங்களை எழுதி அனுப்புகிறேன். இதில் எழுதினேன், எழுதவில்லை என்பதை சாதனை அல்லது பெருமையாகவெல்லாம் நான் நினைக்கவில்லை. கருத்துகளை பரஸ்பரம் பகிர்ந்துகொள்கிறோம். அவ்வளவுதான்.

ஆர்கே சாலை சிக்னலைக் கடக்கும்போது, தவறான வழித்தடத்தில் வந்த வண்டி என்மீது மோதி வீழ்த்தியது. காலில் நல்ல அடி. அதாவது முழங்காலில்... இரண்டு நாட்களாக நொண்டிக்கொண்டுதான் அலுவலகத்திற்கு செல்ல முடிந்தது. மயிலாப்பூரில் அறை அருகில் உள்ள வர்த்தமான் என்ற வட இந்திய மருத்துவரிடம் சிகிச்சைக்குப் போனேன். அவர் மருந்தகத்தில் தேங்கிய பல்வேறு பொருட்களை என்னிடம் விற்க முயன்றார். அதில் வெற்றியும் பெற்றார். எக்ஸ்ரே -1500, ஸ்கேன் - 3500 என வெட்டிச்செலவானது. இவற்றைப் பார்த்த மருத்துவர்,ஆழமான சிந்தனைக்குப் பிறகு எனக்கு காலில் அடிபட்டுள்ளது என்றார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆர்த்திஸ்கேன் மையத்திற்கு ஆட்டோ பிடித்து சென்றேன். ஆட்டோவுக்கு காசு ரூ.100. அவர்களின் ஸ்கீம், இரிடியம் விற்பது போலவே தெரிந்தது. இரவில் ஸ்கேன் எடுத்தால் 2500, மற்ற நேரங்களில் 3500 என வித்தியாசமான முறையைச் சொன்னார்கள். எனக்கு முழங்கால் வலியில் தலையின் இருபுறமும் எரிச்சல் மண்டியது. ஸ்கேன் எடுக்க வருபவர்களை ரிஷப்ஷன் பெண் நடத்தும் விதம் மோசமானது. இதில் வேறு ஸ்கேன் செய்யும் பெண் தனது சேவை பற்றிய கூகுள் ரிவ்யூ வேறு கேட்டார்.

கைக்காசு கொடுத்து கொடூரமான அனுபவத்தைப் பெற்று வந்தேன். போகும்போது ஆட்டோவில் போய்விட்டு திரும்பி வரும்போது, காலை நொண்டிக்கொண்டு நடந்தேஅறை வந்து சேர்ந்தேன். கால் வலி கடுகடுப்பதால் எதையும் வாசிக்க முடியவில்லை. இருப்பதிலேயே துயரமானது அதுதான். காலை நகர்த்தி வைப்பதே கடினமாக உள்ளது.

அன்பரசு

21.7.2021

மயிலாப்பூர்

pinterest

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை