சமூக மாற்றம் ஏற்படுத்திய படங்கள் - கிங் ரிச்சர்ட், சக்தே இந்தியா, இறுதிச்சுற்று, ராட்சசி, தங்கல்
சமூக மாற்றம் ஏற்படுத்திய திரைப்படங்கள்
தாரே ஜமீன் பர்
அமோல் குப்தா தனது ஓவிய ஆசிரியரை மனதில் வைத்து படத்தில் வரும் பாத்திரத்தை உருவாக்கியிருந்தார். படத்தில் டிஸ்லெக்சியா குறைபாடு கொண்ட சிறுவன் இருப்பான். அவனுக்கு ஓவியத்திறமை இருக்கும். அதை பள்ளியில் உள்ள கலை ஆசிரியர் ராம் சங்கர் நிகும்ப் கண்டறிந்து அவனை ஊக்கப்படுத்துவார். படம், அறிவுசார் குறைபாடு கொண்டவர்கள், மாற்றுத்திறனாளிகளை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை காட்சிபடுத்தி குற்றவுணர்வுக்கு ஆளாக்கியது.
ஹிச்கி
இதில் ஆசிரியர் பாத்திரத்தை ராணி முகர்ஜி ஏற்றிருந்தார். குறும்பான மாணவர்களின் திறமையை வெளியே கொண்டு வருவதுதான் படத்தின் மையக்கதை. இதில் பிரச்னை என்பது பள்ளியில் உள்ள குறும்பான மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியருகே டூரெட் சிண்ட்ரோம் பாதிப்பு இருக்கும். இந்த குறைபாடு உள்ளவர்கள் பேசுவதில் உடல் மொழியில் வினோத செய்கைகள் இருக்கும். இதோடு ராணிக்கு அவரது அப்பாவுடன் உறவு சீராக இருக்காது. இதையெல்லாம் படம் பேசி ரசிகர்களை கவர்ந்தது.
சூப்பர் 30
கணித ஆசிரியர் ஆனந்த் குமார் பற்றிய படம். நாயகன் பாத்திரத்தை ஹிரித்திக் ரோஷன் செய்திருந்தார். படத்தில் நடனம் ஆடாமல், கிரேக்க கடவுள் போன்ற உடல் அமைப்பை காட்டாமல் கிராமத்து மனிதராக ஹிரித்திக் ரோஷன் நடித்திருந்தார். ஐஐடிக்கு தேர்வாக கிராமத்து மாணவர்கள் 30 பேரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிப்பதே படம். படத்தின் திரைக்கதையை ஆனந்த் குமார் கூறிய திருத்தங்களை செய்து 13 முறை மாற்றியமைத்தபிறகே நாம் பார்க்கும் இறுதி வடிவம் உருவானது.
இறுதிச்சுற்று
சுதா கொங்கரா இயக்கிய படம். படத்தில் மாதவன், சீரியசான பயிற்சியாளராக நடித்திருப்பார். கோபக்கார ஈகோ கொண்ட பெண்ணான ரித்திகாசிங்கைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிப்பார். விளையாட்டு அமைப்புகளில் உள்ள அரசியல், பெண் விளையாட்டு வீரரை உருவாக்குவதில் உள்ள சவால்கள் ஆகியவற்றை இயக்குநர் உறுதியாக பேசியிருப்பார். படம் தெலுங்கிலும் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதில் விக்டரி வெங்கடேஷ் பயிற்சியாளராக நடித்திருப்பார்.
சக்தே இந்தியா
ஷாருக்கானின் சிறந்த நடிப்பில் அனைத்து விளையாட்டு படங்களுக்கான முக்கிய முன்னோடு இதுதான். இந்தியா உலக அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும்போது சக்தே இந்தியா பாடலைப் பாடுவார்கள். பெண்களை ஊக்கப்படுத்தும் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று. படத்தின் வசனம், பாடல், ஷாருக்கானின் நடிப்பு என அனைத்தும் அம்சமாக பொருந்தி ரசிகர்களை ஈர்த்தது.
ராட்சசி
ஜோதிகா நடித்து கல்வி சார்ந்து பரவலாக விவாதிக்கப்பட்ட படம். படத்தில் அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்படுவார். பல்வேறு வசதிகள் இல்லாத பள்ளியை மேம்படுத்தி மாணவர்களின் கல்வித்தரத்தையும் எப்படி உயர்த்துகிறார் என்பதே படம். படத்தைப் பார்த்த மலேஷியா நாட்டு கல்வி அமைச்சர் மஸ்லி பின் மாலிக், படத்தில் வரும் காட்சிகள் எங்கள் நாட்டின் கல்வி நிலைமையைக் கூறுவது போலவே இருக்கிறது என்று கூறினார்.
தங்கல்
ஹரியானாவைச் சேர்ந்த மகாவீர், மல்யுத்த வீரர். ஆனால் பொருளாதார சூழல் காரணமாக போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது போக. மனம் உடைந்து போகிறார். திருமணம் ஆகிறது. பிறக்கும் ஆண் பிள்ளை மூலம் தனது கனவை நிறைவேற்ற நினைக்கிறார். அதுவும் பெண் பிள்ளைகளாக பிறக்க, அவர்களுக்கு மல்யுத்தம் கற்றுத்தந்து சிறந்த வீர ர்களாக்குகிறார். இந்த முயற்சியில் அவருக்கு கிடைக்கும் ஏமாற்றங்களும், பரிசுகளும்தான் மையக்கதை.
2016ஆம் ஆண்டு வெளியான படத்தை நிதேஷ் திவாரி இயக்கியிருந்தார். படம் உண்மையில் உலகமெங்கும் வசூலை வாரிக் குவித்தது.
கிங் ரிச்சர்ட்
வீனஸ் வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸ் டென்னிசில் சாதித்த கதை அனைவருக்கும் தெரியும். கருப்பின வீரர்களான அவர்களின் வெற்றிக்கு பின்னால் உள்ள அவர்களது பயிற்சியாளரான அப்பா பற்றி பேசுகிற படம் இது. பயிற்சியாளராக வில் ஸ்மித் நடித்திருந்தார். இரவில் பயிற்சியாளராக வேலை செய்துவிட்டு பகலில் மகள்களை பயிற்றுவிக்கும் தந்தை தான் ரிச்சர்ட். இவர் மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் அவரது முயற்சி ஏதும் வீண் போகவில்லை.
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக