ஆளுமை பிறழ்வின் அடிப்படை, அடையாளம் காணும் முறை

 












ஆளுமை பிறழ்வு பல்வேறு வகையாக பத்து முக்கிய வகையாக இருப்பதைக் குறிப்பிட்டோம் அல்லவா. குறைபாடுகளைப் பார்க்கும் முன்னர் நாம் ஆளுமை என்பதை தெளிவாகப் பார்த்துவிடுவோம். 


ஆளுமை என்பது எப்படி உருவாகிறது, ஒருவர் வாழ்ந்து வரும் சூழ்நிலை, அவருக்கு கிடைக்கும் விஷயங்கள், கல்வி, குடும்ப சூழ்நிலை, இதனால் அவர் உலகை புரிந்துகொள்ளும் விதம். சிந்தனை, ஆகியவற்றை நாம் ஆளுமை உருவாக்கும் அம்சங்கள் எனலாம். நாட்டின் அதிபராக உள்ளவர் பற்றி கருத்து என்றால் அதை நீங்கள் அடுத்த பிரதமர் வேறு ஒரு கட்சி சார்ந்து தேர்ந்தெடுக்கப்படும்போது மாற்றி்க்கொள்ளலாம். ஆனால் ஒருவரின் ஆளுமை அப்படிப்பட்டதல்ல. 


உளவியல் ஆய்வாளர் சிக்மண்ட் ஃபிராய்ட் இந்த வகையில் பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளார். காலப்போக்கில் இவரது சில யூகங்கள் தவறு என்றாலும் கூட உளவியல் ஆய்வில் முக்கியமான ஆய்வுப்பங்களிப்பு செய்தவர் இவர். இவரைப் பற்றி தமிழில் நிறைய நூல்கள் வந்துள்ளன. இணையத்தில் கூட இவரைப் பற்றி தேடிப்படிக்கலாம். ஒருவரின் ஆளுமை என்பது அவர் பிறந்து சில ஆண்டுகளிலேயே முடிவாகிவிடுகிறது என்று சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். பிற விலங்கினங்கள் குட்டிகளாக பிறந்து சில ஆண்டுகளிலேயே தன்னைப் பராமரித்துக்கொள்ள தொடங்கிவிடுகிறது. ஆனால் மனிதர்கள் விஷயம் சிக்கலானது. குழந்தைக்கு பெற்றோரின் பராமரிப்பு அதிக நாட்கள் தேவை. விலங்கினத்தைப் பொறுத்தவரை அதன் ஒட்டுமொத்த ஆயுளைப் பொறுத்து அதன் இளம் பருவம், வளர்நிலை, முதிர்ச்சி, இறப்பு நேருகிறது. அந்த வகையில் மனிதர்களின் வாழ்நாள் அதிகம் என்பதால், குழந்தை முதிர்ச்சியடையும் பருவம் கூடுதலாகிறது. எனவே, குழந்தை பாதுகாப்பான இடத்தில் தேவைகளைப் பெற்று வளரும் அவசியம் நேருகிறது. இதுதான் அக்குழந்தைக்கு ஒருவரிடத்தில் நம்பிக்கை பிறக்கவும் காரணமாக இருக்கிறது. தன்னை பராமரிப்பவரை அடிப்படையாக கொண்டே உலகத்தை குழந்தை பார்க்கிறது. 


பின்னாளைய உளவியல் ஆய்வாளர்கள் சிக்மண்டின் கூற்றை மறுத்தனர். அதாவது அவர்கள் ஒருவரின் ஆளுமை என்பது குழந்தைப்பருவத்தில் முழுக்க தீர்மானிக்கப்படுவதில்லை. அது வாழ்க்கை முழுக்க கட்டமைக்கப்படுகிறது என்று சொன்னார்கள். 


மரபணு மற்றும் வாழும் சூழ்நிலை அதில் கிடைக்கும் அனுபவங்களை ஒருவரின் ஆளுமையை செதுக்குகின்றன. மரபணு ரீதியாக கிடைக்கும் தன்மைகள் உயரம், நிறம், ஆகிருதி கூடுதலாக மரபணு குறைபாடுகளும் கூடத்தான். இதைத்தாண்டி ஒருவர் வளரும் சூழலில் அவர் சந்திக்கும் அனுபவங்கள் நல்லவை, அல்லவை என அனைத்துமே ஒருவரின் வாழ்க்கையை அவர் உலகைப் பார்க்கும் வித த்தை மாற்றும். அதாவது அவரின் ஆளுமை இந்த வகையில் மாற்றம் பெறுகிறது. 


1994ஆம் ஆண்டு வெளியான டயாக்னாஸ்டிக் அண்ட் ஸ்டேடிஸ்டிகல் மேனுவல் ஆஃப் டிஸ் ஆர்டர் நூலில், இதுகுறித்து விளக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, ஒருவர் வாழும் கலாசாரத்தில் சந்திக்கும் அனுபவங்களைப் பொறுத்து ஆளுமை உருவாகிறது. இப்படி உருவாகும் ஆளுமை பெரும்பாலும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இல்லை. இளம் பருவத்தில் ஒருவரின் ஆளூமை சிற்சில மாற்றங்களைப் பெறுகிறது. கலாசார தன்மையில் அவர் பெறும் தாக்கங்களே ஆளுமை பிறழ்வு நிகழ்வுக்கு இட்டுச்செல்கிறது. 


ஆளுமை பிறழ்வு கொண்டவர்கள் அழிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். அப்படி செய்வதை இயல்பானதாக நினைப்பார்கள். அழிக்கும் குணம் என்பது ஆளுமை பிறழ்வில் முக்கியமான பகுதி. ஆளுமை பிறழ்வு என்பது கருத்து, உணர்ச்சி ஆகிய இரு பகுதிகளைப் பாதிக்கிறது. இதனால் அவர்கள் திடீரென கோபம் கொள்வது, வன்முறையில் இறங்குவது என்பதை இயல்பாக எதிர்கொள்வார்கள். மற்றவர்கள் பீதி அடைவது உணர்ச்சிகளின் மீது கட்டுப்பாடு இல்லாத இந்த காரணத்தால்தான். 


ஒருவர் உங்களை எளிதாக கோபமுற செய்கிறார், பிறருடன் இணைந்து செயல்படுவதில் எப்போதும் பிரச்னையாக இருக்கிறார் என்றால் அவருக்கு ஆளுமை பிறழ்வு இருக்கும் என கூற முடியாது. அப்படி தொடர்புடையவருக்கு நீங்கள் கூறினால் அது தேவையின்றி அவரை காயப்படுத்தி உசுப்பேற்றுவது போலாகும். பிறகு நேரும் விளைவுகளுக்கு இப்படி பதில் கூறியவரே பொறுப்பு. 


தலையில் அடிபட்டு ஆளுமை மாறுவது, நச்சு தன்மையால் ஒருவரின் இயல்பு திரிவது, வல்லுறவு, மோசமான நடத்தப்படுதல் ஆகியவற்றை வைத்து உடனே ஒருவருக்கு ஆளுமை பிறழ்வு ஏற்பட்டுவிட்டது என கூற முடியாது. இதை உறுதிபடுத்தவென தனி சோதனைகள் உள்ளன. அதை செய்து பார்த்து பிறகுதான் ஆளுமை பிறழ்வு உள்ளதா இல்லையா என்று கூறவேண்டும். 


பெரும்பாலும் ஒருவரின் மனநலனைப் பற்றி சொல்லும்போது மருத்துவரிடம் யாரும் உண்மையைச் சொல்ல மாட்டார்கள். இந்த நிலைமை இப்போது மெல்ல மாறிவருகிறது. 




வின்சென்ட் காபோ

Image - Pinterest

கருத்துகள்