இரண்டு குறைபாடுகளுக்கும் இடையில் -- பார்டர்லைன் டிஸார்டர்

 









நியூரோசிஸ், சைகோசிஸ் ஆகிய குறைபாடுகளுக்கும் இடையில் உள்ளவர்கள் என்ற அடிப்படையில்தான் பார்டர்லைன் பர்சனாலிட்டி டிஸார்டர் என பெயர் உருவானது.  இக்குறைபாட்டை உளவியல் ஆய்வாளர் சிக்மன்ட் பிராய்ட், நியூரோட்டிக் என குறிப்பிட்டார். மேலும் இதனை அந்தளவு ஆபத்தான குறைபாடாக அவர் கருதவில்லை. 


பார்டர் லைன் பர்சனாலிட்டி டிஸார்டர் நோயாளிகளுக்கு, தங்களுக்கு நெருங்கியவர்கள் தன்னை விட்டுவிட்டு போய்விடுவார்கள் என்ற பயம் எப்போதும் இருக்கும். எனவே பயத்திலும், தவிப்பிலும், மன அழுத்தத்திலும் இருப்பார்கள். நண்பர்கள், தோழி, மனைவி என யாராவது வரச்சொல்லிவிட்டு காலதாமதம் செய்தாலோ அல்லது இன்னொருநாள் வருகிறேன் என்று சொன்னாலோ அதை இவர்க ளால் தாங்கிக்கொள்ள முடியாது.  தங்களை காயப்படுத்திக்கொள்வார்கள், தற்கொலை செய்துகொள்ள முயல்வார்கள். பொறுத்துக்கொள்வது என்பதே இவர்களுக்கு தெரியாத ஒரு வார்த்தை. 


கஃபேயில் நண்பர்களின் நண்பர்கள் என அறிமுகமாகும் ஆட்களிடம் கூட பழகுவார்கள். சில மணி நேரத்திலேயே தனது அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்வார்கள். எதிரிலுள்ளவர் அட்டா என்னை இன்ஸ்டன்டாக நண்பராக ஏற்றுவிட்டாரே என மனம் குழைந்தால், விரைவில் அவர் மண்ணில் நரகத்தைப் பார்ப்பார். பார்டர்லைன் ஆட்கள் எளிதாக பழகுவார்கள். ஆனால் அவர்களை யாராவது புறக்கணிப்பதாக தெரிந்தால் ரௌத்திரமாவார்கள். உடனே தன்னை எரிச்சல் படுத்தியவர்களை கண்டபடி வசைபாடுவார்கள், கத்தி கூச்சல் போடுவார்கள். அவமானம், குற்றவுணர்ச்சி என்ற இரு உணர்ச்சிகளும் பார்டர்லைன் நோயாளிகளிடம் கூடுதலாக இருக்கும். 


பத்து சதவீத பார்டர்லைன் நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகிறார்கள். தன்னைத்தானே அழித்துக்கொள்வது இவர்களின் முக்கியமான கோளாறு. படிப்பைக் கைவிடுவது, வேலையை விட்டு விலகுவது, புதிய உறவுகளை, நட்பை தேடுவது, புதிய இடங்களுக்கு செல்வது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரே விஷயத்தை தொடர்ச்சியாக செய்வது கடினம். எளிதாக போரடித்துவிடும் என்பதால் புதிய விஷயங்களைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். வாழ்வதற்காக சாவதற்கும் கூட ரெடி தமிழ் ஹீரோயின்கள் பேசும் வசனம் எல்லாவற்றையும் இவர்கள் செயலாகவே டெமோ செய்து காட்டுவார்கள். 


பெற்றோர் வழியில் பார்டர்லைன் டிஸார்டர் ஏற்படவும் வாய்ப்புள்ளது. நன்றாக பிள்ளையைக் கவனித்தவர்கள் திடீரென விவகாரத்து பெற்று தனித்தனி பாதையில் பயணிக்கும்போது பிள்ளைகளின் மனம் பாதிக்கப்படுகிறது. மனதிற்குள்ளே நல்ல குணம் கொண்ட பாத்திரம், கெட்ட குணம் கொண்ட பாத்திரம் என இரு ஆளுமையாக பிரிக்கப்படுகிறது. இதில் எது சூழலில் வலிமையாக இருக்கிறதோ அதன் அடிப்படையில் பார்டர்லைன் நோயாளிகள் இயங்குவார்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது என்பது இவர்களுக்கு மிகவும் கடினம். சாத்தியமே இல்லாததும்கூட. 


தனக்கு சரியாக பதில் சொல்லாத ஆட்கள், பேசாத ஆட்களை புறக்கணிப்பார்கள். சில  விஷயங்களிலும் இதுபோல நடந்துகொள்வார்கள். 


பிறர் கூறும் விஷயங்களை ஏற்கவே மாட்டார்கள். காது கொடுத்து கேட்டால்தானே உண்மையை அறியலாம். அதற்காக வாய்ப்பையே பிறருக்கு வழங்க மாட்டார்கள். முதலில் புல்டோசர் விட்டு வீட்டை இடித்துவிட்டு பிறகு, வாதங்களை கேட்கும் அரசுகள் போலத்தான். அன்பும், நம்பிக்கையும கொண்ட குடும்ப உறவுகள் இல்லையெனில் பார்டர்லைன் நோயாளிகளை குணப்படுத்துவது, கட்டுப்படுத்துவது கடினம். தற்கொலை எண்ணம் வருவது, உறவுகள் முறிவது ஆகிய சூழலில் பார்டர்லைன் நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது முக்கியம். பல ஆண்டுகளுக்கு சிகிச்சை நீடிக்கும். குழுவாக தெரபி எடுத்துக்கொள்வது சிறப்பானது. 


படம் பின்டிரேஸ்ட் 






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்