வெறுப்பின் வாசம் வீசும் ரத்தம் தோய்ந்த காற்று - இந்தியாவின் மதவாத வன்முறைக்கு எதிராக காந்தி

 

 

 

 Free photos of Mahatma gandhi

 

 

காந்தி இந்தியாவின் தேசப்பிதா என்று அழைக்கப்பட்ட காலம் இருந்தது. ஆனால் அவர் மக்கள் மீது காட்டிய பாசங்கற்ற அக்கறையும் அன்பும் அவரது உயிரைப் பிரித்தது. அவரது உடலில் பாய்ந்த மூன்று தோட்டாக்கள் உடலை நம்மிடமிருந்து பிரித்திருக்கலாம். பிறரைப் பற்றி அக்கறை கொள்ளும் காந்தியின் மதிப்புகளை அல்ல. இன்று காந்தி பிறந்த தேசத்தில் அவருக்கு இருக்கும் மதிப்பு எதிர்காலத்தில் இருக்கும் என்று கூறமுடியாது. இந்து - முஸ்லீம் பிரச்னையில் காந்தியின் நிலைப்பாடு காரணமாக அவர் மீது விரோதம் பாராட்டி கருத்துகளைப் பேசும் பதிவிடும் குழுக்கள் அனைத்து இடங்களிலும் உருவாகி வளர்ந்து வருகிறார்கள்.


காந்தி தமிழ்நாட்டில் மதுரைக்கு வந்தபோதுதான் வறுமையில் உள்ள விவசாயிகளின் நிலையைப் பார்த்து தனது உடையை அரையாடையாக மாற்றிக்கொண்டதாக கூறுவார்கள். அவர் அந்த ஆடையை தனது செயல்பாடுகளுக்கு கருவியாக கொண்டார். தனது போராட்டத்திற்கு தனது உடலையே ஆயுதமாக பயன்படுத்த காந்தி கற்றிருந்தார். இதனால்தான் இங்கிலாந்தின் பக்கிங்காம் மாளிகைக்கு காந்தி அரையாடையில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மையில் அப்படி உடை உடுத்தி வருவது என்பது காந்தி சுய விழிப்புணர்வோடு எடுத்த முடிவு.


காந்தி மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி பேசி வந்தார். இதனால் உலக நாடுகளில் பலருக்கும் காந்தி முக்கியமான உரிமைகளின் அடையாளமாக இருக்கிறார். இப்போது இந்தியா ஒரே நாடாக இருக்கிறது. தனி பிராந்தியங்களாக இருந்தாலும் அதிலுள்ள மக்கள் சுதந்திரமான பேச்சு, எழுத்து ஆகிய உரிமைகளுக்காக காந்தியைப் போலவே பேசுவார்கள் என உறுதியாக நம்பலாம்.


காந்தியை ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் வசீகரித்தார் என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு முன்னதாகவே அவருக்கு பிற மதங்களைப் புரிந்துகொள்ளும் மனநிலை இருந்தது. வைஷ்ணவராக வணிக சாதியில் பிறந்தவராக இருந்தாலும், ராஜ்கோட்டில் அவர் படித்த பள்ளியில் முஸ்லீம், பார்சி நண்பர்கள் உண்டு. பிறகு லண்டனில் பாரிஸ்டர் படிப்பின்போது, பைபிள், கீதா இரண்டையும் படித்தார். பிறகு தென்னாப்பிரிக்காவிற்கு சென்றார். 1893 ஆம் ஆண்டு முதல் 1909ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்தபடியேதான் அயலக இந்தியராக இந்து சுயராஜ்யம் நூலை எழுதினார். வெளிநாடுகளில் இருந்தபோது ஆங்கில மொழியில் கட்டுரைகளை எழுதினார். பிறகுதான் தாய்மொழியான குஜராத்தில் எழுதத் தொடங்கினார்.


காந்தியை, இந்தியாவில் எந்த மாநிலத்தில் வாழும் எப்பிரிவைச்சேர்ந்த மக்களும் தன்னுடன் பொருத்திப் பார்த்துக்கொள்ளமுடியும். எளிய மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட்ட காந்தி, அரையாடை அணிந்தாலும் அவரை காஸ்மோபாலிட்டன் மனிதராகவும் அடையாளப்படுத்திக்கொள்ளலாம். மேலும் அவர் எதிரியிடமும் கருணையோடு நடந்துகொள்ளும் இயல்புகொண்டவராக இருந்தார். அது அவரை உடல்ரீதியாக, உள்ள ரீதியாக துன்புறுத்த நினைத்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக, சித்திரவதையாக இருந்தது. இதனால் வன்முறைவாதிகளை எதிர்கொள்வதை விட ஆங்கிலேயருக்கு காந்தியை எதிர்கொள்ளுவது கடினமாக இருந்தது. காந்தியின் கண்ணிய குணத்திற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு. சிலவற்றைப் பார்ப்போம்.


தென்னாப்பிரிக்க சிறையில் இருந்தபோது தன்னை சிறையில் அடைந்த ஜான் ஸ்மட்ஸ் என்ற ஆங்கிலேயருக்கான காலணியைத் தயாரித்துக் கொடுத்தார். இந்தியாவை துண்டாடி பாகிஸ்தானைக் கேட்ட ஜின்னாவிற்கு உடல் நலமில்லாமல் போகும் காக்ராஸ் உணவை அவருக்கு அனுப்பி வைத்தார். 1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசி எலிசபெத்திற்கு, மேசை விரிப்பொன்றை நெய்து பரிசாக அனுப்பி வைத்தார். இதையெல்லாம் கண்ணியமான செயல்பாடுகளாக கருதிக் கூறலாம்.

காந்தி தனது சத்தியசோதனை நூலில் தனக்கு நேர்ந்த அனைத்து அனுபவங்களையும் வெளிப்படையாகவே எழுதியுள்ளார். இதில் லண்டனில் நண்பராக இருந்த ஆலிவின் பின்னாளில் அரசின் முகவராக மாறியதைக் குறிப்பிட்டுள்ளார். இவர், காந்தியை போராட்டத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதை பெரும் அதிர்ச்சியாக உணர்ந்தேன் என எழுதியுள்ளார். போர்பந்தரைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவர், வழக்குரைஞரான காந்தியை பணிக்காக தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்தார். அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, வெள்ளையர்களின் இனவெறிக்கு எதிராக போராடியதுதான் சத்தியாகிரகத்தின் முதல்படி. அங்கு வெள்ளையர்களுக்கு எதிராக பெற்ற வெற்றியை உலகமே கண்டு வியந்தது. பின்னர், அந்த போராட்ட வடிவத்தை இந்தியாவில் செயல்படுத்தினார்.


அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், தென்னாப்பிரிக்காவில் மண்டேலா ஆகியோர் காந்தியின் அகிம்சை, சத்தியாகிரகப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். 1960ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங், கருப்பின மக்களுக்கான சட்ட உரிமைகளுக்காக காந்திய முறையில் போராடினார். தொண்ணூறுகளில், மண்டேலா தனது கொள்கைகளுக்காக அகிம்சை முறையில் போராடி சிறைவாசம் அனுபவித்தார். பின்னாளில் அகிம்சை சத்தியாகிரகப் போராட்டத்தின் வழியாகவே நாட்டின் அதிபரானார். காந்தியின் கருத்துகளை ஒருவர் ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தமுடியும். அல்லது எதிர்மறையாக அழிக்கவும் பயன்படுத்தலாம்.

எல்லா மேதைகளிடமும் இருக்கும் சில கருத்து வேறுபாடுகள், முரணான பேச்சு, செயல்பாடு ஆகியவை காந்தியிடமும் இருந்தது. ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய இனவெறி பாகுபாடு போராட்டம் என்பது அவரது தாய்நாட்டவர்கள் குறித்ததே. ஆப்பிரிக்க மக்கள் பற்றியதல்ல. இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து படைகளை ஜெர்மனிக்கு எதிராக அகிம்சை முறையில் போராடுமாறு சொன்னார் காந்தி. அடுத்து, பாகிஸ்தானியர்கள் காஷ்மீரை தாக்கியபோது, இந்திய ராணுவப்படையை அவர்களுக்கு எதிராக இருக்க வேண்டாம் என்று கூறி, அவர்களை ஶ்ரீநகருக்கு பின்வாங்குமாறு கூறினார்.


காந்தியின் காலத்திலேயே அவரது கொள்கைகளை குழிதோண்டி புதைத்து வன்முறை மேலெழத் தொடங்கியது. இதற்கு சரியான சான்று இந்து முஸ்லீம் கலவரம். இப்படி ஏற்பட்ட சம்பவங்களும் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டதும் காந்தியை நிலைகுலையச் செய்தது. வங்கதேசத்தில் இந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலிருந்து தப்பிக்க அவர்கள் இஸ்லாமிய மதத்தில் இணையும் நிர்பந்தம் உருவானது. இப்படி மதம் மாறித்தான் பலநூறு இந்து மதத்தினர் அங்கு உயிர் பிழைத்தனர். பிறகு இந்தியாவில் பீகார் மாநிலத்தில் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தி பல நூறு பேர் கொல்லப்பட்டனர். காந்தி அங்குள்ள அரசியல் தலைவர்களைப் பார்த்து, 110க்கும் மேற்பட்ட மக்கள் வெட்டிக்கொல்லப்படும்போது எப்படி அமைதியாக உங்களால் வேடிக்கை பார்க்க முடிந்தது என்று கேட்டார்.


பின்னாளில் காந்தி,தன்னைக் காத்துக்கொள்ள ஒருவர் ஆயுதத்தை கையாள்வதைத் தவறாக கூறவில்லை. நாட்டில் சிறுபான்மையினர் தங்களைக் காத்துக்கொள்ள ஆயுதங்களை வைத்திருப்பது இயல்பான நிலைமை ஆகிவிட்டால் பிறகு நாம் காந்தி பிறந்த தேசம் என்று சொல்வதைக் கைவிட்டு விடுவதே நல்லது. முடிந்தவரை மக்கள் வெறுப்புணர்வின்றி பிறரோடு இசைவாக வாழச்செய்ய மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும்.


ராஜ்மோகன் காந்தி

இந்தியா டுடே

படம் பிக்சாபே

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்