அப்பாவின் முன்கோபத்தால் திருடனாக மாறும் மகன் - கூண்டா - சிரஞ்சீவி, ராவ் கோபால் ராவ், ராதா

 









கூண்டா 


சிரஞ்சீவி, ராதா, சைகலா நாராயணா 

இயக்கம் - கோதண்டராமி ரெட்டி

இசை கே சக்ரவர்த்தி

கொல்கத்தாவில் தொடங்கும் கதை, ஆந்திரத்தின் ஹைதராபாத்தில் முடிவடைகிறது. கொல்கத்தாவில் காளிதாஸ் என புகழ்பெற்ற நகை கொள்ளையன் தனது வளர்ப்பு தந்தையோடு வாழ்கிறான். வளர்ப்புத்தந்தைக்கு திருட்டுதான் தொழில். அதில் சாதிக்கும்படி காளிதாசுக்கு பயிற்சி கொடுக்கிறார்.அ வனும் வளர்ந்து, வளர்ப்புத்தந்தையின் வணிகத்தை பெருமளவு வளர்த்துக்கொடுக்கிறான். இந்த நிலையில் வளர்ப்புத் தந்தையின் தொழிலை யார் தொடருவது என காளிதாசுக்கும், வளர்ப்புத்தந்தையின் மருமகன் காசிராமுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் தோற்றுப்போகும் காசிராம் காளிதாசை கொலைசெய்ய நேரம் பார்த்து காத்திருக்கிறான். இந்தநேரத்தில் வளர்ப்புத்தந்தை விபத்து ஒன்றில் இறக்க, அங்கிருந்து கிளம்பும் காளிதாஸ் ஹைதராபாத்திற்கு வேலை தேடி வருகிறான். அ்ங்கு எஸ் பி ஒருவரை ரயில் சந்திக்கிறான். அவரை கொல்ல முயல்பவர்களை விரட்டுகிறான். பிறகு அவர் வீட்டில் தங்கி வேலை தேடுகிறான். உண்மையில் அந்த எஸ்பி யார், காளிதாசின் சிறுவயது, அவனது பெற்றோர் யார் என்பதை படம் விவரிக்கிறது. 


மேற்சொன்னபடியும் கதையை விரிவாக சொல்லலாம். சுருக்கமாக, அப்பாவின் முன்கோபத்தால் பாதிக்கப்படும் மகனின் வாழ்க்கை என்பது தந்தி சுருக்கமாக சொல்லலாம். 


சிரஞ்சீவி ஆடல், பாடல், சண்டை என எப்போதும் போல அசத்துகிறார். அவரைத் தாண்டி நடிப்பில் அசத்துவது, அவரின் எஸ்.பி அப்பாவாக வரும் சைகலா சத்யநாராயணா. விதிகளின் படி நேர்மையாக வாழ நினைப்பவர், தனது மகன் ஒரு திருடன் என தெரிந்து பாசமும், காவல்துறை அதிகாரியாக விதிகளும் அவரை தடுமாறச்செய்ய படத்தில் உணர்ச்சிகரமான காட்சிகள் அவை. காவல்நிலையத்தில் தனது மகனை சந்திக்க வந்துவிட்டு அவனை ராஜா என திருட்டு குற்றம் செய்தவனாக அழைப்பது என படத்தில் இவரின் நடிப்புக்கு சில சான்றுகளே உள்ளன. 


சில்க் ஸ்மிதா முதலிலேயே வந்து ஒரு பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆடிவிடுகிறார். பிறகு இறந்துபோகிறார். இதனால் மீதியுள்ள பாடல்களை ராதா பார்த்துக்கொள்கிறார். 


உயிரைக் காப்பாற்றியவன் என்றாலும் கூட எஸ்பியின் வீட்டிலேயே அந்நியர் ஒருவரை தங்க வைப்பார்கள் என்பது நம்பகமாக இல்லை. அதிலும், ராஜா என்ற பெயரில் தான் இருந்தாலும் கூட முன்னர் செய்த திருட்டுகள் கொண்ட கடந்தகாலம் தன்னை நிம்மதியாக இருக்கவிடாது என்பதை அவர் உணராது அங்கேயே தங்குவது பொருந்தவில்லை. சரி, அப்படி தங்கினால்தான் சென்டிமெண்ட், காதல், தம்பி பாசம் என அனைத்துக்கும் ஒத்துவரும். வேறுவழியில்லை அல்லவா? வில்லன்கள் எப்போதும் போல ஆஸ்தான வில்லன்களையே போட்டிருக்கிறார்கள். 


காமெடிக் காட்சிகள் தனியாக இல்லாத குறையை வில்லன்களே தீர்த்து வைக்கிறார்கள். அப்பாவும் மகனும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதுதான் படத்தின் இறுதிக்காட்சி...


பிதாமகன்


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்