காந்தியின் பேச்சால் ஊக்கம் பெற்று உருவான தற்சார்பு பேனா மற்றும் இங்க்!
காந்தி தன் வாழ்நாளில் எழுதியுள்ள கடிதங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மொத்தம் 31 ஆயிரம் கடிதங்கள். தினசரி உலக நாடுகளில் இருந்து வெளிவரும் கடிதங்களுக்கு பதில் அளிப்பது காந்தியின் வழக்கம். அவர் வார நாட்களில் திங்கள்கிழமை மட்டும் மௌனவிரதம் இருப்பது வழக்கம். ஆனால் வார நாட்களில் எப்போதும் எழுத்துக்கு விடுமுறை கிடையாது. இப்படி எழுதித்தான் நூறு நூல்களுக்கு மேல் காந்தி எழுதிய கட்டுரைகள், பேச்சுகள் தொகுக்கப்பட்டு உள்ளன.
இந்திய சுயராஜ்யம் பற்றி பேசிய காந்தி, இந்தியாவின் உள்நாட்டுத் தேவை போகவே பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்று கூறிவந்தார். இவரது கருத்தால் ஊக்கம் பெற்றவர்கள் தான் நாட்டின் தனித்துவமான பேனா மற்றும் பேனாவிற்கான மையைத் தயாரித்தனர். காந்தியின் சுய ராஜ்ய கனவால் உந்தப்பட்டவர்களில் ஒருவர்தான் ராஜ முந்திரியைச் சேர்ந்த கே வி ரத்னம். இவர், 1921ஆம் ஆண்டு காந்தியை சந்தித்து சுயராஜ்ய லட்சியப்படி என்ன பொருளை உருவாக்க வேண்டுமென கேட்டார். அதற்கு, காந்தி பின் முதல் பேனா வரையில் நிறைய பொருட்களை நாம் தயாரிக்கலாமே என்று சொன்னார். இதன்படி, 1932ஆம் ஆண்டு ரத்னம் பென் வொர்க்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு பேனாக்களை தயாரித்து விற்கத் தொடங்கியது. முதலி்ல் தயாரித்த பவுண்டைன் பேனாவை ரத்னம் காந்திக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அப்பேனாவின் பகுதிப்பொருட்கள் வெளிநாட்டு இறக்குமதி பொருட்களால் ஆனவை என்பதால் அப்பேனாவை ஏற்றுக்கொள்ள காந்தி மறுத்துவிட்டார். பிறகு அடுத்த ஆண்டே, ரத்னம் இந்தியாவில் கிடைக்கும் பொருட்களை வைத்து மட்டுமே பேனாக்களைத் தயாரிக்கத் தொடங்கினார். அப்படி தயாரித்த பேனாவில் ஒன்றை காந்திக்கு அனுப்பினார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்ற காந்தி, தான் பேனாவை ஏற்றுக்கொண்டதைப் பற்றி கடிதம் ஒன்றை எழுதி ரத்னத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதே காலத்தில் கோபால் ஹரி தேஷ்முக், போலாநாத் சந்திரா ஆகிய சிந்தனையாளர்கள் வெளிநாட்டு இறக்குமதிக்கு எதிராக உள்நாட்டில் தயாரித்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற காந்தியின் கருத்துக்களோடு உடன்பட்டார்கள். ஜாம்ஷெட்ஜி நுஷர்வான்ஜி டாடா, இந்தியாவிற்கான தொழில் ஆலை ஒன்றைத் தொடங்கினார். அடுத்து, தொழிலதிபர் ஆர்தேஷிர் கோத்ரெஜ், கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் உற்பத்தி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். கிராமங்கள் தங்கள் தேவையை தாங்களே உற்பத்தி செய்யும் பொருட்களால் நிறைவு செய்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். அதாவது மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே தயாரித்து பயன்படுத்திக்கொள்வதாகும்.
காந்தியின் செய்தி காரணமாக இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்கள் தோன்றி செயல்படத் தொடங்கின. சோப்புகள், உடைகள், தீப்பெட்டிகள் இந்த முறையில் தயாரிக்கப்பட்டன. இதில் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்ட சுலேகா என்ற பேனா மை பிராண்டு முக்கியமானது. இதை சங்கராச்சார்யா மைத்ரா, நானிகோபால் மைத்ரா ஆகியோர் உருவாக்கினர். பேனா மைக்கான சூத்திரத்தை சதிஷ் சந்திர தாஸ்குப்தா என்பவரிடமிருந்து பெற்றானர். அப்போது சந்தையில் இருந்த முக்கியமான பிராண்டுகள், பார்க்கர் குயின்க், டிபி தண்டேகர் நிறுவனத்தின் ஹார்ஸ் பிராண்டு மை. இந்த மை திரவ வடிவிலும், பவுடர் வடிவிலும் விற்கப்பட்டது. டிபி தண்டேகரின் நிறுவனம்தான் பின்னர் கேம்ளின் என்ற நிறுவனமாக மாறியது. மற்ற நிறுவனங்களுக்கு இல்லாத அனுகூலம் சுலேகாவிற்கு கிடைத்தது. சுதந்திரப்போராட்டத்தில் தற்சார்பு என்பதும், காந்தியின் கருத்தோடு இணைந்து உருவாக்கப்பட்டது என்பதும்தான். இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பிபெக் டெப்ராய் எழுதிய கட்டுரையில், தான் பள்ளியில் படித்தபோது பேனாவில் சுலேகா மையைப் பயன்படுத்தி எழுதியதை நினைவுகூர்ந்துள்ளார்.
சுலேகா மை தயாரிப்பு நிறுவனம், தொழிலாளர் பிரச்னை காரணமாக 1989ஆம் ஆண்டு மூடப்பட்டுவிட்டது. பிறகு, 2006ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டு மையோடு பேனா, நோட்டு என பல்வேறு பொருட்களை தயாரித்து வருகிறது. 1958ஆம் ஆண்டு கேவி ரத்னம் பேனா நிறுவனம், இரு நிறுவனங்களாக தனியாக பிரிந்துவிட்டது. இப்போது ரத்னம் மற்றும் அவரது சகோதரர்கள் தனியாக பிரிந்துவிட தனித்தனியாக இயங்கி வருகிறது. ஆனால் பேனாக்களின் தரம் எப்போதும் போலத்தான் உள்ளது. இவர்களது பேனாக்களின் வேறுபாடு, தேவைக்கேற்ப மாற்றித்தரும் நிப்புகள்தான். பத்திரிகையாளர், மருத்துவர் என தேவைக்கு ஏற்ப பேனாவை ரமணாவின் மகனான மூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் மாற்றித் தருகிறார்கள். ஒரு பேனாவை உருவாக்கித் தர மூர்த்திக்கு இரண்டு நாட்கள் தேவை. இந்த பேனா உருவாக்கும் வேலைக்கு பெரிய சம்பளம் கிடையாது என்பதால் ஆட்களும் கிடைப்பதில்லை. எனவே, பேனாக்களை உடனே உருவாக்கித் தருவதும் வயதான ஆட்களால் எளிதாக முடிவதில்லை.
காந்தியின் 140ஆவது பிறந்த ஆண்டின்போது, மான்ட் பிளாங்க் நிறுவனம் காந்தியின் அகிம்சை என்ற பெயரில் பேனா ஒன்றை வெளியிட்டது. ஆனால் அதன் சிறப்பு, அதன் விலை பத்து லட்சம் என்பதுதான். காந்தி எளிமையான வாழ்க்கையை சொன்னவர். ஆனால் அவரது கருத்துகளை வைத்து பத்து லட்சம் ரூபாயில் பேனாவை விற்கிறீர்களா என விமர்சனம் கிளம்ப மான்ட்பிளாங்க் நிறுவனம் தனது பேனாக்களை திரும்ப பெற்றுக்கொண்டது. ௦
கருத்துகள்
கருத்துரையிடுக