காந்தியின் அடிப்படை சிந்தனைகளை உருவாக்கிய நகரம்!

 








காந்தி படிக்கச்சென்ற இங்கிலாந்தின் லண்டன் நகரம். அந்த நகரம்தான் ஆங்கில தேசத்தின் சட்டங்களோடு அவரின் மனவலிமையையும் திடமாக உருவாக்கிய இடம். இங்கு அவர் படித்த மத ரீதியான நன்னெறி நூல்களும், சந்தித்த நூல்களும் காந்தி என்ற அடையாளத்தை வலிமையாக்கின. அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.


வைஷ்ணவ குலத்தில் பிறந்த காந்தி இந்து, சமணம் ஆகிய மதத்தினரின் பல்வேறு சடங்குகளை அறிந்துகொள்ள அவரது அம்மாவே காரணம். லண்டன் நகரில் வழக்குரைஞர் படிப்பிற்காக தங்கியிருந்த காலகட்டம் அவரை சிந்தனையாளராக மாற்றியது. வாழ்க்கை முழுமைக்குமான லட்சியவாத கருத்துகளை அவர் லண்டனில்தான் பெற்றார்.


1888-1891 ஆண்டில் லண்டனில் சட்டம் படிக்க வழக்குரைஞராக காந்தி சென்றார். பிறகு, 1906-1931 காலகட்டத்தில், அரசியல் காரணங்களுக்காகவும் பணிக்காகவும் நான்கு முறை காந்தி பயணித்தார். இந்தியா காலனி தேசமாக இருந்தது. இ்ங்கிலாந்து அதனை ஆண்டு வந்த பேரரசு. இதனால் லண்டன் நகரம் பல்வேறு முக்கியமான தலைவர்கள் வந்து செல்லும் இடமாக புகழ் பெற்றிருந்தது.


காந்தி முதல்முறையாக லண்டனுக்கு வந்தபோது தன்னோடு டைரி ஒன்றை வைத்திருந்தார். அதில் பல்வேறு குறிப்புகளை எழுதினார். ஆனால் நமக்கு அதில் சில பக்கங்களே கிடைத்துள்ளன. அவை முழுமையாக கிடைத்திருந்தால், முக்கியமான எழுத்துப்பூர்வ ஆவணமாக இருந்திருக்கும். 1888ஆம் ஆண்டு கூச்ச சுபாவம் கொண்ட காந்தி லண்டனுக்கு வந்தார். ஆங்கிலம் அரைகுறையாக தெரிந்த அவருக்கு அனைத்துமே புதிதாக இருந்தது. விக்டோரியா ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றார். அங்கு அவர் ஆர்டர் செய்த உணவு சரியில்லை என புதிய உணவு ஒன்றைக் கேட்டார். பிறகு பில் வந்தபிறகுதான் இரண்டுக்குமே தான் பணம் கொடுக்கவேண்டியிருப்பது புரிந்து திகைத்தார்.


பெருநகரில் அவர் வாங்க நினைத்த அனைத்துமே விலை அதிகமாக இருந்தது. அவரது அம்மா, மதத்தை அது கற்றுத்தந்த ஒழுக்கத்தை தீவிரமாக பின்பற்றினார். அதனால் காந்தியிடம் மது, மாது, இறைச்சி சாப்பிடக்கூடாது என சத்தியம் வாங்கிக்கொண்டார். இந்த மூன்றையும்தான் லண்டனில் பலரும் சுகித்துக்கொண்டிருந்தனர். ஆனால் காந்தி இவற்றிலிருந்து தள்ளியிருந்தார். லண்டனில் வாழ்வதற்கான முறையான உடைகள் கூட காந்தியிடம் இல்லை. சட்டப்படிப்புக்காக ஏராளமான நூல்கள் படித்து தேற வேண்டியிருந்தது. அறையில் தனியாக அமர்ந்து வீட்டை நினைத்து கண்ணீரை வடித்தபடி எழுதிக்கொண்டிருப்பார். இத்தனைக்கும் பத்தொன்பது வயதில்தான் இந்த அனுபவங்கள்.


கலாசார ரீதியாக, நிலப்பரப்பு ரீதியாக, உணர்வு ரீதியாக வேறு ஒரு தன்மையில் காந்தி இருந்தார். பிறகுதான் தான் படிக்கும் நாட்டிற்கு ஏற்ப மாறும் முயற்சிகளைச் செய்தார். இதன்படி ஆடைகளை வாங்கினார். வயலின் வகுப்பில் சேர்ந்தார். ஆனால் இதெல்லாம் பெரிதாக அவருக்கு பயன் தரவில்லை. அவருக்கு சைவ உணவுகளை தேடி உண்பது கடினமாக இருந்தது. படிக்கும்போது அவருக்கு ஆங்கிலோ இந்திய பெண்மணியான அலாஸ் என்பவர் சமைத்துக்கொடுத்தார். அவர், காந்திக்கு சைவ உணவுகளை மட்டும் விற்கும் உணவகங்களை அடையாளம் காட்டினார். காந்தி, விக்டோரியா ஹாலில் சாப்பிட்ட வேக வைத்த காய்கறிகள் சுவையற்றவை என்று தோன்றியது. பிறகு சைவ உணவுகள் பற்றி படித்தவர், சைவ உணவு பிரசார இதழ்களில் கட்டுரைகளை எழுத தொடங்கினார்.



காந்தி, லண்டன் நகரிலுள்ள கஃபே ஒன்றுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அவரை இந்தியர் என தெளிவாக அடையாளம் கண்டுகொண்ட இரண்டு மாணவர்கள் அவரிடம் பகவத் கீதைக்கான விளக்கம் கேட்க வந்தனர். அவர்கள் அந்த நூலை சமஸ்கிருதத்தில் படித்தனர். அப்போது காந்தி, பகவத் கீதையை குஜராத்தி உட்பட எந்த மொழியிலும் படித்திருக்கவில்லை. பிறகுதான், எட்வின் அர்னால்டின் மொழிபெயர்ப்பான தி சாங் செலஸ்டியல் என்ற நூலைப் படித்தார். சந்நியாசம், தியாகம் ஆகிய சொற்களுக்கான விளக்கத்தை அகராதி வைத்து அறிந்தார். அதை பகவத் கீதைக்கு விளக்கம் கேட்ட இருவருக்கும் கூறினார் காந்தி. பிறகு மூவரும் தியோசபிகல் சொசைட்டிக்கு சென்றனர். அங்கு, பிளாவட்ஸ்கி என்ற பெண்மணியின் உரையைக் கேட்டார் காந்தி. பிறகு அன்னிபெசன்ட் அம்மையாரையும் சந்திக்கும் சூழல் கிடைத்தது. அதுவரை இந்து மதத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி கிறிஸ்துவ மதத்தினரால் தவறாக திரிக்கப்பட்ட கருத்தைக் கேட்டவருக்கு நிறைய விஷயங்கள் புரிபடத் தொடங்கின.



லண்டனில் அறிவுசார்ந்த வட்டாரத்தில் காந்தி அடிக்கடி தென்படத் தொடங்கினார். இ்ங்கு அவர், சமூக விமர்சகர் எட்வர்ட் கார்பென்டர், நாத்திகவாதியான பிராட்லாப், எசோடெரிக் கிறிஸ்தவ யூனியன் அமைப்பைத் தொடங்கிய ஜோசியா ஓல்ட்ஃபீல்ட் ஆகியோரைச் சந்தித்தார். தனது மனதிற்கு ஒவ்வாத கருத்தாக இருந்தாலும் எதிர்த்தரப்பை காது கொடுத்து கேட்கும் பண்பை காந்தி இங்கு வளர்த்துக்கொண்டார். காந்தியின் அறிவுசார்ந்த பண்பை தியோசபிகல் சொசைட்டி, விரிவுபடுத்தியது.



1909ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இனவெறி அரசுக்கு எதிராக புகார் கொடுக்க காந்தி வந்தார். ஆனால் அம்முறை ஆங்கிலேயே அரசு தந்திரமான முறையில் அவரை எதிர்கொண்டது. இதனால் அவர் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார்.



தென்னாப்பிரிக்கா காந்தி பல்வேறு சோதனைகளை செய்வதற்கான களமாக விளங்கியது. அங்கு செய்து பார்த்ததை இந்தியாவில் பல்வேறு மாற்றங்களுடன் செயல்படுத்தினார். அதில் சில வெற்றிகள், நிறைய தோல்விகளும் உண்டு என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது. காந்தியின் சிந்தனை, செயல்பாட்டிற்கான வழித்தடத்தை இங்கிலாந்தின் லண்டன் நகரமே உருவாக்கியது என்பதில் சந்தேகமே இல்லை.


படம் - ஓபன் வார இதழ் 






கருத்துகள்