காந்தியை மாணவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் - சோபன் ஜோஷி

 

 

 

 

 

 

 


 

 மாணவர்களிடத்தில் காந்தியை கொண்டு போய் சேர்ப்பது எப்படி?

 

சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கி இன்றுவரை காந்தி இந்தியாவில் பேசுபொருளாகவே இருக்கிறார். அவரை நேரடியாக வாழும் மனிதராக பார்க்க முடியாவிட்டாலும் தினசரி வாழ்க்கையில் எளிதாக சந்தித்து விடலாம். அவரை ரூபாய் நோட்டுகளில், சாலைகளின் பெயராக, குப்பைகளை அள்ளும் திட்டத்தில் காந்தி இருப்பார். அவரின் வட்டமான கண்ணாடி இருக்கும்., நேர்மை, உண்மை என்று பேசப்படும்போதும் காந்தியை தவிர்த்து வேறு யாரை நாம் கூறிவிடமுடியும். இன்று வாட்ஸ் அப் மூலம்தான் பலரும் செய்திகளை அறிகிறார்கள். அதை வைத்தே அனைத்தையும் தெரிந்துகொண்டதாக நினைக்கிறார்கள். இந்தியாவைக் கட்டமைத்தவர்களை நாக்கு வளைந்த வரை அவதூறு பேசுகிறார்கள். குற்ற உணர்வேயின்றி, சுய லாபத்தை முன்னிறுத்தி செயல்படுகிறார்கள். மனிதர்கள் பலவகை. அப்படித்தான் இருப்பார்கள்.


இன்று வலது சாரிகள் தங்களது ஆட்சியில் காந்தியை பல்வேறுவிதமாக விவாதப் பொருளாக்கி அவரை ஓரங்கட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அது எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. அவர் எழுதிய பேசிய எழுத்துகளே நூறு தொகுதி நூல்களாக அச்சிடப்பட்டுள்ளன. இவை தவிர உலகமெங்கும் அவரைப் பற்றி ஏராளமான கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், பொருளாதாரவாதிகள், வரலாற்று அறிஞர்கள் எழுதியுள்ளனர்.


இதுதவிர காந்தியும் மார்க்சியமும், காந்தியும் அரசியலும் என காந்தி என்ற எழுத்துக்கு பின்னொட்டாக ஆட்டுப்பால், உருளைக்கிழங்கு என்று கூட போட்டுக்கொண்டு நிறைய கட்டுரைகளை உலகமெங்கும் எழுதி வருகிறார்கள். அதாவது இப்படி கூறுவது காந்தியை பல்வேறு துறை சார்ந்தும் பொருத்திப்பார்க்கலாம் என்பதே. இப்படி செய்திகள் வருவது அவரை கீழ்மைப்படுத்துவதல்ல, நவீன காலத்திற்கும் பொருத்தமானவராக காந்தி இருக்கிறார் என்பதே. காந்தி, தன் வாழ்நாளில் பல்வேறு துறைகள் சார்ந்து நிறைய பேசியிருக்கிறார். எழுதியிருக்கிறார். தெரியாத விஷயம் என்றால் அதை தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறார். இதுதான் காந்தியை மக்களின், மிகப்பெரிய தேசத்தின் பிரதிநிதியாக உருவாக்கியது. வலதுசாரியோ, இடதுசாரியோ யார் வேண்டுமானாலும் காந்தியின் வாழ்க்கை சம்பவங்களை எடுத்துக்கொண்டு அவர்களுடைய கருத்தியலுக்கு ஏற்ப மாற்றி எழுதிக் கொள்ளலாம். அதற்கும் பொக்கைவாய் சிரிப்புடன் அனுமதிக்கிறார். தன் வாழ்க்கையை உலகம் முன்பு பகிரங்கமாக முன் வைத்தவர்தான் காந்தி.


இன்றும் கூட பலருக்கும் காந்தி என்றால் மனதில் அவர்களின் அசுத்தங்கள், கசியங்கள் நினைவுக்கு வரும். இதனால் காந்தியை கடுமையாக விமர்சித்து பேசுவார்கள். ஏளனமாக சிரிப்பார்கள். காந்தி அதற்கான இடத்தையும் வழங்கியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு எதிர்ப்பாளர்களின் வாதங்களையும் கவனிக்க வேண்டும். தன் வாழ்க்கையை வெளிப்படையாக பிறருக்கு முன் வைத்த காரணத்தால்தான் காந்திக்கு மகாத்மா என்ற பெயர் சூட்டப்பட்டது. இப்பெயரை சூட்டியவர், காந்தியின் அகிம்சை வழிக்கு எதிரான ஆயுத நிலைப்பாட்டை எடுத்த சுபாஷ் சந்திர போஸ் என்றால் ஆச்சரியமாக இருக்கும்.


இன்று வலதுசாரிகளின் ஆதரவாளர்களால் காந்தி மீது நிறைய கேள்விகளை எழுப்பி வருகின்றனர். காந்தி ஏன் பகத்சிங்கின் தூக்கு தண்டனையை தடுக்கவில்லை. வருணாசிரமம், சாதி ஆகியவற்றை காந்தி ஆதரித்தது எதற்காக, பாகிஸ்தானுக்கு இழப்பீட்டுத்தொகையை 75 கோடி ரூபாயை கொடுத்தது ஏன்? வல்லபாய் படேலை விடுத்து ஜவகர்லால் நேருவை பிரதமர் ஆக்கியது ஏன் என நிறைய கேள்விகளைக் கேட்கிறார்கள்.


மேற்சொன்ன கேள்விகளுக்கு காந்தி பற்றிய ஆய்வாளர்கள் திருப்திகரமான பதில்களை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் உண்மை யாருக்குத் தேவை? உண்மையைக் கூறும் வாய்ப்பில் ஏராளமான தவறான தகவல்களை பலரும் சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்தி ஆப்கள் மூலம் பரப்பிவிடுகிறார்கள். இதற்கு பதில் சொல்லி சரியான தீர்வை நோக்கி அவர்களை நடத்தி்ச்செல்வது கடினமானது.


அகிம்சை மீது சாதாராண எளிய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை முக்கியமானது என காந்தி ஒருமுறை கூறியிருக்கிறார். காந்தியைப் பற்றி பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவுறுத்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முயன்றார். 2017ஆம் ஆண்டு இந்த முறையில் செய்த முயற்சி துரதிர்ஷ்டவசமாக தோல்வியுற்றது. தொடக்க கல்வி, உயர்கல்வி என இரண்டு பிரிவினருக்கும் உதவும்படி காந்தியின் செயல்பாடுகள் இந்தி மொழியில் இரு நூலாக உருவாக்கப்பட்டன. ஆனால் இவை வெறும் தகவல்களாகவே மி்ஞ்சின. மாணவர்கள் படிப்பதற்கான சுவாரசியங்கள் ஏதும் நூலில் இல்லை. அப்புறம் எப்படி காந்தியைப் பற்றி ஒருவர் படித்து அறிந்து அவரின் வழியை பின்தொடர்வது நடைபெறும்? பீகார் அரசு செய்தது கூட காந்தியின் சம்பரான் போராட்டத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காகத்தான். பீகார் மாநில அரசின் அந்த முயற்சியும் கூட பெரியளவு வெற்றியடையவில்லை. இதற்கு காரணம் நூல்களை ஆய்வு உதவித்தொகை கிடைப்பது போல எழுதியதுதான். இதனால் நூல் நினைத்த அளவிற்கு மாணவர்களை கவரவில்லை.


இப்படி ஒரு மனிதர் பூமியில் வாழ்ந்தார் என்று கூட அடுத்து வரும் தலைமுறையில் யாரும் நம்ப மாட்டார்கள் என ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார். அவர் சொன்னது இன்று உண்மையாகி இருக்கிறது. காந்தியை, அவரது செயல்பாடுகளை எப்படி பார்ப்பது என்ற பகுத்தறிவை நாம் இழந்துவிட்டிருக்கிறோம். ஆய்வுக்காக கட்டுரைகளை எழுதி அதில் பெறும் உதவித்தொகை என்பதைத் தாண்டி காந்தியை அறியவேண்டும் என்பதற்காக அவரைத் தேடுவது கண்டடைவது என்பது குறைந்துவிட்டது. இன்றும் காந்தியவாதிகள் என்ற அடையாளம் கொண்டவர்கள் மென்மையாக பேசுபவர்களாகவும், பொருளாதாரம் சார்ந்த அறிவு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் காந்தியின் மதிப்புகளை அவரைப் பின்பற்றுபவர்களே எளிதாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் மனிதர்களாக இருக்கிறார்கள்.


இன்று ஒருவரை உயர்த்திப்பிடிக்க இன்னொருவரை அவமானப்படுத்துவது நாகரிக பாணியாக உள்ளது. இதனால் காந்தியின் அகிம்சையை மாணவர்களிடம் கூறும்போது அவர்கள் அதை கோழைத்தனம் என்று புரிந்துகொள்ளவே வாய்ப்புகள் அதிகம். தென் ஆப்பிரிக்காவில் மீர் ஆலம் என்ற மனிதர் காந்தியை தாக்கிய மனிதர்களில் ஒருவர், இவர்களை கைது செய்த காந்தியின் ஆங்கிலேய நண்பர்களே கேட்டபோதும், காந்தி அவர்கள் மீது புகார் கொடுக்கவில்லை. பின்னாளில் காந்தியைப் பாதுகாக்கும் பாதுகாவலராக மீர் ஆலம் மாறினார். 1947ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற வன்முறையை காந்தியின் உண்ணாவிரதம் நிறுத்தியது. இதை அப்போது அதிசயம் என்றே பத்திரிகைகள் எழுதின.


காந்தியின் அகிம்சை போராட்டம் என்பது அடிப்படையில் எதிர்த்தரப்பை அழிப்பதல்ல. அது ஒரு உரையாடல். வன்முறையை கையில் எடுக்கும், அதிகாரத்தை தீவிரமாக நம்பும் மனதை யோசிக்க வைப்பது. குற்ற உணர்வைத்தூண்டுவது. ஆனால் குற்ற உணர்வே இல்லாத மனங்களி்ல் காந்தியின் அகிம்சைப் போராட்டத்திற்கு என்ன பயன் இருக்கும் என்பது நாம் பதில் கண்டறிய வேண்டிய கேள்விதான்.


மாணவர்களிடம் காந்தியை எப்படிக் கொண்டுபோய் சேர்க்கிறோம் என்பதே, காந்தியை அவர்கள் எப்படி புரிந்துகொள்ளப்போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும். அதற்கான பணியைத் தொடங்குவது சிறந்தது.

இந்தியா டுடே

சோபன் ஜோஷி

இந்தியா டுடே இதழில் வெளியான சோபன் ஜோஷி கட்டுரையைத் தழுவியது.



கருத்துகள்