மழையால் ஏற்படும் மந்தநிலை - கடிதங்கள் - கதிரவன்
மழையால் மந்தநிலை!
அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?
இன்று அதிகாலை முதல் மழை பெய்துகொண்டே இருக்கிறது. சூரியனைப் பார்க்கவே முடியவில்லை. டீ குடிக்க வெளியே போனால் மழை விடவில்லை. அந்த இடத்திலும் போட்டி போட்டு ர.ரக்கள் அதிமுக ஆபீசுக்கு வந்துவிட்டார்கள். அவ்வை சண்முகம் சாலை முழுக்க ஆம்புலன்ஸ் நீளத்திற்கு வண்டிகளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர். போக்குவரத்து நெரிசலுக்கு வேறு என்ன காரணங்கள் வேண்டும்?
ஸ்கைலேப் என்ற தெலுங்குப்படம் பார்த்தேன். ஆந்திராவில் உள்ள ஏழைமக்கள் வாழும் ஊர். அந்த ஊரின்மீது விண்கல் வந்து மோதப்போவதாக செய்தி. அது மக்களை எப்படி பாதிக்கிறது என்பதே படக்கதை. இதனூடே ஜமீன்தார் மகள் கௌரி எப்படி உண்மையான பத்திரிகையாளராகிறாள், மருத்துவ உரிமம் தடைபட்ட ஆனந்த் எப்படி தனது முதல் கிளினிக்கை கிராமத்தில் தொடங்கி வெல்கிறான் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.
இன்று ஆபீசில் ஒரு கட்டுரை மட்டுமே எழுதினேன். மழை பெய்தால் மனம் வேலையில் குவிய மாட்டேன்கிறது. படிக்கவேண்டிய அறிவியல் இதழ்கள் நிறைய உள்ளன. அவற்றையும் இனி படிக்க வேண்டும். துப்பறியும் சாம்பு - 2 நூலில் 200 பக்கங்களைத் தாண்டிவிட்டேன். தேவனுடைய எழுத்து நகைச்சுவையோடு சிறப்பாக வாசிக்கவும் நன்றாக உள்ளது. உடலைக் கவனித்துக்கொள்ளுங்கள். நன்றி!
அன்பரசு
18.1.2022
மயிலாப்பூர்
-------------------------------------------------------------------------------------------------------
பள்ளிக்கு வெளியே வானம் உள்ளது!
அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று வெகுநாட்களுக்குப் பிறகு ஓட்ஸ் இன்ஸ்டன்ட் உணவு பாக்கெட்டை வாங்கி சமைத்தேன். இதற்கு முன்னர் இதை மதிய உணவாக கூட சாப்பிட்டு இருக்கிறேன். ஒவ்வாமை வந்தபிறகு, வெகுநாட்களுக்குப் பிறகு இப்போதுதான் சாப்பிடுகிறேன். குவாக்கர் ஓட்ஸ் வாங்கி அதில் தக்காளி மிக்ஸை சேர்த்து சமைத்தேன். அதுதான் இரவு உணவு.
தெருக்களே பள்ளிக்கூடம் என்ற நூலை படித்து வருகிறேன். இதன் மூல நூலை குக்கூவில் வேலை செய்தபோது தமிழில் மொழிபெயர்த்தேன். அப்போது சரியாக இருப்பதாக தோன்றியது. உடனே அதை ஃப்ரீதமிழ் இபுக்ஸ் தளத்திற்கு வெளியிட திரு. சீனிவாசன் அவர்களுக்கு அனுப்பினேன். அதை அவரும் சில கேள்விகள் கேட்டு வெளியிட்டார்.
அலுவலக வேலைகளை ஓரளவுக்கு முடித்துவிட்டேன். எனவே, சொந்த வேலைகளைச் செய்தபடி, அறிவியல் இழ்களையும் படித்துக்கொண்டு இருக்கிறேன். அறையில் அமர்ந்தால் தூக்கம் வருகிறது. ஆபீஸ் என்றால் வேலை செய்ய நன்றாக இருக்கிறது.
ஷோபாடே எழுதிய கட்டுரை நூலை 200 பக்கங்கள் படித்துவிட்டேன். அப்போதும் நூலின் கருத்துக்களை அதிகம் யோசிக்கமுடியவில்லை. இதற்கு என் சோம்பலே காரணம். வினோத் அண்ணாவுக்கு எழுதிய கடிதங்களை கடித நூலில் சேர்க்க வேண்டும். ஆபீஸ் தொடங்குவதற்குள் சில நூல்களை உருவாக்கி தொகுக்க வேண்டும். பார்ப்போம். உங்கள் உடலை கவனித்துக் கொள்ளுங்கள்.
நன்றி சந்திப்போம்.
அன்பரசு
20.1.2022
மயிலாப்பூர்
கருத்துகள்
கருத்துரையிடுக