குழம்பித்தவிக்கும் மனிதர்களின் மனக்கேணி - கடிதங்கள் - கதிரவன்

 









ஒடிஷாவில் தமிழ்!

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

வானிலை ஆய்வு மையம் அண்மையில் சரியானபடி அறிக்கைகளை வழங்கமுடியாமல் தடுமாறியது. இதற்கான காரணங்கள் என்னவென இந்து தமிழ் திசையில் ஆதி வள்ளியப்பன் எழுதி இருந்தார். ஆனந்தவிகடன் நிருபர்களும் இந்த விவகாரத்தை விளக்கி எழுதியிருந்தனர்.

இதை இரண்டு வாரங்களுக்கு முன்னரே அலுவலகத்தின் லெஜண்ட் ஓவியரிடம் பேசினேன். அரசுக்கு நிறைய விதிமுறைகள் உண்டு. தனிநபர்களுக்கு கிடையாது. அரசு நிறுவனங்களுக்கு பொறுப்பு உள்ளது என ஓவியர் விரிவாகப் பேசினார். உண்மையில் ரேடார், சென்சார் பழுதாகிவிட்டதே உண்மை. அதை அரசு பழுதுபார்க்க முனையவில்லை.

.வியில் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய தமிழ் நெடுஞ்சாலை தொடர் இந்த வாரத்தோடு முடிகிறது. தொடரை முழுவதுமாக படித்துவிட்டேன். ஒடிஷாவில் வேலை செய்யும் தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்ட அதிகாரியின் பணி அனுபவங்கள்தான் தொடரின் மையம். தொடர் சிறப்பாக இருந்தது. தொடரில் ஏராளமான நூல்களை பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். இவர் எழுதிய இரண்டாம் சுற்று என்ற நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன்.

இந்த ஆண்டு உருப்படியாக ஏதேனும் ஒரு நூலை எழுத முயல வேண்டும். எங்கள் நாளிதழ் இனி எப்போது வெளிவரும் என்று உறுதியாக கூறமுடியவில்லை. நன்றி!

அன்பரசு

6.1.2022

மயிலாப்பூர்

---------------------------------------------------------------------

கொரானோவால் அதிகரிக்கும் மனநல பிரச்னைகள்!

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.

நலமா?

இன்று கோபாலபுரம் தபால் அலுவலகத்திற்கு சென்றேன். அஞ்சலட்டை இருப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அடிக்கடி அங்கேயே சென்று வாங்கிக்கொண்டிருந்ததால் கோபத்தில் பொங்கிவிட்டார்களா என்று தெரியவில்லை. இனி உங்களுக்கு எழுத அட்டைகள் ஏதும் மிச்சமில்லை. இதுவே கடைசி. உங்களுக்கு ஒருவகையில் எனது தொல்லையிலிருந்து நிம்மதி கிடைக்கும். அந்திமழை இதழில் நாவல் ஆசிரியர்கள் கதைக்கருவை எப்படி உருவாக்கினோம் என கருத்துகளை பகிர்ந்திருந்தனர். இதழைப் படிக்க சுவாரசியமாக இருந்தது.

தேவன் எழுதிய துப்பறியும் சாம்பு நாவலை மெதுவாகவே படித்து வருகிறேன். எழுதவேண்டிய, படிக்கவேண்டிய விஷயங்கள் மனதில் உள்ளன. அவற்றை செயலாக்க மனதில் விருப்பம் குறைவாகவே உள்ளது. இந்த வாரம் திருவண்ணாமலை போக நினைத்தேன். ஆனால் அங்கு தங்குவதற்கு சரியான இடம் இல்லை. அப்படியிருந்தால் நிலைமை கஷ்டம். எனவே, போகும் முடிவை ஒத்தி வைத்தாயிற்று. அடுத்தவாரம் பொங்கல் விழாவுக்கான கூட்டம் பஸ்சில் கூடிவிடும் என்பதால் அப்போதும் போவது கஷ்டம். ஞாயிறு முழு ஊரடங்கு. இனி இது இப்படியே தொடரும். மனநலன் பிரச்னைகளை குறைபாடுகளை கொரோனா அதிகரிக்கும் என நினைக்கிறேன்.

கணினியில் அழிந்துபோன கோப்பை மீண்டும் எழுதவேண்டும். புதிதாக நூல்களைப் படித்துத் தான் எழுத வேண்டும். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

அன்பரசு

8.1.2022

மயிலாப்பூர்

படங்கள் பின்டிரெஸ்ட் 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்