உங்கள் கதையிலும் நான்தான் ஹீரோ - ஹிஸ்டிரியானிக், நார்ச்சிஸ்ட் பிறழ்வு மனிதர்கள்

 










கல்யாண வீடு என்றால் கல்யாண மாப்பிள்ளை, சாவு வீடு என்றால் பிணம். உங்களுக்கு என்ன புரிகிறது? கல்யாண வீட்டில் பெரும்பாலும் விருந்தினர்கள் மாப்பிள்ளையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இழவு வீடுகளில் இறந்தவரைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். அடிப்படை கான்செப்ட் என்ன? நிகழ்ச்சியின் நாயகன் மாப்பிள்ளை, இன்னொன்றில் இறந்துபோனவரின் உடல். 


இப்படித்தான் ஹிஸ்டிரியானிக், நார்சிஸ்டிக் பர்சனாலிட்டி டிஸார்டர் பாதிப்பு உள்ள நோயாளிகள் நடந்துகொள்வார்கள். பள்ளி, கல்லூரி, கிளப், விடுதி, உணவகம் என எங்குமே தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் நண்பர்களுக்கு ஒரே வேலை, நாயகனுக்கு லாலலா.. பாடுவதுதான். இல்லையென்றால் அவர்களுடன் எளிதாக நட்பை துண்டித்துக்கொள்வார்கள். 


சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சிகள் எதுவும் மேற்சொன்ன குறைபாடு உள்ளவர்களுக்கு பிடிக்காது. அனைத்திலும் புதிய கதைகளை சொல்லி, சில உணர்ச்சிகரமான தன்மையை ஏற்படுத்தி தன்னை அனைவரும் கவனிக்கவேண்டுமென நினைப்பார்கள். இதனால், பிறரை எளிதாக கவனிக்க வைப்பார்கள். செல்வாக்கானவர்கள் தங்களது நண்பர்கள் என காட்டிக்கொள்வார்கள். அப்படி கவனம் கிடைக்காதபோது தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவார்கள். வெறும் மிரட்டல் அல்ல, பிறர் தன்னை கவனிக்காதபோது தற்கொலை செய்து கொண்டுவிடுவார்கள். 


உடை, மேக்கப், நாகரிக உணவு என தன்னை பிறர் கவனிக்க வைக்க நிறைய செலவு செய்வார்கள். இதனால் கடன் தொல்லையில் மாட்டிக்கொள்வார்கள். வேறு வேறு வேலைகளுக்கு மாறுவது இவர்களுக்குப் பிடித்தமானது. ஆனால் அதை அவர்கள் விரும்பி ஏற்று செய்வார்கள் என்று சொல்ல முடியாது. வேலைக்கு மாறுவார்கள் அதில்  சில நாட்களிலேயே ஆர்வத்தை இழந்துதான் வேலை செய்வார்கள். இவர்களின் உணர்வுநிலை மாறிக்கொண்டே இருக்கும். அதை அவர்களது நண்பர்களே கூட அடையாளம் காண்பது கடினம். தனக்கு பயன்படும் என ஒருவரை நினைத்தால் அதற்கேற்ப தகவல்களை மாற்றிச் சொல்லி தங்களை உயரத்தில் வைத்து பார்க்கும்படி நடந்துகொள்வார்கள்.


பிற ஆளுமை பிறழ்வுகளுக்கும், ஹிஸ்டிரியானிக் பிறழ்வுக்குமான வேறுபாடுகள்


பிறரது கவனத்தை கவர்வது, விஷயங்களை மாற்றிச்சொல்லுவது, உணர்ச்சிகளை சட்டென மாற்றுவது, எளிதில் உணர்ச்சிவசப்படுவது ஆகியவை பார்டர்லைன் ஆளுமை பிறழ்வு நோயாளிகளைப் போலவேதான் இருப்பார்கள். ஆனால் பார்டர்லைன் நோயாளிகள் இயல்பாக தன்னை அழித்துக்கொள்ள ஏதாவது வழியில் துடிப்பார்கள். உறவுகளை அறுத்துக்கொள்வார்கள், வெறுமையான உணர்ச்சிகளைக் கொண்டவர்கள். ஆனால் இந்த குணங்கள் ஹிஸ்டிரியானிக் ஆளுமை பிறழ்வால் பாதிக்கப்பட்டவர்களிடம் பார்க்க முடியாது. 


சமூக எதிர்ப்பு ஆளுமை பிறழ்வாளர்களிடம் அதிகாரம், லாபம், பணத்தை அடையும் வெறி, எதிர்பார்ப்பை உருவாக்குவது, மாற்றிப் பேசுவது ஆகியவை இருக்கும். ஹிஸ்டிரியானிக் பிறழ்வாளர்களிடம் வெற்றி, காதல், அன்பைப் பெறத்தான் மாற்றிப் பேசும் முனைப்பு இருக்கும். இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை மாற்றி வெளிப்படுத்திக் காட்டுவார்கள். 


நவீன காலத்தில் பலரும் ஆண்ட்ராய்டும், ஆப்பிளும் கையுமாகத்தான் வெளியுலகிற்கு வருகிறார்கள். பொதுவாக தன்னை மையப்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களும் இவர்களை தங்களது அல்காரிகதம் மூலம் ஊக்கப்படுத்தி வருகின்றன. ஹிஸ்டிரியானிக் பிறழ்வாளர்கள் தனியாக அல்லது குழுவாக சிகிச்சை பெறலாம். தற்கொலை மிரட்டல் தரும் நிலையில் உறுதியாக அவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றே ஆகவேண்டும். சிகிச்சையில் மருத்துவர்கள் ஹிஸ்டிரியானிக் பிறழ்வாளர்கள் தங்களை தாங்களே ஆய்வு செய்துகொள்ள மருத்துவர்கள் உதவுவார்கள். 


படம் பின்டிரெஸ்ட் 





கருத்துகள்